அண்ணலின் பிறந்த நாளில் பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் அதிகாரவர்க்கத்தால் அல்லல்பட்டு, ஆதிக்க ஆற்றல்களால் சுரண்டப்படும் பழங்குடி மக்களின் கிராமங்களுக்கு மக்கள் விடுதலை முன்னனி இயக்கத்தின் தலைவர் தோழர் மாரிமுத்தோடும், கேரள தோழர் சிவகுட்டி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள் சென்று சந்தித்தோம். மனிதபிமானமற்ற வகையில் நிராகரிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் கடும் துயரத்தை கொடுக்கிறது.
பொள்ளாச்சி, ஆனைமலை காளியாபுரம் ஊராட்சிக்குட்பட்ட காக்காகொத்திப்பாறை பகுதியில் வாழ்ந்து வருகின்ற எரவளா எனும் தொல்தமிழ் பழங்குடிகள் வசித்த 48 குடிசைகளை அகற்றி தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். தங்கள் உடமைகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல் குடிசைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதை ஒட்டியப்பகுதியில் இருக்கும் அரசு நிலத்தை பழங்குடி மக்களுக்கு ஒதுக்கித்தரக் கோரி பழங்குடி மக்கள் துணை ஆட்சியரை அணுகியுள்ளனர். இப்பகுதியில் இம்மக்களுக்கு வாழவழியில்லாமல் குழந்தைகளுடன் தவித்த நிலையில் பொள்ளாச்சி துணை ஆட்சியர் திரு.தாகரேசுபம் ஞானதேவ்ராவ் அவர்களை அணுகி தங்களுக்கு நிலப்பட்டா ஒதுக்க கோரிக்கை வைத்தபொழுது உதாசீனப்படுத்தியதாகவும், கண்ணியக்குறைவாக நடத்தியதாக மக்கள் புகார் தெரிவித்து பட்டியலினமக்கள் ஆணையத்திற்கு முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் துணை ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மக்களை திசைதிருப்பும் வகையில் ஆனைமலை தாசில்தார் திருமதி.பானுமதி தீர்வு அளிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அவரும் மக்களைச் சந்திக்கவில்லை. காக்காகொத்திப்பாறை பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் ஒரு செண்ட், அரை செண்ட் என மனிதாபிமானமற்ற வகையிலேயே ஆட்சியர் கடந்த காலங்களில் நிலம் ஒதுக்கி உள்ளனர். இங்கு வீடுகள் போல தோற்றமளிக்கும்மனிதர் வாழவே இயலாத நிலையிலான குடியிருப்புகளில் குடும்பங்கள் வாழ்வது மிக துயரமாக உள்ளது. அரை செண்ட் நிலத்தில் கலெக்டரோ, தாசில்தாரோ குடும்பத்துடன் மலையடிவாரத்தில் வசிப்பார்களா என்பதை கலெக்டர் தான் சொல்லவேண்டும். இப்படியான வஞ்சகத்தை அதிகாரவர்க்கம் ஏழை பழங்குடி மக்களுக்கு நிகழ்த்திவருவது அருவருப்பான ஒன்று. அதிகாரவர்க்கம் மக்கள் மீதான எவ்வித அக்கரையற்று இருப்பது மட்டுமல்ல, மாறாக பழங்குடிகள் விரோதமாக செயல்படுகிறது. து.ஆட்சியர், தாசில்தார் என பலரால் புறக்கணிக்கப்பட்ட இப்பழங்குடிகள் இந்நிலத்தின் பூர்வகுடிகள். உழைக்கும் இப்பூர்வகுடிகள் இதற்கு பிறகும் புறக்கணிக்கப்படுவார்களெனில் சனநாயக விரோத நிலையை அதிகாரிகள் மேற்கொள்வதாகவே நாம் உணரவேண்டியவர்களாகிறோம். அப்படி தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு அலைக்கலைக்கப்பட்டால் மக்கள் விடுதலை முன்னணி தோழர்களுடன் இணைந்து மே 17 இயக்கம் மக்கள்திரள் போராட்டங்களில் பங்கேற்கும்.
இதே நிலையில் வெப்பாரை, மேற்குபாறைமேடு, செல்லப்பிள்ளை கரடு, சுள்ளொமேட்டுபதி, மாணிக்கம்மூலை, KPM காலனி ஆகிய இதேபகுதியில் இருக்கும் இரவாள பிரிவு பழங்குடி மக்கள் போதிய போக்குவரத்து, சாலை , குடியிருப்பு, விவசாய நிலமற்ற நிலையில் வாழ்கிறார்கள். ஆகவே இம்மக்கள் சுயமரியாதையோடு வாழும் வகையில், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் பின்வரும் கோரிக்கைகளை வைக்கிறோம். குறைந்தபட்சம் 2 ஏக்கர் விவசாய நிலமும், 5 செண்ட் குடியிருப்பு நிலத்தையும் வழங்க தமிழக திமுக அரசும், மாண்புமிகு முதல்வர் அவர்களும் ஆவண செய்யவேண்டுமென கோரிக்கை வைக்கிறோம்.அண்ணலின் 131வது பிறந்தநாளான சமத்துவநாளிலாவது விடியலை ஏற்படுத்தி மகிழ்ச்சியை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டுமென அம்மக்களின் கோரிக்கையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இச்செய்தியை தோழமைகள் பகிர வேண்டுகிறோம்
தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்