மே பதினேழு இயக்கத்தையும் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியையும் தாக்கி தொடர்ச்சியாக யூடியூப் தளத்தில் காணொலிகள் வெளியிட்டு தனிப்பட்டரீதியில் அவதூறு பரப்பி வந்த ஆர்எஸ்எஸ்-பாஜக ஆதரவாளரும் வலதுசாரி இந்துத்துவ சிந்தனையாளருமான மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மே பதினேழு இயக்கம் சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 21-12-2021 செவ்வாய் அன்று, விடுதலைத் தமிழப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தபெதிக சென்னை பொறுப்பாளர் தோழர் குமரன் மற்றும் திவிக சென்னை பொறுப்பாளர் தோழர் உமாபதி ஆகியோருடன் தோழர் திருமுருகன் காந்தி, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம் சென்று, மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து மாரிதாஸ் மீது புகாரளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தோழர் திருமுருகன் காந்தி, மாரிதாஸ் என்பவரது காணொளிகளில் பொதுவாக மே பதினேழு இயக்கத்திற்கும் சில தீவிரவாதி அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக முழுக்க முழுக்க பொய்யான தகவல்களை கூறி மே பதினேழு இயக்கம் பிரிவினைவாததை தூண்டும் இயக்கம் என்றும் மே பதினேழு இயக்க இழிவுபடுத்தியும், மே பதினேழு இயக்கத்தின் சமூக போராட்டங்களுக்கு தவறான கற்பிதம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறினார்.
மேலும், திராவிட இயக்கங்கள் தவறானவை என்றும், பிரிவினைவாதத்தை தூண்டுபவை என்றும், திராவிட கட்சிகள் தவறானவை என்றும், திராவிட ஆட்சி அமைப்பு மக்களுக்கு எதிரானது என்றும் பொய் பரப்பி வருவதாகவும், கடந்த 50 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களையும் நற்பெயரினையும் அழித்து அதற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து காணொளிகளை பதிவேற்றம் செய்து வருவதாகவும் கூறினார்.
மாரிதாஸ் தனது காணொளிகளின் மூலம் பொது அமைதிக்கு தீங்கு விளைவித்து சமுதாயத்தில் அமைதியின்மை ஏற்படுத்தி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக கலவரம் ஏற்படுத்தி சமூதாய அமைதியை குலைப்பதை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.இதனடிப்படையில், மே 17 இயக்கத்தின் மீதும், தோழர் திருமுருகன் காந்தி மீதும் பொய்யான தகவல்களை கொண்டு உண்மைக்கு மாறான காணொளிகளை பதிவேற்றம் செய்து, அதன் மூலம் தோழர் திருமுருகன் காந்திக்கும் அவரை சார்ந்த நபர்களுக்கும் மற்றும் மே 17 இயக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்த முயல்வதற்கும், தனது காணொளிகள் மூலமாக தமிழர் அரசியல் மீது நம்பிக்கையின்மை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் சமூக அமைதியை குலைக்க விளைவிக்க முயலும் மாரிதாஸ் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டது.
மே பதினேழு இயக்கம்