‘மானமும், அறிவும் மனிதற்கு அழகு’ என்றுரைத்த தந்தை பெரியார் அவர்களின் 144-வது பிறந்தநாளில் (செப் 17, 1897) தமிழினத்தின் உரிமைகளை மீட்க உறுதி ஏற்போம்!

‘மானமும், அறிவும் மனிதற்கு அழகு’ என்றுரைத்த தந்தை பெரியார் அவர்களின் 144-வது பிறந்தநாளில் (செப் 17, 1897) தமிழினத்தின் உரிமைகளை மீட்க உறுதி ஏற்போம்! – மே பதினேழு இயக்கம்

“பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இப்பகுத்தறிவில் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்”
– தந்தை பெரியார் அவர்கள், விடுதலை 1973

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவராலும் பகுத்தறிவு பகலவன் என்றும், சுயமரியாதை சுடர் என்றும் அன்போடு அழைக்கப்படும் தந்தை பெரியார் அவர்களது பெரும் பணியை ஓரிரு பக்கங்களில் விளக்கி விடுவது முடியாத காரியமே. சாதிக்கு எதிராகவும், மத-சாஸ்திர புரட்டுகளுக்கு எதிராகவும், பெண் அடிமைத்தனத்திற்கு எதிராகவும், மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும், உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டி பிழைக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் தன் வாழ்நாளின் இறுதி மூச்சு வரையிலும் போராடி தமிழர் பெருநிலத்தின் தன்மானம் காக்கவும், சமூகநீதி நிலைபெறும் உறுதியாக நின்றவர் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்.

இந்த மண்ணில் வந்தேறி குடியமர்ந்த ஆரிய பார்ப்பன பழமைவாத கும்பலுக்கு எதிராக திராவிட சித்தாந்தத்தை முழுமைப்படுத்தி இந்திய ஒன்றியத்திலேயே ‘சாதிப் பின்னொட்டுகளை தங்கள் பெயரோடு சேர்த்துக் கொள்ளப் போவதில்லை’ என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் தன்னிச்சையாக முடிவெடுக்க வைத்த பெரியாரின் பேரூழைப்பால் தமிழ்நாடு இன்றளவும் பெரியார் மண் என்றே அழைக்கப்படுகிறது.

பெரியாரின் முதன்முதல் எதிரி சாதிதான் என்று சொன்னால் அது மிகையாகாது. “சாதியின் கொடுமையால், நாற்றமெடுத்த மலத்தை விட மனிதன் கேவலப்படுத்தப் படுகிறான் (திராவிடன்-1929)” என்று மனம் வேதனைப்பட்ட அவர் தந்தை பெரியார் அவர்கள், “சட்டத்தால் சாதியை ஒழிக்க முடியாது (விடுதலை-1960)” என்று அறுதியிட்டு கூறி, “சாதியை ஒழிக்க விரும்புவோர் மேடைப் பிரசங்கம் மட்டும் செய்தால் போதாது, சுயசாதி திருமணத்தை அறவே ஒழித்து கலப்புத் திருமணத்தை மட்டுமே செய்ய வேண்டும் (விடுதலை-1947)” என்றும் சாதி ஒழிப்பிற்காக வழிவகை செய்தார். இன்றளவும் அதனடிப்படையிலேயே வேத சடங்குகள் மறுத்த சுயமரியாதைத் திருமணங்கள் பெரியாரிய தொண்டர்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

சாதி பெரியாருக்கு முதல் எதிரி என்றால், அந்த சாதி அமைப்பையும் அதன் வழியே ‘சக மனிதர்களை தொடக்கூடாது, பார்க்கக் கூடாது, அவர்களது மூச்சுக்காற்று கூட தங்கள் மீது படக்கூடாது’ என்ற அளவிற்கு தீண்டாமையை கடைபிடிக்கவும் காரணமாய் அமைந்து இருக்கும் இந்து மதமும், அம்மதத்தின் தலைமை இடத்தில் அமர்ந்துகொண்டு சாதிய அடுக்குகளை காப்பாற்றிக் கொண்டிருக்கும் பார்ப்பணியமும் அடுத்த எதிரி. சாதியை ஒழிக்கும் வழி முறையில் முதன்மையானது இந்து மதத்தை ஒழிப்பதே என்பதில் உறுதியாக இருந்த பெரியார் “இந்து மதம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும்; இந்து மதம் ஒழிந்தால் பார்ப்பனியமும் அதே நேரத்தில் ஒழிந்துபோகும் ( விடுதலை-1947)” என்று அறுதியிட்டுக் கூறுகிறார். அதோடு நில்லாமல் “சாதிக்கு அடிப்படையாக இருப்பது எது? இந்து மதம். அதை ஆதரித்து நிற்பவை எவை? இதிகாசம், சாஸ்திரம், புராணம் முதலிய கட்டுக்கதைகள். இவைகளுக்கான அடிப்படையாக உள்ளவை எவை? இந்துமதக் கடவுள்கள் என்று கூறப்படும் முழுக் கற்பனைகள் (விடுதலை-1947)” என்றும் கூறுகிறார்.

இன்றளவும் இந்திய ஒன்றியம் முழுவதும் கலவரங்களை உருவாக்கவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான சமூக விரோத செயல்களை முன்னெடுக்கவும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளால் நடத்தப்படுகின்ற ‘விநாயகர் சதுர்த்தி’ என்ற விழாவைப் பற்றி கடுமையாக கண்டித்து தன் காலத்திலேயே பேசியவர் தந்தை பெரியார் அவர்கள். குறிப்பாக இந்துத்துவவாதிகள் விநாயகர் சதுர்த்தி முன்னெடுக்கப்படும் அதே நாளில் திராவிடர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடும் பொழுது “தமிழ்நாடெங்கும் புத்தர் விழா கொண்டாடி, வருணாசிரமவாதிகள் பெரும்பாலும் ‘மூல தெய்வம்’ என்று கருதுகின்றபடியாக உருவாக்கியிருக்கும் செயற்கை உருவ கணபதி அறிகுறியை மக்கள் உள்ளத்திலிருந்து அழித்துவிடவேண்டும் என்று திராவிடர் கழகத் தோழர்களை, குறிப்பாக இளைஞர்களை வேண்டிக்கொள்கிறேன் (விடுதலை-1953)” என்று தன் உள்ளக் கிடக்கை வெளிப்படுத்துகிறார்.

சாதி மதம் இரண்டுக்கும் அடுத்தபடியாக பெரியார் முக்கியத்துவம் கொடுத்தது பெண்ணடிமை ஒழிப்பு இருக்கும், பெண் கல்விக்கும் என்று சொன்னால் மிகச் சரியாக இருக்கும். “பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல் சாதிக்காரன் கீழ் சாதிக்காரனை நடத்துவதை விட, பணக்காரன் ஏழை நடத்துவதை விட, எஜமான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும் (குடியரசு-1931)” என்று மன வேதனைபடும் பெரியார் அவர்கள், “ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் சேவைகளையும் பெண்களாலும் செய்ய முடியும் என்பேன் (குடியரசு-1946)” என்று பெண் விடுதலைக்கான முழக்கத்தை எழுப்புகிறார்.

ஒட்டுமொத்த திராவிட சமூகத்திற்குமே கல்வி என்பது அடிப்படை உரிமை என்றும், அதுவே தன்மானம் காக்கும் தன்னிகரில்லா கருவி என்றும் உறுதிபடக் கூறி வரும் பெரியார், பெண்களுக்கான கல்வியை மேலும் பன்மடங்கு வலியுறுத்தி பேசுகிறார். “தனி உரிமை உலகில், பெண்கள் சுதந்திரம் வேண்டும் என்பவர்கள் பெண்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் தங்கள் ஆண் பிள்ளைகளை லட்சியம் செய்யாமல் பெண்களுக்கு செலவு செய்து படிக்க வைக்க வேண்டும். வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக் கொடுக்க வேண்டும். தாய் தகப்பனார் பார்த்து ஒருவனுக்கு பிடித்துக் கொடுப்பது என்று இல்லாமல் பெண்ணாகவே பார்த்து தகுந்த வயதும் தொழிலும் ஏற்பட்ட பிறகு ஒருவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும் (குடியரசு-1936)” என்ற பெரியாரின் கூற்றுகளின் வழியே பெண்கல்விக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

பெரியார் மீது அவதூறு கூறும் பலரும் ‘பெரியார் பொருளாதாரப் பார்வை கொண்டவர் அல்ல’ என்பதுபோல் கருத்துக் கூற கேட்டிருக்கலாம். ஆனால் பெரியார் அவர்கள் இந்திய ஒன்றியத்தின் சாதிய சமூகத்தில் நிலவி வரும் பொருளாதார தன்மையையும், இச்சமூகத்தில் எவ்வாறு சமதர்மத்தை நிலை நிறுத்த முடியும் என்பதையும் நன்கு உணர்ந்தே தன்னுடைய எழுத்துக்களில் மிக கவனமாக பொருளாதார தீர்வுகளையும், சமதர்ம தீர்வுகளையும் முன்வைத்துள்ளார். “நமது நாட்டில் சமூக துறையிலேயே, பிறவியிலேயே பொருளாதார உரிமை அநேக மக்களுக்கு தடுக்கப்படுகிறது. புரோகிதன், உத்தியோகஸ்தர், வக்கீல், வியாபாரி, முதலாளி ஆகியவர்களின் கூட்டத்திற்குத்தான் பொருளாதார உரிமைகள் இருக்கிறதே ஒழிய, மற்ற மக்களுக்கு வயிற்றுக்கு எவ்வளவு வேண்டும் என்கிற அளவுக்கு உட்பட்ட அடிமை உரிமை தானே இருந்து வருகிறது. முற்கூறிய கூட்டங்களுக்கு பொருளாதார உரிமை என்பது பிறவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதுடன் மற்றவர்களுக்கு அதற்கு அருகரில்லாமல் இருக்கும் படியான நிர்ப்பந்தங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. (குடியரசு-1931)” என்று பெரியார் கூறுகிறார்.

பொதுவுடமை தன்மைகொண்ட கூட்டுறவு முறைகளை முன்னிறுத்தியே எப்பொழுதும் பேசி வந்த தந்தை பெரியார் அவர்கள், இம்முறைக்கு எடுத்துக்காட்டாக கூறுவதும் பொதுவுடமை அரசியலை முன்னிறுத்தி ஆட்சி செய்த ரஷ்ய ஒன்றியத்தை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ரஷ்ய ஒன்றியத்திற்கும், இந்திய ஒன்றியத்திற்கும் இடையிலான சமூக கட்டமைப்பு படிநிலை வேறுபாடுகளையும், அதன் பண்பு மாற்றங்களையும் மனதில் கொண்டு வருண ஒழிப்பு போராட்டத்தை முன் எடுக்காமல் வர்க்கத்தை மட்டும் ஒழிப்பதன் மூலம் இங்கு சமதர்மத்தை நிறுவி விட முடியாது என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தார்.

“முதலாளி தொழிலாளி என்ற முறையும் வர்ணாசிரம தர்மம் முறையில் பட்டது என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த முறையில்தான் இப்பொழுது நமது நாட்டில் மஞ்சள் புரோகிதர்களும், மஞ்சளும் கறுப்பும் கலந்த அரசர்களும், ஜமீன்தார்களும், வியாபாரிகளும் இருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் (குடியரசு-1931)” என்று எடுத்துரைக்கிறார்.

பட்டியல் சமூக மக்களின் விடுதலையே சாதி ஒழிப்பில் முக்கிய பங்கு என்பதை பலமுறை முன்னெடுத்து பேசி வந்த தந்தை பெரியார் அவர்கள் “உத்தியோகம் கல்வி முதலிய விஷயங்களில் ஆதிதிராவிடர் என்பவர்களுக்கு தனிச் சலுகை காட்டி சீக்கிரத்தில் நம்மோடு சரி சமத்துவம் அடையும்படியான நிலைமையை ஏற்படுத்த வேண்டியது நமது கட்சியின் தனிப்பட்ட கடமைகளில் ஒன்று (குடியரசு-1940)” என்று முழங்கியவர் தந்தை பெரியார் அவர்கள். கோயில் வளாகங்களில் மட்டும் பட்டியல் சமூக மக்கள் அனுமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளாத பெரியார் அவர்கள், கோயில் கருவறைக்குள்ளும் அவர்கள் செல்ல வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசி வந்தார். “கோயில் நுழைவுவால் உங்கள் பாமரத் தன்மை போய்விடுமா? இழிவு போய்விடுமா? ஆகவே உறுதியோடு கேளுங்கள், பார்ப்பனர் மட்டும் ஏன் அந்த சாமிக்கு பூஜை செய்துவர வேண்டும்? நான் மட்டும் ஏன் அவிழ்த்துக் கொடுத்து விட்டு அப்பால் வர வேண்டும்? கோயில் கட்டிடத்துக்குள் வந்தால் சாமி சாகவில்லையே.. இனி அந்த கற்ப அறைக்குள் போனால் மட்டும் எப்படி சாகும் என்று.! (விடுதலை 1948)” என்று பட்டியல் சமூக விடுதலைக்காக போராடியவர் தந்தை பெரியார் ஆவார்.

இன்றளவும் இந்திய ஒன்றியத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இன்னபிற சமூக வளர்ச்சி குறியீடுகளும் தமிழ்நாடு தனித்து விளங்குவதற்கு பெரியாரின் வாழ்நாள் உழைப்பு முதன்மை காரணம் என்றால் அது மிகையாகாது. தமிழ்நாட்டின் கடைசி கருப்புச் சட்டைக்காரர் இருக்கும் வரையில் ஆர்எஸ்எஸ் போன்ற பாசிச சக்திகளை தடுக்கவும், சாதி-மதத்திற்கு எதிரான புரட்சிக் குரல் எழுப்பவும் தயங்கமாட்டார் என்பதனாலேயே தமிழ்நாடு தன்னை பெரியார் மண் என்று பெருமையுடன் அழைத்துக் கொள்கிறது. அதன் காரணமாகவே தந்தை பெரியாரும் புரட்சியாளர் என்று அழைக்கப்படுகிறார்.

பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடரொளி புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்த நாளில் சாதி, மத, பெண்ணடிமை இழிவுகள் நீங்க, சமூகநீதி, சமநீதி, சமத்துவம் மலர உழைப்போம் என்றும், அவரது வாழ்நாள் முழக்கமான ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை சமரசமின்றி முழங்குவோம் என்றும் உறுதி ஏற்று மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply