


தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல்! கொல்லப்பட்ட தமிழர்களுக்காக குடும்பத்துடன் நினைவேந்த மே 22-ல் சென்னையில் ஒன்றுகூடுவோம்! – மே பதினேழு இயக்கம்
2009-இல் சிங்களப் பேரினவாதம் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளோடு இணைந்து ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தது. இந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு கடந்த 13 ஆண்டுகளாக உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்கள் போராடி வருகின்றனர். தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது. அதுவே இனப்படுகொலைக்குள்ளான தமிழர்களுக்கு நீதியாக அமையும்.
அதனை நினைவில் ஏந்தும் வகையிலும், கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையிலும் இனப்படுகொலையின் இறுதி நாட்களான மே மாதம் 15-18 வரை உலகத்தின் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் கொல்லப்பட்ட நமது உறவுகளை நெஞ்சில் ஏந்தியும், தமிழீழ விடுதலைப்புலிகள் விட்டுச் சென்ற தமிழீழ கோரிக்கையை உயர்த்திப்பிடிக்கும் விதமாகவும் மே பதினேழு இயக்கம் ஆண்டுதோறும் மே மாதம் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை சென்னையில் நடத்தி வருகிறது.
2009-க்கு முன் தமிழீழ விடுதலை எந்த அளவிற்கு அவசியமாக ஈழத்தமிழர்களுக்கு இருந்ததோ அதனை விட பல மடங்கு தற்போது உள்ளது. இன்னும் சொல்லப்போனால், தெற்காசிய பிராந்தியத்தில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்புமே இன்று ஈழ விடுதலை அரசியலில் உள்ளது. ஏனென்றால், இன்று மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் மூழ்கித் தவிக்கும் இலங்கையை, தனது புவிசார் அரசியல் நலனுக்காக உலக வல்லாதிக்க நாடுகள் கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றன. தமிழீழ இனப்படுகொலைக்கான காரணமும் அதுவே. இலங்கையை கட்டுப்படுத்தி தெற்காசிய பிராந்தியத்தை தனது கோரப் பிடிக்குள் வைக்கத் துடிக்கின்றன. எனவே ஈழ விடுதலை அரசியல் என்பது இன்று ஈழத்தமிழர்கள் என்பதையும் தாண்டி, தெற்காசிய மக்களுக்கான அரசியலாக மாறி நிற்கிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தமிழீழ இனப்படுகொலையை நடத்திய இராஜபக்சே குடும்பத்தின் கோர முகத்தை சிங்கள மக்களுக்கும் காட்டுகிறது. சிங்கள இனவெறியாளர்களின்-ஆட்சியாளர்களின் அடக்குமுறை சிங்கள மக்களை நோக்கியும் திரும்பியுள்ளது. இது, தமிழீழ மக்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை சில சிங்கள மக்களுக்கு உணரச் செய்துள்ளது. இவ்வேளையில், தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மூலம் உலகின் கவனத்தை பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது என்பதை உலகிற்கு உரக்க சொல்ல வேண்டிய வேளை இது.
இந்த நிலையில், தமிழநாட்டில் ஈழ விடுதலை அரசியலை உயர்த்திப்பிடிக்க வேண்டியதன் அவசியம் தமிழர்களாகிய நமக்கு முதன்மையாக இருக்கிறது. அதனை உணர்த்தும் விதமாக தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தலை இந்தாண்டு மே 22 ஞாயிறு மாலை சென்னையில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கிறது. தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான இந்த நினைவேந்தலில் தமிழர்கள் நாம் கொல்லப்பட்ட நமது உறவுகளுக்காக நினைவேந்துவோம். சென்னையில் நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று மெழுவர்த்தி ஏந்தி நினைவேந்த மே பதினேழு இயக்கம் அழைக்கிறது. கட்சி, சாதி, மத வேறுபாடு கடந்து தமிழர்களாய் ஒன்றிணைவோம்!







மே பதினேழு இயக்கம்
9884864010