சமூகநீதியை காக்க குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்

கிளாமங்கலம் சாதிய வன்கொடுமை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்த இன்று (02-12-2022) இருதரப்பினரையும் பாப்பாநாடு காவல்நிலையம் அழைக்கப்பட்டிருந்தனர். பிரதிநிதிகள் மட்டும் அழைக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து 10 பேர் வந்திருந்த போது, குற்றமிழைத்தவர்கள் தரப்பில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர். தங்கள் ஆதிக்கத்தை காட்ட வேண்டும், அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும், அமைதி பேச்சு வார்த்தையை நடத்தவிடக் கூடாது என்ற நோக்கமுமே குற்றமிழைத்தவர்கள் திரண்டு வந்ததில் இருந்தது. காவல்துறையினரும் நூற்றுக்கணக்கானோரை எப்படி பேச்சுவார்த்தைக்கு அனுமதித்து என்ற கேள்வியும் எழுகிறது.

மே 17 இயக்கத் தோழர் ராஜேந்திரன் கூட்டத்தை புகைப்பட எடுக்க முயன்ற போது மிரட்டியுள்ளனர். அடிக்கவும் பாய்ந்துள்ளனர். பாதுகாப்பற்ற சூழலில் பேச்சு வார்த்தையை சுமூகமாக நடத்திவிட முடியாது என்பதை உணர்ந்து தோழர் அரங்க குணசேகரன் மற்றும் ஊர் மக்கள் தோழர்களுடன் அவ்விடத்திலிருந்து வெளியேறினர். பின்னர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் அரங்க குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட ஊர்மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஊர் மக்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டுமென காவல்துறையினரிடம் வலியுறுத்தப்பட்டது. நீதி கிடைக்கும் வரை மே பதினேழு இயக்கம் மக்களுடன் களத்தில் நிற்கும் என தோழர் திருமுருகன் காந்தி ஊர் மக்களிடம் உறுதியளித்தார்.

இப்பிரச்சனையின் ஆரம்பம் முதலே காவல்துறையினர் குற்றமிழைத்த ஆதிக்க சாதியினருக்கு சார்பாக செயல்பட்டு வருகின்றனர். இது பட்டியல் சமூக மக்கள் மீதான சாதிய தீண்டாமையை ஊக்குவிப்பது போல் அமைந்துவிடக் கூடும் என்று திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து எச்சரிக்கிறோம். அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். சமூகநீதியை காக்க திமுக அரசு முன்வர வேண்டும்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply