யுக்ரென் பலியாக்கப்படுவதாக மட்டுமே செய்தியை ஊடகங்கள் பரப்புவதை பார்க்கமுடிகிறது. இந்நிலையில் மேலதிக தகவல்கள் நமக்கு சூழலை புரிய உதவும்.
யுக்ரேனின் கிழக்குப்பகுதியின் டான்பாஸ், லுகான்ஸ்க் பகுதி பெரும்பான்மை ரசிய இனமக்களைக் கொண்டது. இப்பகுதியிலிருந்து அதிபரானவரை 2014ல் அமெரிக்கா சார்பு, நாஜிக்குழுக்கள், பாசிஸ்டுகள், மேற்குலக ஆதரவு ஆற்றல்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வெளியேற்றினார்கள். மேலும் ரசிய இனமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு 14,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் 2015ல் உக்ரேன் அரசுடன் ரசிய பேச்சுவார்த்தை நடத்தி ஜெர்மனி, ப்ரான்ஸ் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் ரசிய இனமக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படுவது முதல் அம்மக்களின் தன்னாட்சி கோரிக்கையை ஏற்று உக்ரேனுடன் இணைந்த பகுதியாகவும், பாதுகாப்புடன் ரசிய இனமக்கள் வாழும் வகையில் எல்லைப்புறக்கொள்கையை உருவாக்க வேண்டுமெனும் ரசியாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
தன் இனமக்கள் வாழும் பகுதிக்கான பாதுகாப்பையும் பாரம்பரியமாக ரசியா-யுக்ரேன் நாடுகளுக்கிடையேயான உறவினை பாதுகாப்பதையும் உறுதிப்படுத்த வேண்டுமென ஒப்பந்தத்தின் நோக்கமாக அமைந்தது. இதை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்பட்ட Organization for Security and Cooperation (OSCE) எனும் குழு மேற்பார்வையிட வேண்டுமெனப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை யுக்ரேனின் பாசிச, இனவெறி, நாஜிக்குழுக்கள் தடுத்தன. இதன் பின்னனியில் நேட்டோ, அமெரிக்க-இங்கிலாந்து தலையீடுகள் இருந்தன.
இந்நிலையில், ரசிய இனமக்கள் வாழும் பகுதியில் பெருமளவு யுக்ரேன்-நாஜிப்படை ராணுவம் குவிக்கப்பட ஆரம்பித்தது. ரசிய இனமக்கள் 60 லட்சம் பேர்வசிக்கும் இப்பகுதியை காக்கவேண்டுமென தொடர்ந்து ரசியா வலியுறுத்தியதை யுக்ரேன் செவிமெடுக்கவில்லை. இந்த மக்களில் 12 லட்சம் பேர் ரசிய குடியுரிமைக்கு கோரும் நிலை உருவானது. ஏனெனில் டான்பாஸ் பகுதி மக்கள் 1990களில் தம் பகுதிக்கு உரிய ஆட்சி அதிகாரப்பகிர்வு கோரி இருந்தனர். தங்கள் மொழி ஆட்சிமொழியாக வேண்டுமென்றனர். கூட்டாட்சி கொண்டு வரப்பட வேண்டுமென்றனர். இதற்கான பொதுவாக்கெடுப்பில் 90% மக்கள் ஆதரவாக வாக்களித்த போதும், இவை புறக்கணிக்கப்பட்டது.
மாறாக, இதன் பொருளாதார வளர்ச்சி நிராகரிக்கப்பட்டது. அரசு திட்டங்கள் புறக்கணிக்கபட்டன. வளமான இப்பகுதி கடும் நெருக்கடியை சந்தித்தது. இதற்கு யுக்ரேனின் தேசியவாத, பெரும்பான்மை மன ஆதிக்க நிலையே காரணமானது. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தோன்றி இம்மக்களை அச்சுறுத்தியது. இச்சூழலில் யுக்ரேனின் ராணுவம்-நாஜி-பாசிச படைகளால் டான்பாஸ் பகுதி மக்கள் இனப்படுகொலையாகும் நிலை வந்த சமயத்திலேயே ரசியா படையை எல்லையில் குவித்தது. யுக்ரேன் படைக்குவிப்பை சொல்லாத நம் ஊடகங்கள் ரசியாவின் படை நகர்வினை மட்டுமே காட்டின.
இப்படியான மோசமான மனித உரிமை மீறல் ரசிய இனமக்கள் மீது நடக்க இருக்கும் நிலையை அமெரிக்கா-இங்கிலாந்து மறைத்து ரசியாவின் படைக்குவிப்பை மட்டுமே மையப்படுத்தி போர் பதட்டத்தை திட்டமிட்டு உருவாக்கினார்கள். OSCE குழுவின் தோல்வியே இந்நிலைக்கு காரணம் என்பதால் இதில் பொறுப்பு வகித்த ஜெர்மன், பிரான்ஸ் அரசுகள் அமைதிகாத்தன. பிரான்ஸ் ஒருபடி மேலே சென்று, அமெரிக்கா தவிர்த்த முடிவுகளை நாம் எடுக்கவேண்டுமென ஐரொப்பிய ஒன்றியத்தில் பேசியது. ரசியாவின் படையெடுப்பின் பின்னால் இருக்கும் இந்த அரசியலை மறைத்தே ஊடகங்கள் இங்கு யுக்ரேன் ஆதரவு குரலை எழுப்புகிறது.
டான்பாஸ் நிலையே 2007இல் ஈழத்திலும் இருந்தது. இலங்கை-தமிழீழ அமைதி ஒப்பந்தத்தை மேற்பார்வையிடும் நார்வே-ஸ்வீடன் நாடுகளின் பிரதிநிதிகள் கண்முன்னே இலங்கை ஒப்பந்தத்தை மீறி ஈழத்தின் மீது போர் தொடுத்தது. அச்சமயத்தில் போர் நிறுத்தத்தை பலமுறை ஈழ தன்னாட்சி அரசு கோரியது. இனப்படுகொலை நிகழ வாய்ப்பிருப்பதை அமைதிக்குழு Sri Lankan Monitoring Mision (SLMM), ஐ.நா-யுனிசெப், செஞ்சிலுவை உள்ளிட்ட அமைப்புகள் அறிந்திருந்தன. இதனாலேயே புலிகள் தலைமையிலான தமிழீழ தன்னாட்சி அரசு இந்த அமைப்புகள் வெளியேற வேண்டாமென கோரிக்கை வைத்தும், போர்நிறுத்தத்தை இலங்கையிடம் வலியுறுத்துமாறு சர்வதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகளை கோரியது.
தன்னாட்சி பிரதேசமானது இலங்கை தீவிக்குள்ளாக தமிழர்களின் பாதுகாப்பையும், சுயாட்சியையுமே முன்வைத்தது. இலங்கை அமைதி ஒப்பந்தத்தை முறித்தால் தமிழர் இனப்படுகொலை நடக்குமென அறிந்தும் SLMM இலங்கையை தடுக்காமல் அமைதிகாத்தது. குரல் எழுப்பி இருக்க வேண்டிய நார்வேயின் எரிக்சோல்ஹேம் இன்றுவரை கள்ளமெளனம் காக்கிறார். தமிழினப்படுகொலையை தடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு இருந்தது.
2009 மே15ம் தேதி இனப்படுகொலை தடுப்பு ஐநா தலைமை பொறுப்பாளர் எச்சரிக்கை அறிக்கையை உலகிற்கு கொடுக்கிறார். மே14ம் தேதி குழந்தைகள் பாதுகாப்பு ஐ.நா அதிகாரியும் இவ்வாறே எச்சரிக்கை வெளியிடுகிறார். இது போன்ற நிலையே கிழக்கு உக்ரேனில் டான்பாஸில் இருக்கும் ரசிய இனமக்களுக்கு நிகழும் நிலை என்பதால் ரசியா அரசு, இந்தியாவை போல, எரிக்சோல்ஹேம் போல இனப்படுகொலை நடக்க அனுமதிக்காமல் முன்னகர்கிறது. இலங்கைக்கு பின்னே அமெரிக்கா-இங்கிலாந்து நின்றது. இன்று யுக்ரேன் பின்னால் நிற்கிறது.
இதை உணரவேண்டுமெனில் பாலஸ்தீனத்திற்கு நார்வேயால் முன்னெடுக்கப்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம் குப்பையில் போடப்பட்டது. ஈழத்திற்கு நார்வே முன்னெடுப்பால் ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம் இனப்படுகொலையில் முடிந்து இன்றும் தொடர்கிறது. டான்பாஸ் மக்களுக்காக மின்ஸ்க்கில் போட்ட ஒப்பந்தம் குப்பையில் போட முடியாதவாறு யுக்ரேன் மீது போர் நடக்கிறது. இந்த அடிப்படைகளை ஊடகம் மறைக்கிறது. இந்த உண்மைகளை மறைக்கவே பாலஸ்தீனர்கள் தீவிரவாதிகள் எனப்பட்டார்கள், யாசர் அரபாத் படுகொலையானார். இதனாலேயே புலிகளை பயங்கரவாதிகள் என்றார்கள், சுப.தமிழ்ச்செல்வவன், நடேசன், புலித்தேவன், இசைப்பிரியா, பாலச்சந்திரன் உள்ளிட்டோர் படுகொலையானார்கள்.
வரலாறை அறியாமல் உண்மை விளங்காது. உண்மை விளங்காமல் அரசியல் பிடிபடாது. அரசியல் பிடிபடவில்லையெனில் பாசிஸ்டுகளோடு நம்மையறியாமல் ஒன்றுசேறும் துயரம் நிகழும். இதற்கான அடிப்படைகளை அறியும் நூல்களை நிமிர் அரங்கில் வைத்திருக்கிறோம். வாருங்கள், வாசித்து வரலாறு அறியுங்கள்.
– தோழர் திருமுருகன் காந்தி