கூடங்குளம் அணுஉலை விரிவாக்க நடவடிக்கைகளை உடனே தடுத்து நிறுத்தவும் ஆபத்தான அணுக்கழிவுகளை அங்கே புதைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பு

கூடங்குளம் அணுஉலை விரிவாக்க நடவடிக்கைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், ஆபத்தான அணுக்கழிவுகளை அங்கே புதைக்கக் கூடாது என்று மேதா பட்கர் அவர்கள் தலைமையில் பல்வேறு தமிழக அரசியல் கட்சிகளின் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (டிசம்பர் 13, 2021) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்றார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

பத்திரிக்கை செய்தி

————————–

கூடங்குளம் அணுஉலை விரிவாக்க நடவடிக்கைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், ஆபத்தான அணுக்கழிவுகளை அங்கே புதைக்கக் கூடாது!

மேதா பட்கர் அவர்கள் தலைமையில் பல்வேறு தமிழக அரசியல் கட்சிகளின் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றிய அரசிடம் கோரிக்கை!

*****

இரண்டு பூதாகரமான தரமற்ற ரஷ்ய அணுஉலைகளே எதிர்காலத்தை அழித்துவிடும் என்று தமிழக மக்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் (2011 செப்-2014 இறுதி) தொடர்ச்சியாக, தீர்க்கமாகப் போராடியதைப் புறந்தள்ளி, இன்று கூடங்குளத்தில் 3, 4, 5, 6, என மென்மேலும் அணுஉலைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. அனைத்துமே 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட மிகப் பெரிய அணுஉலைகள்.

இவற்றுள் முதலிரண்டு உலைகளுமே இன்றுவரை திறம்பட இயங்கவில்லை; முழு அளவில் மின்சாரம் தயாரிக்கவில்லை. பல்வேறு குளறுபடிகளாலும், தொழிற்நுட்பக் கோளாறுகளாலும் அவை திணறிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

இந்த நிலையில் மேலும் 7, 8 அணுஉலைகளும், அணுக்கழிவு மையங்களும், அணுக்கழிவு மறுசுழற்சி மையமும் (reprocessing plant) அமைக்கப்படவிருப்பதாகச் செய்திகள் கசிகின்றன.

நடப்புக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடங்குளம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு 09/12/2021 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஜித்தேந்திரா சிங், சில உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

கூடங்குளம் உள்ளிட்ட அணுமின் நிலையங்களில் அமைக்கப்படும் அணுக்கழிவு மையங்கள் நிலநடுக்கங்களையும், சுனாமியையும்கூட எதிர்கொண்டு பாதுகாப்பாக இயங்க முடியுமென்றும், அணுக்கழிவு மையங்களால் அணுமின் நிலைய ஊழியர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் என யாருக்கும் எந்தவிதக் கேடும் உருவாகாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ‘பூவுலகின் நண்பர்கள்’ 2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், அணுக்கழிவு மையங்கள் (Away From Reactors –அணுஉலைக்கு அகலே) அமைப்பதற்கான தொழிற்நுட்பம் தங்களிடம் இல்லை என்று 2018-ஆம் ஆண்டு இந்திய அணுமின் கழகம் எழுத்துபூர்வமாக ஆவணம் ஒன்றை சமர்ப்பித்து, கூடுதல் கால அவகாசம் கோரியது. அந்தக் காலக்கெடு எதிர்வரும் 2022 மே மாதம் முடிவடைகிறது. ஒன்றிய அரசும், அதன் அணுசக்தித் துறையும் இப்படி முற்றிலுமாக திரித்துப் பேசுவது ஓர் அறமற்ற, ஆபத்தான மக்கள்விரோதச் செயல்.

மிக ஆபத்தான அணுக்கழிவுகளை நிரந்தரமாகப் புதைத்து நெடுங்காலம் பாதுகாக்கும் ‘ஆழ்நிலக் கருவூலம்’ (Deep Geological Repository) நிர்மாணிப்பதைப் பொறுத்தவரை, இந்தியா ‘மூடப்பட்ட எரிபொருள் சுழற்சி’ (closed fuel cycle) முறையைப் பின்பற்றுவதால், அணுக்கழிவு ஒரு “வளப் பொருள்” (material of resource) என்று சொல்லியிருக்கிறார் அமைச்சர். மறுசுழற்சிக்குப் பிறகு குறைந்த அளவே உயர்நிலைக் கழிவுகள் இருக்குமென்றும், “அணுக்கழிவை தனிப்படுத்தல், பிரித்தல் மற்றும் எரித்தல் தொழிற்நுட்பங்களை” (technologies for separation, partitioning and burning of waste) இந்தியா உருவாக்கிக் கொண்டிருப்பதால், ஆழ்நிலக் கருவூலத்திற்கானத் தேவை அண்மைக்காலத்தில் எழாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பல பத்தாண்டுகளாக கல்பாக்கத்தில் கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும், இதுவரை தொடங்கப்படாமலே தத்தளிக்கும், நிரூப்பிக்கப்படாத தொழிற்நுட்பமான “அதிவேக ஈனுலைகளை” (Fast Breeder Reactors) வெற்றிகரமாக இயக்கினால்தான், இந்தியா அணுஉலைக் கழிவுகளை ‘மூடப்பட்ட எரிபொருள் சுழற்சி’ (closed fuel cycle) முறையில் கையாள்கிறது என்று சொல்ல முடியும். அமைச்சர் சொல்லியிருப்பது முற்றிலும் தவறான, மக்களைத் திசைதிருப்பும் தகவல்.

இந்தியா பெரு புதிய தொழிற்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அமைச்சர் சொல்கிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கப் போராட்டக் குழுவினர் மாண்புமிகு இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் பார்த்து முறையிட்டபோது, அப்போதைய இந்திய அணுமின் கழக (NPCIL) தலைவர் திரு. எஸ். கே. ஜெயின் அணுக்கழிவுகளை உருக்கி கண்ணாடிப் பந்துகளாக மாற்றி நம் வீட்டு வரவேற்பறைகளில் வைக்கும் தொழிற்நுட்பம் நம்மிடம் இருப்பதாக பிரதமரிடமே உண்மைக்குப் புறம்பான தகவலைச் சொன்னார். இப்போது நாம் கேட்பது முற்றிலும் மாறுபட்ட தொழிற்நுட்பமாக இருக்கிறது.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட இயக்கங்கள் கீழ்க்காணும் கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் உறுதிபட முன்வைக்கின்றன:

[1] கூடங்குளத்தில் திறம்பட இயங்காதிருக்கும் முதல் இரண்டு அணுஉலைகளில் நடைபெற்றிருக்கும் மாபெரும் ஊழல்கள், முறைகேடுகள், ஆபத்துக்கள் பற்றியெல்லாம் ஒரு சார்பற்ற விசாரணை நடத்தி ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். முழு உண்மைகளை மக்களுக்குச் சொல்லும்வரை, விரிவாக்கப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும்.

[2] ரஷ்யாவோடான 1997 அக்டோபர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூடங்குளம் அணுஉலைகளில் எரிக்கப்படும் எரிகோல்களை ரஷ்யாவுக்கேத் திருப்பி அனுப்பவேண்டும்.

[3] இந்தியாவில் ‘ஆழ்நிலக் கருவூலம்’ எங்கேக் கட்டப்போகிறோம் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்த பிறகே, கூடங்குளத்தில் ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பைக் கட்டுவது குறித்து மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்த வேண்டும். மேற்படி இடைநிலை அணுக்கழிவு மையங்களை நிர்மாணிக்கும் வரை, கூடங்குளத்தில் 3, 4, 5, 6 அணுஉலைகள் கட்டுவதை நிறுத்திவைக்க வேண்டும்.

[4] தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைக்கப்படும் கூடங்குளம் அணுஉலைப் பூங்கா, வடக்குப் பகுதியில் நிறுவப்படும் கல்பாக்கம் அணுஉலைப் பூங்கா, மத்தியப் பகுதியில் நிர்மாணிக்கப்படும் தேவாரம் நியூட்ரினோத் திட்டம் போன்றவற்றைக் கைவிட்டு, நம் மாநிலத்தை “அணுத்தீமையற்றத் தமிழ்நாடு” (Nuclear-free Zone Tamil Nadu) என்று அறிவிக்க வேண்டும்.

மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு,

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,

பூவுலகின் நண்பர்கள்,

அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

டிசம்பர் 13, 2021

Leave a Reply