பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் தலைவர் தோழர் க.கா.இரா.இலெனின் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்! – மே பதினேழு இயக்கம்
பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் தலைவரும் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுடன் இணைந்து செயல்பட்டவருமான தோழர் க.கா.இரா.இலெனின் அவர்கள் 02-09-2022 அன்று மறைவுற்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. உழவர்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரமான வேளாண்மைக்கும் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் களம் கண்டவர் தோழர் இலெனின். அவரது மறைவு தமிழ்த்தேசியத்திற்கு பேரிழப்பாகும்.
தமிழ்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய, தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடிய திட்டங்களை எதிர்த்து மக்களுடன் களத்தில் நின்று போராடியவர் தோழர் இலெனின். காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போது அத்திட்டங்கள் கைவிடப்படும் வரை அதனை எதிர்த்து கடுமையாக போராடியவர். தஞ்சை காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ் நாடு அரசு அறிவிப்பதற்கு தோழர் இலெனின் அவர்களின் போராட்டம் பெரும் அழுத்தத்தை கொடுத்தது என்பது மிகையல்ல.
நியூட்ரினோ திட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம், சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டம், துறைமுகங்களை அதானியிடம் வழங்குவது, ஓஎன்ஜிசி திட்டங்கள் என பல எதிர்ப்பு போராட்டங்களில் முன்நின்றவர். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து மிகப்பெரிய அளவில் மனித சங்கிலி போராட்டத்தை ஒருங்கிணைத்தவர். நியூட்ரினோ எதிர்ப்பு கூட்டமைப்பில் முக்கிய பங்காற்றியவர் தோழர் இலெனின்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி மறைந்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் இயற்கை வேளாண்மை உரிமைகளுக்கான போராட்டத்தில் உடன் நின்றவர். இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய தீவிர செயற்பாட்டாளர். தமிழ்நாட்டின் நிலத்தையும், இயற்கை வளங்களையும் காக்க தொடர்ந்து போராடியவர்.
மே பதினேழு இயக்கத்தின் பல போராட்டங்களுக்கு ஆதரவளித்து பங்காற்றியவர் தோழர் இலெனின். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாததாகும். தோழர் இலெனின் அவர்கள் விட்டுச்சென்ற பணியினை முன்னெடுத்துச் செல்வதே அவருக்கு செலுத்தும் சிறந்த புகழ்வணக்கமாக இருக்கும். தோழரை இழந்து வாடும் தோழர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010