






ஈழத்தமிழர்கள் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக புகலிடம் தேடி தமிழ்நாடு வருகிறார்கள். போரினால் இடம்பெயர்வது போன்று பொருளாதார நெருக்கடியினாலும் உலகெங்கும் மக்கள் இடம்பெயருகிறார்கள். வடமாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களும் இவ்வகையான மனிதர்களே. ஆனால் வடமாநில மக்கள் இடம்பெயர அனுமதிக்கும் இந்திய ஒன்றிய அரசு, ஈழத்தமிழர்களை சட்டவிரோத குடியேறிகளாகவே வகைப்படுத்துகிறது. இன்று இவர்களை சிறையில் அடைக்கவும் சொல்கிறது. தமிழ்நாடு அரசும் ஈழத்தமிழர்களுக்குரிய உதவி மையங்களை ஏற்படுத்தாமல் கைது செய்து சிறையில் அடைப்பது மனித உரிமைக்கு எதிரானது, நேர்மையற்றது, மனித நேயத்திற்கு எதிரானது. கண்டனத்திற்குரியது.
இனவெறியினால் தமிழர்கள் பகுதி வளர்ச்சியற்றதாகவும், ராணுவ மயமாகவும், அடக்குமுறை நிலமாகவும் மாறிய ஈழம், இலங்கையின் பொருளாதார சிக்கலினால் மேலும் சீரழிவிற்கே உள்ளாகும். கிடைக்கும் நிவாரணங்கள் கூட சிங்களப் பேரினவாதிகளின் கருணையின்றி சாத்தியமில்லாத நிலையிலேயே தமிழக கடற்கரையில் கால் பதிக்கிறார்கள், உயிர்பிழைக்க தமிழ் மண்ணிற்கு வரும் தமிழினத்தினை குற்றவாளிகள் போல நடத்துவது தமிழரின் மாண்பிற்கு இழுக்கானது. இந்திய அரசின் தமிழர் விரோத வெளியுறவுக்கொள்கையினை கேள்வி எழுப்பாதவரை தமிழரின் சுயமரியாதை கேள்விக்குட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். ஈழம் குறித்தான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்விக்குட்படுத்தாமல், இதன் நேர்மையற்ற தன்மையை மாற்ற இயலாது.
இந்நிலையில், இன்றய ஆங்கில ‘தி இந்து’ நாளிதழ் தனது தலையங்கத்தில் எழுதி இருப்பது மிருகத்தன்மையானது, நேர்மையற்றது. அப்பத்திரிக்கை எழுதியிருப்பதானது ‘….காரணம் எதுவாக இருப்பினும், கள்ளத்தனமாக தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் மூலமாக பொருட்கடத்தலோ, ஆள்கடத்தலோ, அல்லது இரு நாடுகளிலும் உணர்ச்சிகளையோ ஏற்படுத்தாவன்னம் இருதரப்பு அதிகாரவர்க்கமும் நட்ந்து கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக இரு நாடுகளின் வெளியுறவு உறவுகளுக்கு எரிச்சலூட்டும் மீன்பிடி பிரச்சனையை தீர்க்கப்பயன்படுத்தவேண்டும்’ என எழுதி இருக்கிறது.
கைக்குழந்தைகளுடன் வந்திருங்கிய தமிழர்கள் மீது மனிதத்தன்மையற்று தனது வன்மத்தினை கொட்டுகிறது ‘தி இந்து’. இவர்களை கடத்தல்காரர்களாகவும், போதை கடத்துபவர்களாக்வும் பார்க்கச் சொல்லும் ’தி இந்து’ நாளிதழின் இனவெறிக்கும், ஐரோப்பாவிற்குள் நுழைய முயலும் ஆப்பிரிக்க, ஆசிய அகதிகளை கடலில் தத்தளிக்க விடும் ஐரோப்பிய வெள்ளை இனவெறிக்கும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை.
இதில் கொட்டித்தீர்க்கப்பட்டிருக்கும் பார்ப்பனிய தமிழின விரோத வன்மத்தினையும், சிங்களப்பேரினவாதத்திற்கு ஆதரவாக எழும் குரலையும் தமிழினம் எப்போது கவனிக்குமென தெரியவில்லை. இந்து நாளிதழின் வழியே தமிழின விரோத அரசியலை 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் இந்த சாதிய வன்மத்தினை தந்தைப் பெரியார் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்திருக்கிறார். மே17 இயக்கம் இந்த நாளிதழின் அரசியலையும், தமிழினப்படுகொலையில் இப்பத்திரிக்கையின் பங்கினையும் அம்பலப்படுத்தியே தனது முதன்முதற் நிகழ்வை 2009 அக்டோபரில் துவக்கியது. அன்றிலிருந்து இன்று வரை சமரசமற்று இந்த நாளிதழின் தமிழின விரோதத்தினை அம்பலப்படுத்தி வந்திருக்கிறோம். ஆனால் இக்குழுமத்தினையும், இவர்களது படைப்புகளையும் புனிதமாகவும், முற்போக்கானதாகவும் போற்றும் அடிமைத் தனத்தினையும் நாம் தமிழகத்தில் பார்க்கிறோம்.
இங்குள்ளவர்களில் சிலரே தமிழக, ஈழத்தமிழர்களை இருவேறாக பார்த்து பிரிவினையை உருவாக்குகின்றனர்.ஆனால் பார்ப்பனியம் தமிழர்களை தமது வன்மத்தினால் தொடர்ந்து வீழ்த்தவே விரும்புகிறது. இச்சதியை மே17 இயக்கம் சமரசமற்று தொடர்ந்து எதிர்த்து நிற்கும்.
தோழர் திருமுருகன் காந்தி,
ஒருங்கிணைப்பாளர்,
மே பதினேழு இயக்கம்