











சென்னை இராஜா அண்ணாமலைபுரம் (ஆர்.ஏ.புரம்) கோவிந்தசாமி நகர் இளங்கோ தெரு பகுதி மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தும் போது தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வு 10-05-2022 செவ்வாய் அன்று நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தோழர்களுடன் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மேலும், இடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் மே பதினேழு இயக்கம் இறுதி வரை நிற்கும் என்று உறுதி கூறினார். பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த தோழர் திருமுருகன் காந்தி, இறந்த கண்ணையாவிற்கு உரிய மரியாதை செலுத்துவதாகவும், அவரின் இறுதி விருப்பபடி அப்பகுதியிலேயே மீண்டும் வீடு கட்டி தர வேண்டும் என்று கூறினார். பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சென்னை நகரிலிருந்து பூர்வகுடி மக்களை அகற்றும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது எனவும், மே 17 இயக்கம் நீண்டகாலமாக முன்வைத்து வரும், அகற்றப்படும் இடத்திலிருந்து 5 கிமீ சுற்றளவுக்குள் மக்கள் மறுகுடியமர்த்த வேண்டுமெனவும் கூறினார். மேலும், இப்பகுதி 1971-ல் அறிவிக்கப்பட்ட குடிசை மாற்றுவாரிய பகுதியாக இருப்பதால், இது ஆக்கிரமிப்பு அல்ல என்றும் இப்பகுதி மக்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டுமெனவும் கூறினார். இந்த விவகாரம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த பேசிய தோழர் திருமுருகன் காந்தி, உச்சநீதிமன்றத்தை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் அதிகாரமிக்கது எனவும், தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து பட்டா வழங்க முடியும் என்று கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தது போல, அப்பகுதி மக்களுக்கு அங்கேயே வீடுகட்டி தருவதை உறுதிபடுத்த வேண்டும் என்று கூறினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010