ஈழத்தமிழர்களுக்கான விடுதலை, பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை, ’ஒன்றிய அரசின் பாராளுமன்றத்தில் நடக்கும் இலங்கை குறித்த சிறப்பு கூட்டத்தில்’ வலியுறுத்துக!!

ஈழத்தமிழர்களுக்கான விடுதலை, பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை, ’ஒன்றிய அரசின் பாராளுமன்றத்தில் நடக்கும் இலங்கை குறித்த சிறப்பு கூட்டத்தில்’ வலியுறுத்துக!!

மே17 இயக்கத்தின் கோரிக்கை.

இன்று 19-07-2022 , இலங்கை குறித்தான அனைத்துக்கட்சி கூட்டம் பாராளுமன்றத்தில் நடக்கிறது. திமுக, அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த சிறப்புக்கூட்டம் நடக்கிறது.
தமிழகக் கட்சிகள் இப்படியான கோரிக்கையை முன்வைப்பது வரவேற்பிற்குரியது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமையான ‘பொதுவாக்கெடுப்பினை’ வலியுறுத்தி கொள்கை நிலைப்பாடு எடுக்கக் கோரிக்கை வைத்து அதை நிறைவேற்ற முயல வேண்டும். இதைவிட சிறப்பானதொரு வரலாற்று வாய்ப்பு தமிழர்களுக்கு வாய்க்காது. இலங்கை மக்களின் பிரச்சனைக்கான தீர்வு எனும் பொதுசிக்கலாக இந்தியக் கட்சிகள் மாற்ற முனையும் நேரத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இனப்படுகொலை, போர்க்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று பட்டியலிடப்பட்ட சர்வதேச குற்றங்கள், மேலும், ஐ.நா மனித உரிமை அவையில் 2015இல் இலங்கையரசு வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றாது தவிர்க்கும் மனித உரிமை சார்ந்த கோரிக்கைகள் என அனைத்திற்குமான நீதியை பேசுவதே தமிழர்களுக்கான அரசியலாகும். இலங்கையின் பொருளாதார சிக்கலின் ஆணிவேர் சிங்கள இனவாத, இராணுவாத நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. இது குறித்து இந்திய-தமிழக ஊடகங்கள் கள்ள மெளனம் காத்திருந்தன. திமுக, அதிமுக போன்ற அதிகாரத்தில் பங்கேற்கும் கட்சிகள் இந்நிலைப்பாடுகளை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இப்படியான சூழலில் ஈழத்தமிழர்களின் உரிமைகள், தமிழ்நாட்டு மீனவர் உரிமைகள் என அடிப்படை உரிமைகள் குறித்துப் பேசாமல் தமிழகத்தின் பிரதான கட்சிகள் தவிர்ப்பார்களெனில் தமிழினத்தினை நிராகரிக்கும் அரசியலாகவே வரையரை செய்ய வேண்டிய நிலைக்கு செல்ல வேண்டியிருக்கும். எனவே திமுக உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கான சர்வதேச சுதந்திர விசாரணை ஆகிய தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானங்களை முன்னிறுத்தி வலியுறுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்துவோம் என திமுக 2019 பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்ததை நினைவிற்கு கொண்டு வருகிறோம்.

உங்களது தேர்தல் வாக்குறுதிகளை வலுப்படுத்தும் விதமாகவும், தமிழினத்தின் நீண்டநாள் கோரிக்கையின் குரலாகவும், இனப்படுகொலை செய்யப்பட்ட பாலச்சந்திரன், இசைப்பிரியா போன்ற 146,679 ஈழத்தமிழர்களின் மரணத்திற்கான நீதிக்காகவும் இக்கூட்டத்தில் தமிழக கட்சிகள் குரல் எழுப்பி, கோரிக்கைகளை நிலைநாட்டிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோரிக்கை வைக்கிறது.

மே பதினேழு இயக்கம்
19-07-2022

Leave a Reply