ஓ.என்.ஜி.சி. தொழிலாளர்கள் நலன் என ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க முயலும் தொழிற்சங்கங்கள்! ஓ.என்.ஜி.சி.-க்கு ஆதரவான நிலைப்பாட்டை உடனடியாக கைவிட வேண்டும்! –

ஓ.என்.ஜி.சி. தொழிலாளர்கள் நலன் என ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க முயலும் தொழிற்சங்கங்கள்! ஓ.என்.ஜி.சி.-க்கு ஆதரவான நிலைப்பாட்டை உடனடியாக கைவிட வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை காவிரி டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பல ஆண்டுகளாக கச்சா எண்ணெய் எடுக்கும் துரப்பணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் வேளாண் நிலங்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு விளைநிலங்கள் பாழ்பட்டுப் போவதால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கடுந்துயரம் அடைந்து வருகின்றனர். வாழ்வாதாரம் அழிந்துபோவதை தடுக்க ஓ.என்.ஜி.சி.-யின் துரப்பணப் பணிகளுக்கு எதிராக கடும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒன்றிய அரசு காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை அறிவிக்க, அதனால் ஏற்படும் விளைவுகளை அறிந்து தொடக்கம் முதலே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட அரசியல் அமைப்புகளின் துணையோடு அத்திட்டத்தை மக்கள் ஒழித்துகட்டினர். ஆனால் ஹைட்ரோகார்பன் திட்டம் என்று மாற்று பெயரில் அத்திட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வர, தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து துரப்பணப் பணிகள் மேற்கொள்ள தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஓ.என்.ஜி.சி.யின் துரப்பணப் பணிகளை துவக்கக்கோரியும், இந்நிறுவனத்தை நம்பி 40 ஆண்டுகாலமாக ஒப்பந்த ஊழியர்களாக இருக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உத்திரவாதப்படுத்தவும், மேலும் நாட்டின் இயற்கை எரிவாயு தேவையை ஓரளவு பூர்த்தி செய்து அன்னிய செலவானி நிதி இழப்பிலிருந்து தேசத்தை காத்திடவும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சமுதாயப்பணிக்காக ஒவ்வொரு ஆண்டும் செலவிடும் இந்நிறுவனத்தை காத்திடவும், நாட்டின் பொதுத்துறையை காத்திடவும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த 23-08-2022 அன்று திருவாரூரில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக சூழலியல் விதிகளுக்கு புறம்பாகவும், அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியும் செயல்பட்டதாலேயே அப்பகுதி மக்கள் இந்நிறுவனத்திற்கு எதிராக போராட ஆரம்பித்தனர். மேலும் இந்நிறுவனத்தினால் விவசாயிகளின் நிலங்களுக்கு ஏற்பட்ட நட்டங்கள் முறையாக நிவர்த்தி செய்யப்படாமலும், அரசின் முறையான அனுமதி பெறாமலும் பல்வேறு துரப்புப் பணிகள் துவங்கப்பட்டன. அடியக்கமங்கலம், திருவாரூர் உள்ளிட்ட துரப்புப் பணி நடந்த பகுதிகளில் எண்ணைக் கசிவுகள் உள்ளிட்டவை இந்நிறுவனத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை அம்பலப்படுத்தின.

இப்படியான ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தொழிலாளர் நலச்சட்டவிதிகளுக்கு உட்படாத, பணி நிரந்தரம், தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்கள் எவற்றையும் பெற இயலாத சுரண்டப்படும் தொழிலாளர்களே ஒப்பந்த ஊழியர்கள். ஓ.என்,ஜி.சி.யின் இத்தகைய ஒப்பந்த ஊழியர்களை பாதுகாப்போம் என்று கூறும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிலாளர் விரோத ஒப்பந்த ஊழியர் முறையை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படியான போராட்டங்களை நடத்திடாமல், ஒப்பந்த ஊழியர்கள் மேலும் சுரண்டப்பட வேண்டுமென கோரிக்கை வைப்பது தொழிலாளர் விரோதம்.

ஓ.என்.ஜி.யை நோக்கி தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் சிறுவிவசாயிகளுக்கு எதிராக ஓப்பந்த தொழிலாளர்களை நிறுத்துகிறது கம்யூனிஸ்ட் கட்சிகள். இவ்வகையில் உழைக்கும் வர்க்கத்தினரை, பாட்டாளிகளை கூறுபோட்டு எதிரெதிராக நிறுத்துவது ஓ.என்.ஜி.சி.க்கும், இப்பகுதிக்கு வர முயலுகின்ற பெருநிறுவனங்களுக்கும் வாய்ப்பான சூழலை கொண்டுவரும். இதுவரை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அடைந்த லாபத்தை மக்களிடம் பகிர்ந்திராத நிலையில், அவர்களுக்கு ஆதரவான கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டம் அவர்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும்.

மக்கள் விரோத நிறுவனமாக செயல்பட்டு தஞ்சை டெல்டாவின் சூழலியலை அழித்து, தனியாருக்கு தாரைவார்க்க உதவும் கொள்கை கொண்ட ஓ.என்.ஜி.சி. துறை இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகளின் இப்போராட்டம் என்பது பாஜகவின் தனியார் லாபவெறி கொள்கைக்கும், ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும், விவசாய நிலங்களை நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கும் ஆதரவான சந்தர்ப்பவாத போராட்டமாகும். இது எவ்வகையிலும் பாட்டாளிகள் நலன் சார்ந்ததோ, தனியார்மய எதிர்ப்பு சார்ந்ததோ, சூழலியல் பாதுகாப்பு சார்ந்ததோ அல்ல. பாட்டாளிகளை கூறுபோட்டு பெருநிறுவனங்களை பாதுகாக்கும் மக்கள்விரோத போக்குகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் உடனடியாக கைவிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply