மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு பொது இடத்தில் மரியாதை செலுத்த மறுப்பு! தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65வது நினைவு நாளையொட்டி கடந்த 6 ம் தேதி நாடு முழுவதும் அண்ணலின் சிலைக்கு, படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறை அடுத்துள்ள பட்டவர்த்தி என்னும் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் அம்பேத்கர் படத்தை வைத்து மரியாதை செலுத்த முயற்சித்த போது சாதிவெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதை தடுத்து நிறுத்தும் இம்முயற்சியை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர். அவரது சீரிய முயற்சியினாலேயே பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூக மக்களும், பெண்களும் உரிமைகளை பெற்றுள்ளனர். அவரை அனைத்து சமூக மக்களும் தலைவராக ஏற்றுக்கொண்டு கொண்டாடிவரும் வேளையில், ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கான தலைவராக சித்தரிக்கும் வகையில் சில சாதிவெறியர்கள் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு கலவரங்களை தூண்டி வருகின்றனர். அப்படியான பின்னணியிலேயே மயிலாடுதுறை சம்பவத்தை பார்க்க வேண்டியதாக உள்ளது.
பிறந்த நாளின் போதும், நினைவு நாளின் போதும் தலைவர்களுக்கு பொது இடத்தில் மரியாதை செலுத்துவது என்பது மரபாக நடைபெற்று வரும் நிகழ்வு. இதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறி காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாற்ற முயல்வது சாதியவாதிகளுக்கு துணை போகும் செயலாகும். காவல்துறையில் உள்ளவர்கள் சாதிய எண்ணத்தோடு செயல்படுவதோடு, சட்டம் தந்த மாமேதையை சாதிய கண்ணோட்டத்தில் அணுகுவதையே இது காட்டுகிறது. காவல் பணியின் நோக்கம், மக்களை அணுக வேண்டிய விதம், செயல்பாடுகள் குறித்து காவல்துறையினருக்கு உரிய உளவியல் பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மயிலாடுதுறை பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்த வந்தவர்களையும், சாதிய கண்ணோட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்களையும் ஒரே தராசில் வைத்து பார்க்க கூடாது. அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்த வந்தவர்களை சாதிய கண்ணோட்டத்துடன் தாக்கி கலவரத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இனிவரும் காலங்களில் அம்பேத்கர் சிலைக்கோ, படத்திற்கோ மரியாதை செலுத்துவதற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010