குறிஞ்சாங்குளத்தில் சாதிவெறியர்களை கைது செய்து, காலங்காலமாக பட்டியலின மக்கள் வணங்கி வரும் காந்தாரிம்மனை அதே இடத்தில் வணங்கும் உரிமையை உறுதி செய்க! மே பதினேழு இயக்கம்.
தென்காசி மாவட்டத்திலுள்ள குறிஞ்சாங்குளம் எனும் ஊரில் 1992 ஆம் ஆண்டு பட்டியலின மக்கள் தங்களது தெய்வமான காந்தாரியம்மனுக்கு சிலை அமைத்து கோவில் கட்டி வழிபட முயன்றபோது, சாதிவெறியர்கள் அதனை தடுத்து நிறுத்தியதோடு நான்கு பட்டியல் இன மக்களை கொடூரமாக கொலையும் செய்தனர். கொலையாளிகள் அனைவரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். ஆனால் இன்றுவரை அங்கு தங்கள் தெய்வத்தை வழிபடும் உரிமையை பட்டியலின மக்களுக்கு வழங்காமல் சாதிவெறியர்களோடு சேர்ந்துக்கொண்டு அரசும், அதிகார வர்க்கமும் தடுக்கிறது.
இந்நிலையில் கொல்லப்பட்ட தங்களது உறவுகளை நினைவு கூரும் விதமாகவும், தங்களது தெய்வத்தை வழிபடவும் பட்டியலின மக்கள் பல்வேறு அரசியல் கட்சியினரோடு இன்று முயற்சி செய்தபோது போராடியவர்களை கைது செய்திருக்கிறது காவல்துறை.
தமிழக மண்ணில் இருக்கும் யாவருக்கும் தங்களது தெய்வத்தை தொட்டு வழிபட அனைத்து உரிமைகளும் இருக்கும்போது, குறிஞ்சான்குளம் பட்டியலின மக்களுக்கு மட்டும் அதை 30ஆண்டுகளுக்கும் மேலாக மறுக்கும் செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது. சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டிற்கே இது அவமானகாரமானதாகும். இந்த கொடுமையை ஒழிக்க சனநாயக ஆற்றல்கள் ஓரணியில் திரண்டு சாதிவெறியர்களுக்கு எதிராக அணியமாக வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு உடனடியாக இதில் தலையிட்டு சாதி வெறியர்களை கைது செய்து, தங்களது அடிப்படை உரிமையான காந்தாரியம்மனை அதே இடத்தில் வழிபடும் உரிமையை பட்டியலின மக்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டுமென மே17 இயக்கம் கோரிக்கை வைக்கிறது.