கோவை மறந்த விடுதலைப் போர் – வரலாறு மீட்பு மாநாடு

வரலாறு நமக்கான ஆயுதத்தை தயாரித்து வைத்திருக்கும். அதைத் தேடி நாம் அடையும் போது நம்மை பூட்டியிருக்கும் விலங்குகள் உடைந்து நொறுங்கும். நாம் தேடி கண்டடையும் வரலாறு யாருடையது என்பதும், அது யாருக்கான விடிவை தருகிறது என்பதையும் அறிந்து செயல்படும் பொழுது நம்முடைய அரசியல் கூர்மையடைகிறது. வரலாறு நெடுக சாமானிய மக்களே வரலாறை நிர்ணயித்திருக்கிறார்கள், மாற்றி எழுதி இருக்கிறார்கள். இதனை மறைத்து மேலே எழுப்பப்பட்ட பேரரசர்களின் அலங்காரப் பூச்சுகளை நாம் கலைத்துப் பார்க்கும் பொழுது சமரசமின்றி போராடிய சாமானியர்கள் வரலாற்று நாயகர்களாக நம்மை அரவணைக்கிறார்கள். அவர்கள் நமக்கு நம் வரலாறை சொல்லித்தருகிறார்கள். நாம் இழந்த உரிமையைப் பற்றி நமக்கு பாடம் எடுக்கிறார்கள். நம்மைச்சுற்றி கட்டப்பட்ட பகட்டுத்தனமான பொய் வரலாறுகளை நூலாம்படைகளைப் போல தம் விரல்களால் விலக்கிக் காட்டுகிறார்கள். நம் தோள் மீது கைபோட்டு நம்மை கடந்த காலத்தின் வீர நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் மணிமகுடங்களை சூட்டியிருக்கவில்லை. அங்கே அலங்கார அரண்மனைகள் நம்மை வரவேற்கவில்லை. தங்கமும், வைரங்களும் கொட்டிக்கிடக்கவில்லை. வறுமையும், கொடுமையும் சூழ்ந்திருந்த போதிலும் விடாப்பிடியாக உரிமைக்காக வாளேந்தி நிற்கும் சாமானிய மக்களைக் காட்டுகிறார்கள். அந்த சாமானியர்களே அரண்மனைகளின் சுவர்களை தம் எளிய கைகளால் பிய்த்து எறிகிறார்கள். அவர்களது மூச்சுக்காற்றுகளே அடக்குமுறை அரசுகளின் பீரங்கிகளை தூற வீசுகிறது.

இப்படியான பாட்டாளித் தமிழர்களின், சாமானிய மக்களின் வரலாற்றினை மே பதினேழு இயக்கம் தேடித்தேடி கண்டடைய விரும்புகிறது. அந்த வரலாறை மீட்டெடுத்து தமிழகத்தின் வரலாற்றில் சாமானியர்களின் புரட்சியை உயர்த்திக் காட்ட விரும்புகிறது. இதன் மூலமாக மறக்கடிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட நம் சாமானிய நாயகனுக்கு உயிரூட்ட விரும்புகிறோம். தூக்குக்கயிறிலிருந்தோ, நடுகற்களிலிருந்தோ எழும் இவ்வரலாற்று நாயகர்கள், தமிழரின் விடிவிற்கான வழிகளை நமக்கு காட்டுவார்கள். சாதிகளோ, மதங்களோ தம்மை நிரந்தரமாக பிரிக்காது என்பதை எளியப்புன்னகையோடு நம் காதோரம் சொல்வார்கள். பேரரசர்களோ, சக்கரவர்த்திகளோ நம் வரலாறை எழுதவில்லை. நமக்கான வரலாறை எழுதும் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் நம்மைப் போன்ற சாமானிய மக்களே. இதை நாம் உணரும் பொழுது நாம் உணர்ச்சி வயப்பட்டவர்களாக மாறுவது மட்டுமல்ல, அரசியல்வயப்பட்டவர்களாக மாறுகிறோம். நம்பிக்கைப் பெற்றவர்களாக, புத்துயுர் பெற்றவர்களாக நமது இன்றய அரசியலை உரசிப்பார்க்கிறோம்.

இவ்வகையில் 222 ஆண்டுகளுக்கு முன் கோவை நகரில் நடந்த வரலாற்று பெருநிகழ்வை மீட்டெடுத்து உங்கள் கண்முன் கொண்டுவர விரும்புகிறோம். கொடுங்கோல் ஆட்சியை துவங்கிய வெள்ளையர்களுக்கு எதிராக திரண்டெழுந்த சாமானிய தமிழர்களின் எழுச்சியின் முக்கிய நிகழ்வாக அமைந்த கோவை சமர் எனும் கோவைத்திட்டத்தினை கட்டியெழுப்பிய புரட்சியாளர்களையும், இத்திட்டத்தில் போர் புரிந்து வெள்ளையர்களால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாவீரர்களின் நினைவுகளை உயிர்ப்பிக்க விரும்புகிறோம். இப்பெரும் போர்த்திட்டத்தில் சாதி, மதம் கடந்து கைகோர்த்து போரிட்டு, தலைவணங்காது அச்சமின்றி தூக்குக்கயிற்றில் ஏறிய 42 புரட்சியாளர்களுக்கு 222 ஆண்டுகள் கழித்தாவது நாம் மரியாதை செலுத்தியாக வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்தின் புரட்சி வீரர்களும், அண்டைய மாநிலத்தின் புரட்சியாளர்களும் கோவைக்காக உயிர்கொடுத்த அந்நிகழ்வினை வரும் ஜூன்12ம் தேதி நடத்த இருக்கிறது மே பதினேழு இயக்கம். 30க்கும் மேற்பட்ட இசுலாமியர் மற்றும் பல சமூகங்களைச் சார்ந்த தளபதிகளும் படுகொலையான இந்நிகழ்வு தமிழரின் வீரத்தையும், போர் நுணுக்கத்தையும், ஒற்றுமையையும் உலகிற்கு எடுத்துச் சொல்லியது. இந்நிகழ்வில் அனைத்துக் கட்சி ஆளுமைகளும், பல்வேறு இயக்கத்தோழமைகளும், சமய சனநாயக ஆளுமைகளும் தமக்குள்ளான வேற்றுமைகளைக் கடந்து ஒன்றுகூடி மரியாதை செலுத்த அழைத்திருக்கிறோம். இது வரலாறை சொல்லும் நிகழ்வு. இந்நிகழ்வில் வரலாறு படைக்க உங்கள் பங்கேற்பை வேண்டுகிறது மே பதினேழு இயக்கம்.

நாள் : 12 ஜூன் 2022
இடம் : கோவை.

தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்

Leave a Reply