
ஜனநாயக அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீதான ஆளுநரின் அவதூறு! அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய ஆளுநர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். இரவி அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ச்சியாக ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டு வருவதும் அதற்கு தமிழ்நாட்டின் ஜனநாயக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது, ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற அவர், ஜனநாயக அமைப்பான ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ)’ மிகவும் ஆபத்தான இயக்கம் என்று கூறி அதன் மீது பல்வேறு அவதூறுகளை வைத்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான ஆளுநரின் இந்த கருத்தை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஒரு மாநிலத்தில் ஆளுநராக இருப்பவர் அந்த மாநிலத்தின் வளர்ச்சி, சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவற்றில் மாநில அரசுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி அதனை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கும் வேலையை செய்யவேண்டும். ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் பாஜக அல்லாத மாநிலங்களில் நியமிக்கப்படும் ஆளுநர்கள் அரசியலமைப்பு தங்களுக்கு வகுத்தளித்திருக்கிற மேற்சொன்ன பணிகளை விடுத்து, ஆர்எஸ்எஸ்-பாஜகவை அந்த மாநிலத்தில் வளர்க்க வேண்டிய வேலைகளையும், சம்பந்தபட்ட மாநில மக்கள் ஆட்சியிலிருக்கிற மாநில அரசு மீது வெறுப்படையும் விதமான வேலைகளையும் செய்கிறார்கள்.
அந்த வகையில், தமிழ்நாட்டின் ஆளுநராக ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.இரவி, அரசியலமைப்புக்கு எதிராக பார்ப்பனர்கள் மட்டுமே வழிபடும் கோவிலுக்குச்சென்று அங்கே இராம இராஜ்ஜியத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று பேசுவதும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் வெற்றிபெற்ற வழக்கறிஞருக்கு பாராட்டுவிழாவை ஆளுநர் மாளிகையில் நடத்துவதும், திருக்குறளை-திருவள்ளுவரை காவி சாயம் பூசி வேத மரபிற்குள் தள்ள முயற்சிப்பதும், தமிழ்நாட்டை ஆன்மீக தலைநகரம் என்று கூறுவதும், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’, ‘ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு’ என்ற ஆர்எஸ்எஸ்-பாஜகவின் இந்துத்துவ கொள்கையை முன்னெடுத்து செல்வதுமாக உள்ளார்.
அதே போல, மாநில வளர்ச்சிக்காக போடப்படும் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதக்களை நிறுத்தி வைப்பது, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை போன்றவற்றில் தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக பேசுவது, தமிழ்நாடு அமைச்சரவையை ஆலோசிக்காமல் துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவது, மாநிலங்களின் வளர்ச்சி நாட்டிற்கு ஆபத்து என்று கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பேசுவது என தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு விரோதமாக தமிழ்நாட்டின் இறையாண்மையை மீறி செயல்பட்டு வருகிறார் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.இரவி.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர், ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் மீது தனது வெறுப்பினை காட்டி தனது இந்துத்துவ சார்பினை வெளியிட்டுள்ளார். பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா இந்தியாவின் சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக முறைப்படி இயங்கி வருகின்ற அமைப்பாகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழர்களின் அனைத்து வாழ்வாதார பிரச்சனைகளிலும் தமிழர்களுக்காக முன்னணியில் நிற்கும் ஓர் அமைப்பு. கொரோனா பெருந்தொற்றின் போது உயிரிழந்தவர்களின் சடலங்களை யாரும் பெற்றுக்கொள்ள முன்வராத போது, ஆயிரக்கணக்கான சடலங்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த மனிதாபிமானமிக்க ஓர் அமைப்பு. அப்படிப்பட்ட ஜனநாயக அமைப்பின் மீது அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதற்காக பயங்கரவாத முத்திரை குத்தி தேவையில்லாத பதட்டத்தை தமிழகத்தில் உருவாக்கும் வேலையை செய்துவருகிறார் ஆளுநர் இரவி.
அரசியலமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஆளுநர், ஓர் அமைப்பை ஆபத்தாக கருதுகிறார் என்றால், அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டியதும், அதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவர் கடமையாகும். அப்படி பார்க்கையில், ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் மீதான ஆளுநரின் குற்றச்சாட்டுகள் வெறும் அவதூறுகளே. அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டிய ஆளுநர், இந்துத்துவ ஆர்எஸ்எஸ்-பாஜகவின் முகவராக இருந்து இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பது புலப்படுகிறது.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய ஆளுநரே சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக செயல்படுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே, ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் மீது ஆதாரமில்லாமல் பயங்கரவாத முத்திரை குத்திய ஆளுநர், உடனடியாக தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என மே பதினேழு இயக்கம் கோருகிறது. அரசியலமைப்பிற்கு எதிராக, தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் ஆளுநர் இரவி உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. ஆங்கிலேயே காலனியகால ஆளுநர் பதவி என்பதே ஜனநாயக விரோதமானது என்பதால் அப்பதவி நீக்கப்படுவதே அனைத்திற்குமான தீர்வாக அமையும்.
மே பதினேழு இயக்கம்
9884864010