ஈழத்தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் நினைவு நாளில் புகழ் வணக்கம் செலுத்துகிறோம் – ஏப்ரல் 26, 1977
“நேர்மையானவர்களுக்கு அரசியலில் இடமில்லை என்ற கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நேர்மையானவர்களுக்கு நிச்சயம் அரசியலில் இடமுண்டு. தார்மீக உணர்வை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளவேண்டும்” – தந்தை செல்வா அவர்கள்
தமிழீழத்தின் விடுதலை வரலாற்றில் தந்தை செல்வா என்ற பெயர் சிங்கள இனவெறி தலைவர்களால் கூட மரியாதையாக உச்சரிக்கப்பட்ட பெயராகும். தமிழீழ தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிலிருந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக இட்டுச் செல்லப்பட்ட மலையகத் தமிழர்களுக்கும், இலங்கையில் வசிக்கும் இசுலாமியத் தமிழர்களுக்கும் அறவழி போராட்டம் மூலம் உரிமைகளை மீட்டுத் தர முயன்றவர். உலக அரங்கில் ‘ஈழத்து காந்தி’ என்று அடைமொழியிட்டு அழைக்கப்படும் அளவிற்கு அறவழி போராட்டங்களை தொடுத்தவர். ‘தந்தை செல்வா’ என்று ஈழத்தமிழர்கள் மற்றும் இலங்கை வாழ்த் தமிழர்களால் அன்போடு அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் ஆவார்.
இலங்கை முழுவதும் வாழ்ந்து வந்த தமிழர்களின் அரசியல் சாதி அடிப்படையிலும், மத அடிப்படியிலும் பரவி இருந்த தருணத்தில் தந்தை செல்வா அவர்களின் அரசியல் பார்வையும், அணுகுமுறையும் இப்பிளவுக்குறிய காரணிகளுக்கு எதிரான மொழி வழி தேசிய இன விடுதலை அரசியலை கட்டமைத்தது. இந்த அரசியல் இலங்கைத் வாழ்த் தமிழர்கள், ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமிய மற்றும் கிருத்துவத் தமிழர்களை ஒரு அரசியல் கோரிக்கையின் கீழ் அணியமாக ஆவனச் செய்தது. சுருங்கக் கூறுவதானால் இலங்கையில் தமிழீழத் தேசிய அரசியலின் தோற்றம் தந்தை செல்வா அவர்களிடம்தான் தொடங்கியது எனலாம்.
1947ம் ஆண்டு இலங்கைக்கு விடுதலை கிடைக்கும் முன்னரே தந்தை செல்வா அவர்கள் தமிழர்கள் மீதான மொழி வழியிலான அடக்குமுறை பற்றி கூறியிருந்தார். யாழ் தமிழ் மாநாடு ஒன்றில் பேசிய தந்தை செல்வா அவர்கள் “தமிழ் மொழி அழிக்கப்படும் ஆபத்து தோன்றியுள்ளது. சிங்களத்தை இந்நாட்டின் உத்தியோக மொழியாக்குவதற்கும், தமிழர் மொழியை வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்குள் மட்டுப்படுத்தி பிரதேச மொழியாகத் தரம் பிரித்து குறைப்பதற்கும் சிங்களத் தலைவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் மலையகத் தமிழர்களின் குடியுரிமையை மறுத்த இலங்கை குடியுரிமை சட்டம் பற்றிய விவாதத்தில் 1948 ம் ஆண்டு, “இன்று இந்தியத் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நாளை மொழிப்பிரச்சனை வரும் போது இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இதே கதி நேரிடும்” என்றும் சிங்கள பௌத்த பேரினவாத சமூகத்தின் மன நிலையை எடுத்துக் காட்டினார்.
1949 ம் ஆண்டு தந்தை செல்வா அவர்கள் அதுவரை அவர் பங்கெடுத்து வந்த அகில இலங்கை தமிழர் காங்கிரசில் இருந்து கொள்கை முரண் காரணமாக தமிழரசு கட்சி என்ற ஒரு கட்சியை துவங்கினார். அதுமுதல் தன் இறுதி காலம் வரை அக்கட்சியின் முன்னின்று தமிழர்களின் உரிமைப்போரை நடத்தினார்.
தமிழீழத்தில் நிலவிவந்த சாதியத் தீண்டாமைகளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த தந்தை செல்வா அவர்கள், “தமிழ் மக்கள் அரசியல் சுதந்திரம் பெற வேண்டுமானால், தம் சமுதாயத்திலே உரிமையற்றவர்களாக இருக்கும் மக்களுக்கு அவ்வுரிமைகளை வழங்க வேண்டும்.” என்று கூறினார்.
மலையகத் தமிழர்கள் தந்தை செல்வா அவர்கள் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தனர். அதேபோல் தந்தை செல்வா அவர்களும் மலையகத் தமிழர்களின் உரிமைக் குரலை உரத்து முழங்கினார். தொடர்ச்சியாக மலையகத் தமிழர்கள் தனித்த தேசியஇனம் என்று வலியுறுத்தியவர் “தமிழ்ப் பேசும் மக்கள் மலையகத் தமிழர்களுக்கு வந்திருக்கும் இன்னல்களை தங்களுக்கு வந்ததாகவே கருதவேண்டும். அவர்கள் உதவிக்கு எதிர்ப்பார்ப்பது இந்தியாவை அல்ல. சுதந்திரம் விரும்பும் இலங்கை வாழ் மக்களிடம் இருந்தே. இது தமிழரசு கட்சியின் அடிப்படைக் கொள்கையாக இடம் பெற வேண்டும்” என்று கூறினார்.
இலங்கையில் வசித்து வந்த இசுலாமியர்கள் நம்பிய ஒற்றை தலைவராக இருந்தவர் தந்தை செல்வநாயகம் அவர்களே. புத்ததளத்து பள்ளிவாயிலில் இசுலாமியர்கள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட போது அதை எதிர்த்து அன்று குரல் கொடுத்த ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் தந்தை செல்வா மட்டுமே. தமிழரசு கட்சி தொடங்கப் பட்ட நாள் முதலே இசுலாமியர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை வலியுறுத்திவர் தந்த செல்வா அவர்களே ஆவார்.
இவ்வாறு இலங்கை முழுவதும் வாழ்ந்த பல்வேறு தமிழர் தேசிய இனங்களின் உரிமைகளை பற்றி விரிவாக பேசினாலும் இலங்கையில் இருந்து தனிநாடு பிரிவதென்பதை ஏற்றுக் கொள்ளா கொள்கை கொண்டிருந்தார், இத்தகைய கொள்கை பிடிப்பு கொண்டவரான தந்தை செல்வா அவர்களே தனித்தமிழீழமே ஒரே தீர்வு என்று பறைசாற்றிய ‘வட்டுக்கோட்டை தீர்மானம் 1976’ தனை முன்னின்று நிறைவேற்றினார். இதிலிருந்தே தமிழீழத்தில் எத்தகைய இனவெறி அடக்குமுறை தலை விரித்தாடியது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் தனது அறவழி போராட்டத்தால் சிங்கள ஆட்சியாளர்களிடையே பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்திய தந்த செல்வா அவர்கள், அவ்வொப்பந்தங்கள் வெறும் கண் துடைப்பாகவே இருந்ததை சுட்டிக்காட்டி “ஒவ்வொரு முறையும் ஒப்பந்தங்களை நிறைவேற்றாதது மட்டுமல்ல, சிங்கள அரசு தரப்பே முதலில் அந்த ஒப்பந்தங்களை மீறவும் செய்தது” என்றார். வட்டுக்கோட்டை தீர்மானத்தை தந்தை செல்வா அவர்கள் முன்மொழிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாய் அமைந்தது.
தன் வாழ்நாளில் 8 பொதுத் தேர்தல்களை சந்தித்து அதில் ஏழு தேர்தல்களில் மக்கள் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்றார். தமிழ் மக்களின் அத்தகைய பேராதரவு பெற்ற தந்தை செல்வா அவர்கள் தமிழீழத்தின் தன்னிகரில்லா தலைவர் என்ற புகழுக்குறியவர். தமிழீழத்தின் தந்தை என்று உலகத்தமிழர்களால் அழைக்கப்பட்ட தந்தை செல்வா அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010