ஆங்கில ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக மலேயத் தோட்டத் தொழிலாளர்களை திரட்டி தொழிற்சங்கம் அமைத்து போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட மலேயா கணபதி அவர்களின் நினைவுநாளில் வீரவணக்கம் செலுத்துகிறோம் – மே 4, 1949

ஆங்கில ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக மலேயத் தோட்டத் தொழிலாளர்களை திரட்டி தொழிற்சங்கம் அமைத்து போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட மலேயா கணபதி அவர்களின் நினைவுநாளில் வீரவணக்கம் செலுத்துகிறோம் – மே 4, 1949

“மலேயா மண் மாற்றாரிடமிருந்து விடுதலை பெறட்டும், மலேயா நாட்டுத் தொழிலாளர் வர்க்கம் வெற்றி காணட்டும், மலேயா நாட்டு மக்களுக்குப் புதிய வாழ்வு மலரட்டும், மலேயா மட்டுமின்றி உலகின் எந்தவொரு பகுதியிலும் அடிமைத்தனம் விரைந்து முடிவிற்கு வரட்டும், இதுவே எனது இறுதியான உறுதியான விருப்பம், வாழ்க வையகம்!”

இதுதான் அகில மலேயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்து வந்த மலேயா கணபதி அவர்களின் இறுதி வரிகளாய் அமைந்திருந்தது.

18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆங்கிலேய காலனியாக்கம் தொடங்கியதால் தெற்காசிய நாடுகள் பெரும்பாலும் ஆங்கிலேய காலனிகளாகவே இருந்து வந்தன. அவற்றில் தேயிலை தோட்டம், கரும்பு தோட்டம் முதலான தோட்ட வேலைகளுக்கும், கடுமையான உடலுழைப்பு தேவைப்படும் பிற வேலைகளுக்கும் அடிமைகளாகவும், குறைந்த ஊதியத்திற்கும் தமிழர்கள் பெரும்பாலும் அழைத்துச் செல்லப்பட்டனர். அவ்வாறு சென்றவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் சொல்லிலடங்காதவை.

இத்தகைய சூழல்களை மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற ஆங்கிலேயக் காலனிகளிலும் காண முடிகிறது. தமிழர்களுக்குள் புரையோடிக் கிடந்த சாதிப் பிரிவினை இந்த கொடுமைகளுக்கு எதிராக ஒற்றை ஆற்றலாக ஒன்று திரளும் வாய்ப்பை தடுத்து வந்தது.

1929-ம் ஆண்டு தந்தை பெரியாரின் மலேசியப் பயணம் தமிழர்களின் ஒற்றுமையின்மையை தகர்த்து சாதி மதம் கடந்த ஓர் உணர்வை ஊட்ட காரணமாக இருந்தது. தங்கள் அரசியல் மற்றும் சமூக சுயமரியாதையை தமிழர்கள் பேசத்தொடங்கிய அக்காலத்தின் அடுத்த கட்டமே மலேயா கணபதி அவர்களின் தலைமையில் தமிழர்களின் திரட்சி எனலாம்.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட திரு.கணபதி அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தில் பங்காற்றியவர். 1946 முதல் தொழிற்சங்கவாதியான மலேயா வீரசேனன் அவர்களுடன் இணைந்து பெரும் போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் முன்னெடுத்தார்.

தொழிலாளர்களுக்கு இடையில் உட்பிரிவினையை உருவாக்க சீனத் தொழிலாளர்களுக்கும், தமிழ்த் தொழிலாளர்களுக்கும் இரு வேறு கூலி ஆங்கிலேய அரசால் தரப்பட்டது. ஆனாலும் திரு.கணபதி அவர்களால் இரு தேசிய இனங்களின் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து போராட முடிந்தது. 1946-ம் ஆண்டு நடந்த ராபின்சன் பூங்கா போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 சீன தொழிலாளர்கள் உயிரிழந்த துயரம் நடந்தது. ஆனாலும் தொழிலாளர் ஒற்றுமை குலையவில்லை. 1946-ல் அங்கு வேலை செய்த ஆலன் பிளேட்ஸ் (Alan Blades) என்ற ஆங்கிலேய அரசின் இரகசிய காவல்துறை உயர் அதிகாரி (Suprime Allied Commander) “இங்கு கம்யூனிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும்” என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு தொழிற்சங்கங்கள் வீரியமான போராட்டங்களை முன்னெடுத்தது.

போராட்டங்கள் வீரியமாவதை கண்ட ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு 1948-ம் ஆண்டு அவசர நிலைப்பிரகடனம் அறிவித்தது. மலேயா கணபதி அவர்கள் உள்ளிட்ட பல தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அதோடு நில்லாமல் திரு.கணபதி அவர்களுக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தமிழகத் தலைவர்கள் தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா, பொதுவுடைமைவாதி ஜீவானந்தம் முதலானோர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் ஆங்கிலேய அரசு திரு.கணபதி அவர்களை தூக்கிலிட்டுக் கொன்றது. 1949 மே 12-ம் நாள் விடுதலையில் இதை கண்டித்து எழுதிய தந்தை பெரியார் அவர்கள் ‘இந்திய ஒன்றிய அரசு திரு.கணபதியை மீட்கும் நடவடிக்கைகளை முன்னரே எடுக்காமல் விட்டது’ என்றும், ‘அவ்வாறு எடுத்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம்’ என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இன்றளவும் சிங்கப்பூர் மற்றும் மலேசிய தமிழர்களின் உரிமைப் போராட்டங்களில் திரு.கணபதி உள்ளிட்ட ஈகியர்களின் பெயர்கள் ஓங்கி ஒலிக்கக் கேட்கிறோம். உலகம் முழுவது இத்தகைய ஈக வரலாறுகள் நிறைந்து கிடக்கின்றன. இதுவே தமிழரின் மரபும், மானபும் ஆகும். அவ்வீகியர்கள் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி ஆங்கில ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக மலேயத் தோட்டத் தொழிலாளர்களை திரட்டி, தொழிற்சங்கம் அமைத்து போராடியாதற்காக தூக்கிலிடப்பட்ட மலேயா கணபதி அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply