நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகள் நோக்கி உழவர்கள் பேரணி! அனைவரும் பங்கேற்க அறைகூவல் விடுக்கிறோம்! – மே பதினேழு இயக்கம்
வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர்கள் போராட்டத்தின் இரண்டாம் ஆண்டை குறிக்கும் விதமாகவும் மோடி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் 26-11-2022 அன்று நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக உழவர்கள் அமைப்பு அறிவித்துள்ளது. இதனை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது. இந்த பேரணியில் முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம்.
அம்பானி-அதானி லாபமடையும் வகையில் வேளாண் தொழிலை கார்ப்பரேட்மயமாக்கும் வண்ணம் மோடியின் தலைமையிலான பாஜக அரசு அரசு கடும் எதிர்ப்புகளுக்கிடையே மூன்று உழவர் விரோத வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள உழவர்கள் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை துவங்கினார். ஓராண்டிற்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தின் விளைவாக அந்த 3 சட்டங்களை திரும்பப் பெற்றதோடு, உழவர்களின் முக்கிய கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றுவதாக மோடி அரசு உறுதி அளித்திருந்தது.
ஆனால், போராடிய உழவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறாதது, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யாதது, மின்சார மசோதாவை திரும்பப் பெறாதது என எழுத்துப்பூர்வமாக மோடி அரசு உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மீறி வருகிறது. போராட்டம் துவங்கிய இரண்டாம் ஆண்டை குறிக்கும் வகையிலும், போராட்டத்தின் ஓராண்டு வெற்றியை கொண்டாடும் வகையிலும், மோடி அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், நவம்பர் 26 அன்று நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளை நோக்கி பேரணி சென்று, குடியரசுத்தலைவரிடம் கொண்டு செல்ல ஆளுநரிடம் மனு அளிக்க உழவர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய விவசாயிகள் முன்னணி (Samyukt Kisan Morcha) உழவர்களை அழைத்துள்ளது.
‘கடனிலிருந்து விடுதலை, முழு லாப விலை (freedom from indebtedness and full remunerative price)’ உள்ளிட்ட உழவர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்ல வேண்டுமென உழவர்களின் இந்த ஆளுநர் மாளிகைகள் நோக்கிய பேரணியை மே பதினேழு இயக்கம் வாழ்த்தி வரவேற்கிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் இந்த பேரணிக்கு ஆதரவளித்து பங்கேற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010