சர்வதேச பெண்கள் தினம் – மார்ச் 8

சர்வதேச பெண்கள் தினம் – மார்ச் 8

மனித சமூகத்தில் ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் உள்ள பெண்கள், ஆண்களுக்கு சமமான உரிமை பெற்று வாழ முடியவில்லை என்ற எதார்த்த உண்மையை பொதுவுடமை சித்தாந்தம் நாடுகள் பேச தொடங்கியதற்கு பின்பு பெண்களுக்கான உரிமை பற்றிய பேச்சும், எழுச்சியும் எழத் தொடங்கியது. அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

வலதுசாரி கருத்தினை ஏற்றுக் கொண்ட எந்த ஒரு நாடும் பெண்கள் உரிமை பற்றியும், பெண் விடுதலைப் பற்றியும் பேசியது இல்லை என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு. 1896-ல் கோத்தா நகரில் நடைபெற்ற ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் பேராயத்தில் ”பாட்டாளி வர்க்க மகளிர் இணைந்து செயல்படுவ தன் மூலம் மட்டுமே சோசலிசம் வெற்றியடைய முடியும்” என்று தோழர் கிளாரா ஜெட்கின் பேசினார்.

1919-ம் ஆண்டு புரட்சியாளர் லெனின் அவர்கள் சர்வதேச உழைக்கும் பெண்கள் தின நிகழ்ச்சியில் பேசும்பொழுது “முதலாளித்துவக் குடியரசில் (அதாவது நிலம், தொழிற்சாலைகள், பங்குத் தொகைகள் முதலியவற்றில் தனிச் சொத்துரிமை இருக்கின்ற நாட்டில்), அது எவ்வளவு – அதிகமான ஜனநாயகம் உள்ள நாடாக இருந்த போதிலும், உலகத்தின் எந்தப் பகுதியிலும், அதிகமான முன்னேற்றமடைந்த நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் கூட, பெண்களுக்கு ஆண்களோடு முழு அளவுக்குச் சமமான உரிமைகள் எந்தக் காலத்திலும் இருக்கவில்லை.” என்று கூறினார்.

1917-ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சிக்கு பின்பு ரஷ்யாவில் தான் பெண்களுக்கு எதிராக இயற்றப்பட்டு வந்திருந்த அடிப்படைவாத சட்டங்கள் அடியோடு துடைத்து எறியப்பட்டன. இதுபற்றி புரட்சியாளர் லெனின் அவர்கள் கூறும் பொழுது “சோஷலிசத்துக்கு மாறுகின்ற போது எந்தத் தொழிலாளர் அரசுக்கும் இரட்டைக் கடமை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அந்தக் கடமையின் முதற் பகுதி ஒப்புநோக்கில் சாதாரணமானதாகவும் சுலபமானதாகவும் இருக்கிறது. ஆண்களோடு ஒப்பிடும் பொழுது பெண்களைத் தாழ்வானவர்களாக வைத்திருந்த பழைய சட்டங்களைப் பற்றியதே அது.” என்றார். பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் சொத்துரிமை தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன் பின்னரே முதலாளித்துவ நாடுகளும் இதுபோன்ற சட்டங்களை இயற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஜோதிராவ் புலே, சாவித்திரி புலே மற்றும் அண்ணல் அம்பேத்கர் முதலியோர் வட இந்தியாவிலும், தந்தை பெரியார் முதலான திராவிட இயக்கத் தலைவர்கள் தென்னிந்தியாவிலும் பெண்ணுரிமை பற்றியும், பெண் விடுதலை பற்றியும் பெரும் முயற்சிகளை எடுத்தனர். பாவேந்தர் பாரதிதாசன் தனது பாடலில் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

பெண்களால் முன்னேறக் கூடும்-நம்
வண்தமிழ் நாடும் எந் நாடும்!
கண்களால் வழிகாண முடிவதைப் போலே!
கால்களால் முன்னேற முடிவதைப் போலே!
பெண்ணிகளால் முன்னேறக் கூடும்!

பெற்றநல் தந்தைதாய் மாரே,-நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண் கல்வியாலே,-முன்
னேறவேண் டும் வைய மேலே!
பெண்களால் முன்னேறக் கூடும்!

குறிப்பாக பெண்களின் சொத்துரிமை தொடர்பாகவும், பெண்களின் திருமண உரிமை தொடர்பாகவும், இந்தியாவில் இந்து சனாதன தர்மத்தின் அடிப்படையில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் சமூக அநீதியான தேவதாசி முறை ஒழிப்பு தொடர்பாகவும், பெண் சிசுக்கொலை தடுப்பு தொடர்பாகவும், பெண்களின் ஓட்டுரிமை சார்ந்தும் தந்தை பெரியார், முத்துலட்சுமி அம்மையார் போன்ற தலைவர்களின் பெருமுயற்சியால் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.

பெண் குழந்தைகளின் கல்விக்காக தமிழ்நாடு எங்கும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று பெண்களின் கல்வி கற்கும் விகிதாச்சாரம் ஆண்களைவிட அதிகமாக இருப்பதை நம்மால் காண முடிகிறது. ஆனால் இத்தகைய மாற்றங்கள் கூட சமூகத்தில் ஆணுக்கு இணையாக பெண்கள் இருப்பதற்கான எந்த ஒரு வழியையும் செய்வதற்கில்லை. எனவே பெண்களுக்கான உரிமை போராட்டம் என்பது வெறும் சீர்திருத்த நடவடிக்கைகளால் மட்டுமே போய்விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். புரட்சியாளர் லெனின் அவர்களும், தந்தை பெரியாரும் கூறியதைப் போல பெண்களுக்கான விடுதலையை பெண்களே போராடிப் பெறவேண்டும் என்பதே இதற்கான தீர்வாக அமைய முடியும்.

சர்வதேச பெண்கள் தினமான இன்று ‘பெண் விடுதலையே மண் விடுதலை’ எனும் மேதகு பிரபாகரனின் வரிகளை நினைவுபடுத்தி பெண்விடுதலையை முன்னெடுக்க அணியமாவோம்

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply