மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் அறிக்கை
‐—————————————————–
தனியார் பள்ளிகள் மீதான வெகுமக்களின் நீண்டநாள் அதிருப்தியின் வெளிப்பாடாகவே கள்ளக்குறிச்சியில் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. கொரொனோ தொற்றுக்காலத்தில் இப்பள்ளிகள் நடத்திய வசூல் கொள்ளை, குழந்தைகளை வைத்து நடத்திய சுரண்டல் என நீண்ட பட்டியல் உண்டு. கொரோனோ உருவாக்கிய வேலையிழப்பு, பொருளாதார இழப்பு என பல்வேறு நெருக்கடிகளைக் கடக்க இயலாத நிலையில் துவளும் பெற்றோர்கள், தொடர் செய்தியாக இதே போன்று பள்ளிக்குழந்தைகள் மீது வளாகங்களில் நடக்கும் வன்முறைகள் என தொடர்ந்து நிகழும் அநீதிகளின் தொகுப்பாகவே மக்கள் போராட்டம் நிகழ்கிறது. துறையூர் அருகே சில மாதங்களுக்கு முன்பு இதே போல நீட் பயிற்சி வகுப்பிற்கு சென்ற மாணவி சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து போனது உட்பட இப்போராட்டம் பல நிகழ்வுகளின் வெளிப்பாடே.
இதே போன்று சென்னையில் நடக்கும் வீடு இடிப்புகள், ஆக்கிரமிப்பினை அகற்றுகிறோம் எனும் பெயரில் சாமானியர் மீது நடக்கும் அரச கொடுமைகள் தொடர்ந்த வண்ணமுள்ளது. உச்சநீதிமன்றமும் சாமானிய மக்களின் மீது தங்களது தீர்ப்புகளை எழுதி தம்மை நேர்மையான, கடுமையான அமைப்பு என கட்டமைக்கிறது.
காவல்துறை, கலெக்டர், தாசில்தார் என விரியும் அதிகாரவர்க்கமும், நீதித்துறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகள். இவைகள் அரசியல்படுத்தப்படாத அதிகார மையங்கள். மக்களோடு தொடர்பற்றும், மக்களுக்கு பதில்சொல்லவேண்டிய நெருக்கடியற்று தன்னிச்சையாக இயங்குகின்றன. இந்நிறுவனங்களின் வரம்புமீறல்களை, சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை கேள்வி எழுப்ப வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் மெளனம் காப்பதும், கொள்கை முடிவெடுக்காமல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதாலேயே இது போன்ற போராட்டங்கள் தவிர்க்க இயலாததாகிறது.
கள்ளக்குறிச்சியில் நடக்கும் போராட்டத்தை வன்முறை என மட்டும் சுருக்குவது அதிகாரவர்க்கத்தின் கையாலகத்தன்மையைத்தான் சொல்லுகிறது. அதிகாரவர்க்கம் நடத்தும் கொள்ளை, மக்கள் விரோத செயல்பாடுகள், இந்துத்துவ மனநிலை, காவல்நிலைய மரணங்கள், எதேச்சதிகாரத்தினை இதற்கு மேலும் திமுக அரசு கட்டுப்படத்தாமலும், கேள்விக்குட்படுத்தாமலும் செல்லுமானால் திமுக மக்கள் ஆதரவை விரைவில் இழக்கும்.
மக்கள் நலத்தின் மீதான கொள்கைப்பற்று இல்லாத அதிகாரவர்க்கம் ஆபத்தானது, அதன் இயல்பிலேயே பாசிசத் தன்மை கொண்டது. அரசியல் சாசனத்தின் வரையரைகளை சூத்திரமாகவும், சட்டத்தினை கைவிலங்காகவும் மக்கள் மீது சுமத்தும் எவ்வகையான அதிகாரவர்க்கமும் வீழ்ந்து போகும்.
சென்னையில் நடக்கும் குடிசை அகற்றம், வீடு இடிப்புகளுக்கு எதிர்வினையாக பெரும் எழுச்சி நடக்கும் முன்னர் திமுக கண்களைத் திறந்தால் அவர்களுக்கு நல்லது. அதிகாரிகளின் முடிவுகளின் படியும், மக்கள் விரோத நீதிமன்ற தீர்ப்புகளின் படியே நடப்போம் என முடிவெடுத்தார்களெனில், எதேச்சதிகாரத்தின் கூட்டாளிகளாகவே மக்கள் உங்களை அவதானிப்பார்கள். இதே நிலை தான் அதிமுகவிற்கும் நடந்தது. நீதிமன்றங்களில் சாமானியர்களுக்கான கொள்கையை முன்வைத்து வாதாடுவதும், சமூகவிரோத அதிகாரிகளை அகற்றவதுமாக அரசியலை முன்னெடுக்கவேண்டிய காலமிது.
காவல்நிலையத்தில் நடக்கும் மரணங்கள், கொலைகளை தடுப்பதற்குரிய எவ்வித அக்கரையுமற்று இயங்கும் தலைமைக் காவலர், கள்ளக்குறிச்சியில் நடக்கும் போராட்டத்தை வன்முறை என்று மட்டுமே சுருக்குவது எவ்வகையிலும் அரசிற்கும், மக்களுக்கும் பயன்படாது.
இந்த அதிகாரிகளை முறைப்படுத்தி, மக்கள் சேவகம் செய்ய வைக்கவே சட்டமன்றமும், உறுப்பினர்களும், அமைச்சர்களும், முதலமைச்சர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதை நீங்கள் முறைப்படுத்தவில்லையெனில், மக்களே நேரடியாக போராட்டங்கள் மூலம் கேள்வி எழுப்புவார்கள்.
அதிகாரிகள், நீதிமன்றம் மக்களுடன் நிற்கவில்லையெனில், ஆட்சியாளர்கள் மக்களுடன் நிற்கவேண்டும். இச்சமநிலை மாறினால் மக்கள் தம் உரிமைக்காக களம் காண்பார்கள்.
தோழர் திருமுருகன் காந்தி ,
ஒருங்கிணைப்பாளர் மே பதினேழு இயக்கம்