கோவை சின்மயா பள்ளியின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி பலி! பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடு!

கோவை சின்மயா பள்ளியின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி பலி! பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடு! – மே பதினேழு இயக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் தொடர்ந்து கொடுத்து வந்த பாலியல் தொல்லை காரணமாக அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த பொன் தரணி என்ற பெண் குழந்தை உயிரை மாய்த்துள்ளார். மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு காரணம், பாலியல் புகார் அளித்தும் மிதுன் சக்கரவர்த்தி மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததே என்னும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்தும், அரசியல் தொடர்புகள் மூலம் தப்பிக்க முயலும் பள்ளி நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மே பதினேழு வலியுறுத்துகிறது.

இறந்து போன பொன் தரணி என்கிற மாணவி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் 12-ஆம் வகுப்பிற்கு இயற்பியல் பாடம் எடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பொன் தரணிக்கு இயற்பியல் பாடம் எடுக்கும் மிதுன் சக்கரவர்த்தி கடந்த மார்ச் மாதம் முதல் பொன் தரணியிடம் தொடர்ந்து தவறாக நடந்துள்ளார். சிறப்பு வகுப்பு என அழைத்து வகுப்பு முடிந்ததும் மற்ற மாணவ மாணவிகளை அனுப்பிய பின்னர் பொன் தரணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பள்ளி முதல்வர் மீரா அவர்களிடம் பொன் தரணி புகாரளித்தும் அவர் மிதுன் சக்கரவர்த்தி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மாணவி மீது தான் தவறு உள்ளது என்று கூறி அவருக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியும் அதே பள்ளியில்தான் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரிடம் இது குறித்து மாணவி தெரிவித்தபோது அவர் என் கணவர் அப்படிப்பட்டவர் அல்ல என்று கூறி மாணவி சொல்வதை ஏற்க மறுத்துள்ளார். நீ தான் மிதுன் சக்கரவர்த்தியுடன் பழகி இருக்கிறாய் என்று கூறி பொன் தரணியை பள்ளி முதல்வர் மிரட்டி இருக்கிறார். நீதி கிடைக்காத நிலையில் மாணவி பள்ளியைவிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளியேறி வேறு பள்ளியில் படித்து வந்திருக்கிறார். பள்ளியை விட்டு நின்ற பின்பும் மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்திருக்கிறார். பள்ளியினால் அநீதி இழைக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்த பாலியல் தொல்லை காரணமாக பொன் தரணி தற்கொலை செய்து கொண்டார்.

பாலியல் தொல்லை காரணமாக பொன் தரணி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வெளிவந்து பல்வேறு சனநாயக அமைப்புகளின் போராட்டத்தின் விளைவாக காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதிலும் பள்ளி நிர்வாகம் குறித்து கூறப்பட்ட பல்வேறு புகாரை தவிர்த்துவிட்டு வழக்கு பதிவு செய்து மிதுன் சக்கரவர்த்தியை மட்டும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாஜக தலைவர்களுடன் பள்ளி நிர்வாகிகள் கொண்டுள்ள அரசியல் தொடர்பு காரணமாக, இந்த பிரச்சனையில் பள்ளி நிர்வாகிகளை தப்ப வைக்கும் முயற்சிகளில் காவல்துறை ஈடுபடுகிறது. இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் வந்து சென்ற பின்பு பொன் தரணி குடும்பத்தினரை காவல்துறையினர் மிரட்டியதாக கள ஆய்வில் ஈடுபட்ட தோழர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளிக் குழந்தைகள் மீது பள்ளியில் நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் சமீபகாலமாக அதிகரித்தவண்ணம் உள்ளன. சில மாதங்கள் முன்பு சென்னை பத்மா சேசாத்திரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் குற்றச் சம்பவம் வெளிவந்து குற்றச்செயலில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்ததோடு முடிந்தது. தொடர்ந்து வெளிவந்த பல்வேறு பள்ளிகளின் பாலியல் குற்றச் சம்பவங்களின் இன்றைய நிலை என்னவென்று தெரியவில்லை. அனைத்து குற்றச்சாட்டுகளிலும் பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தது அம்பலமாகியும், பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. அப்போதே பத்மா சேசாத்திரி பள்ளி உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று கோவை சின்மயா வித்யாலயா பள்ளியில் இப்படியான பாலியல் குற்ற சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கு மீண்டும் அதே தவறு நடைபெறுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கு பள்ளி நிர்வாகம் கொண்டுள்ள அரசியல் தொடர்புகள் மிக முக்கிய காரணியாக உள்ளன. குறிப்பாக சென்னை பத்மா சேசாத்திரி மற்றும் கோவை சின்மயா வித்யாலயா பள்ளிகளின் நிர்வாகிகள் பாஜக தலைவர்களுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளனர். பெண் கல்வியை மறுக்கும், பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும், ஒடுக்கப்பட்ட பெண்கள் மீதான உயர்சாதி ஆண்களின் பாலியல் குற்றங்களை நியாயப்படுத்தும் பார்ப்பனிய சிந்தனையோட்டத்தை கொண்ட இத்தகைய பள்ளி நிர்வாகிகள், தங்கள் பள்ளிகளில் நிகழும் பாலியல் குற்றங்களை ஒரு போதும் தடுக்கப்போவதில்லை. மாறாக, பள்ளியின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்று குற்றச்செயலை மூடிமறைக்கும் செயல்களிலேயே ஈடுபடுகின்றனர்.

சின்மயா பள்ளியில் நடைபெற்ற பாலியல் குற்றம் ஒரு குழந்தையின் உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. இதனை மிதுன் சக்கரவர்த்தி என்ற குற்றவாளியுடன் முடித்துவைப்பது மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற ஊக்குவிக்கும். பொன் தரணி தற்கொலை வழக்கில் சின்மயா பள்ளி நிர்வாகிகள் மீது, குறிப்பாக முதல்வர் மீரா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இறந்த பொன் தரணியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவும், குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

பள்ளிகளிலேயே பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களை தடுக்க பாதுகாப்பு குழு ஏற்படுத்தும் வகையிலும், பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையிலும் பள்ளிகளில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும். சென்னை பத்மா சேசாத்திரி பள்ளி, கோவை சின்மயா வித்யாலயா உட்பட பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகங்களிடமிருந்து பள்ளியை கைப்பற்றி அரசே நடத்த வேண்டும். தனியார் பள்ளிகள், குறிப்பாக சிபிஎஸ்சி பள்ளிகள் தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கைகளுக்கு உட்பட்டு செயல்படுவதையும், நிர்வாகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதையும் உறுதி செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply