கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாளில் (செப்டம்பர் 5, 1872) புகழ் வணக்கம் செலுத்துகிறோம்!

ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு அடங்க மறுத்து, ஆங்கிலேய அரசுக்கு எதிராக கப்பல் தொழில் தொடங்கி சிறைபட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாளில் (செப்டம்பர் 5, 1872) புகழ் வணக்கம் செலுத்துகிறோம்! – மே பதினேழு இயக்கம்

‘சாதியெனும் பொய்க்கொண்டுந் தன்சமயப் பேய்கொண்டு
மாதினது நோய்கொண்டும் வாழுயிர்க – ளாதி
மகவென்று நோக்காது மாணாத செய்வர்
தகவென்றும் பேணா தவர்’
– வ.உ.சி அவர்கள், மெய்யறிவு-74

(பொருள்: பெருமை மிகுந்த வாழ்வை பேணாதவரே, சாதி மதம் போன்றவற்றை கடைபிடித்து அனைவரும் ஒரு ஆதியில் பிறந்தவர்கள் என்பதை மறந்து வாழ்வார்)

தமிழக வரலாற்றில் கப்பலோட்டிய தமிழர் என்றும், செக்கிழுத்த செம்மல் என்றும் புகழாரம் சூட்டப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்கள் தமிழர்களின் வீரத்திற்கும், அறத்திற்கும், ஆதிக்க எதிர்ப்பு குணத்திற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். பெரும் செல்வந்தராகவும், வழக்கறிஞராகவும் இருந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள், ஆலைத் தொழிலாளர்களின் நேர்மையான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடிய காரணத்திற்காகவும், ஆங்கிலேயே ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக இந்தியா-இலங்கை இடைப்பட்ட தமிழர் கடற்பகுதியில் கப்பல் செலுத்தி தற்சார்பான பொருளாதாரத்தை முன்னெடுத்த காரணத்திற்காகவும் ஆங்கிலேய காலனி அரசால் கைது செய்யப்பட்டு கொடுமைக்கு உள்ளானவர். தன் இறுதி காலத்தில் ஏழ்மையின் பிடியில் இருந்தபோதும் வ.உ.சிதம்பரனார் அவர்கள் ஒருபொழுதும் தனது விடுதலை வேட்கையை விட்டுக்கொடுத்ததில்லை.

1906-ம் ஆண்டு ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்ற பெயரில் அவர் தொடங்கிய சரக்குகள் கப்பல் போக்குவரத்து நிறுவனம் அதுவரை அன்றைய ஆங்கிலேய இந்திய ஒன்றியத்தில் எந்த ஒரு தனி நபரும் முன்னெடுக்காத ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையாகும். அந்த கப்பல் நிறுவனத்தை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று உள்ளூர் பங்குதார்களும், ‘தங்கள் இலாபம் பறிபோகிறது எனவே இந்நிறுவனத்தை அழித்துவிடவேண்டும்’ என்று ஆங்கிலேய முதலாளிகளும் பெரும் முயற்சியை எடுத்த பொழுதும் அந்த நிறுவனம் வெற்றிகரமாக பீடு நடை போட்டது என்றால் அது வ.உ.சிதம்பரனார் அவர்களின் இடையறாத உழைப்பினால் மட்டுமே.

நேரடியாகவோ, மறைமுகமாகவோ வ.உ.சிதம்பரனார் அவர்களை மிரட்டுவது மூலம் நம்மால் இந்நிறுவனத்தை மூட இயலாது என்பதை ஆங்கிலேய முதலாளிகள் புரிந்து கொண்டனர். எனவே கயமைத்தனமாக வ.உ.சிதம்பரனார் அவர்கள் முன்நின்று நடத்திய அரசியல் கூட்டம் ஒன்றில் காவல்துறையை ஏவி துப்பாக்கிச்சூடு நடத்தியதன் மூலம் அப்பாவி மக்களை பலி கொண்டனர். மேலும் வ.உ.சிதம்பரனார் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு இரண்டு ஆயுள் தண்டனைகள் தரப்பட்டன. ஓர் அரசியல் கைதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை தந்தது இதுவே உலக வழக்கில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு ஆங்கிலேயர்களின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்திருந்தது வ.உ.சிதம்பரனார் அவர்களின் கப்பல் நிறுவனம்.

இதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி பகுதியில் அப்பொழுது இயங்கி வந்த கோரல் மில் என்ற நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆங்கிலேயே முதலாளிகளால் மிகக் கடுமையாக சுரண்டப்படுவதை அறிந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள் முன்னிலை ஏற்க, 1908-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ‘ஆங்கிலேயர்களுக்கும், அல்லது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருக்கும் வேறு யாருக்கும் முடிதிருத்தவோ முகச்சவரம் செய்யவோ மாட்டோம்’ என முகச்சவரம் தொழிலாளர்களால் முடிவெடுக்கப்பட்டது.

“இரங்கசாமி ஐயங்கார் என்னும் ஆங்கிலேயே ஆதரவு நிலைகொண்ட பார்ப்பனர், முகச்சவரம் செய்துகொள்ள வந்தபொழுது ‘கோரல் மில் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆங்கிலேயே அரசு சிறப்பு காவல்துறையை வரவழைத்திருக்கிறது’ என்ற செய்தியை கூறி ‘போராட்டம் மிக விரைவில் ஒடுக்கப்படும்’ என்று அதிகாரத் திமிருடன் பேசிய காரணத்திற்காக அவரது முகச்சவரத்தை பாதியில் நிறுத்திவிட்டு அத்தொழிலாளி சென்று விட்டார்” என்ற செய்தி பத்திரிக்கைகளில் வரும் அளவிற்கு இப்போராட்டம் வீரியம் அடைந்து இருந்தது. வேறு வழியில்லாமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய இடத்திற்கு ஆங்கிலேய முதலாளிகள் தள்ளப்பட்டனர்.

இதுபோன்ற காரணங்களுக்காகவே பொய் வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள், திருநெல்வேலி, கோயமுத்தூர், கண்ணனூர் ஆகிய சிறைகளுக்கு அலைக்கழிக்கப்பட்ட வேலையில் தான், அவரது மன உறுதியை உடைக்க மாடுகளால் இழுக்கப்படும், செக்கை இழுக்க செய்ய ஆங்கில சிறை அதிகாரிகள் கட்டளையிட்டனர். அந்நிகழ்வை பற்றி தனது தன்வரலாற்றில்,

“திங்கட் கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான். உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப்
பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன், அவனுடை அன்புதான் என்னே !”

என்று பாடி வெளிப்படுத்துகிறார் வ.உ.சி அவர்கள்.

ஆனாலும் சிறையில் ஒருபோதும் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடவில்லை. ஆங்கிலேய ஆதரவு ஏற்கவும் இல்லை.

காட்சன் என்கின்ற ஆங்கிலேய சிறை அதிகாரி வ.உ.சி. அவர்களிடம் ‘கான்விக்ட் வார்டன்’ என்கிற சிறை கைதியே காவலர் பணியை செய்யும் கங்காணி வேலையை அவருக்கு தருவதாகவும், அதை ஏற்றுக்கொள்ளும் தருணத்தில் அவரது சிறை தண்டனை ஆண்டில் ஒவ்வொரு வருடமும் மூன்று மாதம் குறையும் என்றும், உறவினர்களை சந்திப்பதும், அவர்களுக்கு கடிதம் எழுதவும், பெறவும் எளிமையாக இருக்கும் என்றும், மாத விடுப்பு கிடைக்கும் என்றும், அதற்கும் மேலாக நல்ல உடையும் உணவும் கிடைக்கும் என்றும் கூறியபொழுது, “நான் சிறை வந்தது சிறை அதிகாரிகளின் கையாளாக பணியாற்ற அல்ல” என்று அவ்வேலையை மறுதலித்து தனது முழு தண்டனையும் அனுபவிக்க தயாராகவே இருந்தார் என்றால் அவரது மன உறுதி எத்தகையது என்பதை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

வ.உ.சி. அவர்களின் ஈகம் திட்டமிட்டு தமிழ்நாட்டில் மறைக்கப்பட்டதில் ஆரிய பார்ப்பனக் கும்பலுக்கு பெரும்பங்குண்டு. வ.உ.சி அவர்கள் தொழில் தொடங்கிய காலத்திலிருந்தே ஆரியப் பார்ப்பனர்கள் அவருக்கு எதிராகவும் அவர் மீது பொறாமையும் கொண்டிருந்தனர் என்பதை அவருடைய சுய சரிதையில் இருக்கும் பின்வரும் வரிகளிலிருந்து கண்டுகொள்ள முடியும்.

“பொருடந்த சிற்சிலர் பொறாமைமேற் கொளீஇ
நம்மில் எளியன் நம்மிற் சிறியன்
தம்மினும் புகழினை நண்ணுதல் என்னோ?
அவனை ஒழித்தெலாம் ஆள்வேம்’ என்றே
எமனவர் போல என்மேல் வந்தனர்.”

என்று எழுதிய இந்த வரிகளில் மேற்குறியிட்டு ‘இப் பொறாமை கொண்ட நபரின் பெயராக’ அவரது சுயசரிதையில் ‘நெல்லை பகுதியில் வழக்கறிஞராக இருந்த குருசாமி அய்யர் முதலானோர்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

வ.உ.சிதம்பரனார் அவர்கள் முன்னெடுத்த கப்பல் நிறுவன தொழிலானாலும் சரி, கோரல் மில் போராட்டம் ஆனாலும் சரி ஏகாதிபத்திய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டவை. தன் சொந்த மண்ணின் வளங்கள் அன்னியரால் கொள்ளையடிக்கப்படுவதை கண்டு மனம் பொறுக்காமல் அதை முறியடிக்க வ.உ.சிதம்பரனார் முன்னெடுத்த வேலை திட்டங்களால் அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். அவருக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டதை அறிந்த கணத்திலிருந்து தன் இறுதி காலம் வரை அவரது மனைவி மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். சிறை மீண்ட பின் கடும் ஏழ்மையில் சிக்கிக் கொண்டிருந்தார் வ.உ.சிதம்பரனார் அவர்கள். ஆயினும் தன் இறுதி காலத்தை தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் அர்ப்பணித்து பெரும் பணிசெய்து தமிழர் வரலாற்றில் அழியாப் புகழை பெற்றுச் சென்றார்.

வ.உ.சி அவர்களின் தமிழ்த் தொண்டும் அளப்பரியதே. தமிழில் திருக்குறளின் அறக்கருத்துக்களை ‘வலிந்து பொருள் திரித்து’ சிதைத்த பரிமேலழகரின் உரைக்கு மாற்றாக மற்ற உரையாசிரியர்களின் உரைகளை தேடிச்சென்று இறுதியாக மணக்குடவரின் அறத்துப்பால் உரையினை முதலில் பதிப்பித்தவர் வ.உ.சி அவர்களே. அதன்பின் அவரே திருக்குறளுக்கு உறையும் எழுதினார். அவரது கூற்றுபடி திருக்குறளின் முதல் நான்கு அத்தியாயங்களும் பின்னால் சிறப்புப்பாயிரமாக எழுதி இணைக்கப்பட்டுள்ளது என்றும், அவை திருவள்ளுவாரால் ஆக்கப்பட்டதல்ல என்றும் பொருளாகிறது. திருக்குறள் உரை மட்டுமல்லாமல் பல்வேறு பாக்களையும், மொழிபெயற்புகளையும் தமிழுக்கு தந்தருளிச்சென்றுள்ளார்.

தனிதமிழின் மீது பெரும் பற்று கொண்ட வ.உ.சி அவர்கள், தமிழில் இருந்து வடமொழியாம் சமசுகிருத சொற்கள் நீக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். “சமஸ்கிருத சொற்களை உபயோகிக்க நேரும் இடங்களில் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு சொற்களையும், அவற்றின் பக்கங்களில் அவற்றுக்குரிய சமஸ்கிருத சொற்களையும் உபயோகித்து தற்கால தமிழ் நாட்டில் வழங்கி வரும் சமஸ்கிருத சொற்களுக்கு எல்லாம் சரியான தமிழ்ச் சொற்களை நம் தமிழ் மக்களுக்குக் கற்பித்து, நாளடைவில் சமஸ்கிருத சொற்களை தமிழில் இருந்து வேரோடு களைந்து விடலாம்” என்று 1915-ஆம் ஆண்டு குமரி மலரில் எழுதி இருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ் மொழிக்கு என்று ஒரு தனிநிலப்பரப்பு இருக்கவேண்டும் என்ற அவாவும் அவருக்கு இருந்திருக்க கூடும் என்பதை அவருடைய மெய்யறம் என்ற பாத்தொகுப்பில் 76-வது அதிகாரமாகிய நாடு என்ற தலைப்பில் ‘ஒரு மொழி வழங்குவ தொருதனி நாடு’ என்ற யாப்பில் இருந்து புரிந்து கொள்ளலாம். இங்கனம் தமிழின்பாலும், தமிழ்நாட்டின் பாலும் அன்பு கொண்டவராக விளங்கியவர் வ.உ.சி. அவர்கள்.

ஏகாதிபத்திய எதிர்ப்பும், தற்சார்பு பொருளாதார செயல்திட்டமும் முன்நிறுத்திய தொழிலாளர் உரிமைகள் போராளியும், தமிழ்ப்பற்றாளருமான வ.உ.சிதம்பரனார் அவர்கள் பிறந்த நாளான இன்று மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply