


























செங்கல்பட்டு மாவட்டம் கோவளம்-கேளம்பாக்கம் அருகிலுள்ள புதுப்பாக்கம் ஊராட்சியின் இருளர் குடியிருப்பில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக அக்குடும்பங்களின் வீடுகள் மிகவும் மோசமாக பாதிக்கபட்டிருந்தது மே பதினேழு இயக்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், மே பதினேழு இயக்கத் தோழர்கள் 14-12-2022 அன்று அப்பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
நவம்பர் மாதம் கடைசி வாரம் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட புதுப்பாக்கம் பகுதி மக்களின் நிலை குறித்த தகவல் அறிந்து தோழர்கள் சென்று பார்வையிட்டனர். இடிந்து விழக்கூடிய நிலையில் 70-க்கும் மேற்பட்ட கான்க்ரீட் வீடுகள், 40-க்கும் மேற்பட்ட குடிசைகள் அங்கு இருப்பதை கண்டனர். அடுத்து புயல் வரக்கூடியச் சூழலை எதிர்பார்த்திருந்த நிலையில், 30-க்கும் மேற்பட்ட குடில்கள் மேல் போர்த்தப்பட்டிருந்த பாலிதீன் தார்ப்பாலின்களும் கிழிந்த நிலையில் இருப்பதையும் கண்டறிந்தனர்.
இந்நிலையில், அரிசி, வெங்காயம், தார்பாலின்கள், உடைகள் என பல்வேறு நிவாரணப் பொருட்களை தோழர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொண்டு சென்று அப்பகுதியில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டனர். மேலும், மழை வெள்ளத்தால் உடைமைகளை இழந்த பங்கிங்காம் கால்வாயின் கடைக்கோடி ஓடைக்கரையோரம் வசிக்கும் அப்பகுதி சிறார்களுக்கு துணிமணிகள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் சென்று பார்வையிட்டனர்.
அப்பகுதி வாழ் மக்கள், கடந்த முறை சந்தித்ததற்குப் பிறகு வந்த பெருமழையில் மேற்கூரையைத் தாங்கியிருந்த கோல்கள் அனைத்தும் முற்றுமுழுதாக உடைந்திருக்கும் தத்தம் குடில்களை அழைத்துச் சென்றுக் காட்டினர். அந்த சிற்றூரின் உள்ளே சென்று தோழர்கள் பார்த்ததில், மேலும் முப்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் உதவி தேவையிருப்பது தெரிய வந்தது.
மற்றொரு பெரு மழையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்த சூழலில், குளிரில் வாடும் புதுப்பாக்கம் பகுதி மக்கள் குறைந்தபட்சம் பாதுகாப்பான உறைவிடத்தில் வசிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மே பதினேழு இயக்கம் முற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 30 தார்பாலின்கள், அப்பகுதி மக்களுக்கான அடிப்படை உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், துணிமணிகள் போன்றவை உடனடியாகத் தேவைப்படுகின்றன.
இதற்கான பொருளாதாரத் தேவைகளை சந்திக்க மே பதினேழு இயக்கத்திற்கு துணை நிற்குமாறு அனைவருக்கும் கோரிக்கை விடுக்கிறோம். புதுப்பாக்கம் பகுதி மக்களுக்கு உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010