












அருந்ததியரின் உடல் பொதுப்பாதையில் எடுத்துச் செல்லப்பட்டு சுயமரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவதை வீரளூர் மக்களுடன் இணைந்து உறுதி செய்த மே பதினேழு இயக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தின் பட்டியலின அருந்ததியர் சமூக மக்களின் இறந்தவர் உடலை பொதுப்பாதையின் வழியே மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவ்வூரை சேர்ந்த ஆதிக்க சாதியினர், கடந்த ஜனவரி 16 அன்று அருந்ததியர் மக்கள் மீது கடும் சாதிவெறி தாக்குதலை நிகழ்த்தினர். இது குறித்த கள ஆய்வு மேற்கொண்ட மே பதினேழு இயக்கம் அதன் அறிக்கையை 28-01-22 அன்று சென்னையில் வெளியிட்டது. இந்நிலையில், 28ம் தேதி அதே ஊரை சேர்ந்த மற்றொருவர் இறந்துவிட, அவரது உடலை மயானத்திற்கு பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முடியுமா என்றதொரு பதட்டமான சூழல் நிலவியது.
இறந்தவர் உடலை பொதுப்பாதையில் எடுத்துச் சென்று சமூகநீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு அரசு உறுதி செய்யவில்லையெனில் வீரளூர் அருந்ததியர் மக்களுடன் இணைந்து மே பதினேழு இயக்கம் அதனை செய்து முடிக்கும் என்று 28ம் தேதி நடைபெற்ற கள ஆய்வு அறிக்கை வெளியீட்டின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்கம் உறுதிபட கூறியது. அந்நிகழ்வில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும் வீரளூர் மக்களுடன் களத்தில் நிற்போம் என்று உறுதியளித்தனர். இந்நிகழ்விற்கு முன்பே, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் இந்த கருத்தினை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து மே பதினேழு இயக்கம் உறுதிபட இருப்பதாக பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் வீரளூர் கிராமத்தில் இன்று (29-01-22) நடைபெற்ற சூழலில், மே பதினேழு இயக்கம் உறுதியளித்தபடி, ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் தலைமையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் வீரளூர் கிராமத்திற்கு சென்றனர். தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் அரங்க குணசேகரன் அவர்களும் உடன் வந்திருந்தார். பல்வேறு முற்போக்கு அமைப்புக்களுடன் இணைந்து இறந்தவர் உடல் பொதுப்பாதையில் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சுயமரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவதை வீரளூர் அருந்ததியர் மக்களுடன் இணைந்து மே பதினேழு இயக்கம் உறுதி செய்தது. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் இறந்தவர் உடலானது நல்லடக்கம் செய்யப்பட்டது.
மே பதினேழு இயக்கம்
9884864010