
அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் அனுமதித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மக்கள் விரோத இராணுவ நடவடிக்கைகளை விக்கிலீக்ஸ் இணையத்தளம் மூலம் அம்பலப்படுத்தியவர் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இதற்காக அமெரிக்காவும், ஸ்வீடன் நாட்டின் பாலியல் குற்றச்சாட்டில் இங்கிலாந்தும் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. கிட்டதட்ட 7 ஆண்டுகளாக லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த அவரை, கடந்த 2019 ஏப்ரல் மாதம் லண்டன் காவல்துறை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த லண்டன் மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அதில் அமெரிக்காவிற்கு எதிரான தீர்ப்பு வரவே, அமெரிக்கா லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மேல்முறையீட்டு வழக்கில் தான் கீழமை நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்து, தற்போது அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த அனுமதித்துள்ளது.
கொலராடோவில் உள்ள ஏடிஎக்ஸ் என்னும் உச்சபட்ச பாதுகாப்பு சிறையில் சிறைப்படுத்த மாட்டோம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரது சொந்த நாடான ஆஸ்திரேலியாவில் தண்டனை காலத்தை கழிப்பார் என்று அமெரிக்கா உறுதியளித்துள்ளதன் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்கா வைக்கும் குற்றச்சாட்டிற்கு 175 ஆண்டுகள் வரை அசாஞ்சேவிற்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
இது அசாஞ்சேவை நாடு கடத்தும் அமெரிக்காவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதேவேளை, இததீர்ப்பை வழங்கிய நீதிபதி, அசாஞ்சே நாடு கடத்தப்பட வேண்டுமா இல்லையா என்று பிரிட்டன் அரசு முடிவெடுப்பதற்கான வழிமுறைகளை வழங்க வேண்டும் என்று கூறி வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு வழக்கை நகர்த்தியுள்ளார். அசாஞ்சே தரப்பும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளனர்.
2007 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் நிகழ்த்திய போர்க்குற்றங்களின் காணொலிகளை 2010-இல் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் அசாஞ்சே வெளியிட்டார். அதே போன்று ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களையும் வெளியிட்டார். அசாஞ்சே வெளிக்கொணர்ந்த போர்க்குற்றங்கள் அமெரிக்கா-இங்கிலாந்து அரசுகளை நெருக்கடிக்குள்ளாக்கின. இம்மாதிரி அரசின் பொய், போலி நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் புலனாய்வு ஊடகவியலாளர் அசாஞ்சே மீதான இத்தீர்ப்பானது ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது.
இலண்டன் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாள்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அசாஞ்சேவை கொலை செய்ய முயற்சித்த நாட்டிற்கே திருப்பி அனுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த வகையில் இவர் மீது நடத்தப்படும் இம்மாதிரி ஒடுக்குமுறைகள் அரச பயங்கரவாதத்தை வலுப்படுத்தும். இந்த தீர்ப்பு மனித உரிமை நாளில் வெளியானது முரணான செய்தியாக உலகெங்கும் உள்ள மக்கள் உரிமை செயற்பாட்டாளர்கள், முற்போக்கு ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலாகவே இந்த நகர்வுகள் வந்துள்ளன.
மே பதினேழு இயக்கம்
98848640