இல்லம் தேடி கல்வி என்பது ஆர்.எஸ்.எஸ். வளரவே உதவும். இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்க! – மே பதினேழு இயக்கம்
தமிழ்நாடு அரசு சார்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள, ‘கற்பித்தல் பணிக்காக தன்னார்வத் தொண்டர்களை பயன்படுத்திக்கொள்ளுதல்’ என்னும் கூற்றின் மறுவடிவமாக அமைந்துள்ளதை காண முடிகிறது. ஆர்எஸ்எஸ் தொண்டர்களை கொண்டு இந்துத்துவ கருத்தியலை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் இந்த முறை மிகவும் ஆபத்தானது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மனுதரும சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட குலக்கல்வித் திட்டத்தின் நவீன வடிவமாக 2020-ம் ஆண்டு மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இந்த கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போது, மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு முழுக்க பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் என மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு முற்போக்கு, சனநாயக அமைப்புகள் புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்ததன் விளைவாக, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதை அன்றைய அதிமுக அரசு தவிர்த்தது.
புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதாக புதியதாக பதவியேற்ற திமுக அரசு அறிவித்து, தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என முதளமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். ஆனால், சமீபகாலமாக பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதை காண முடிகிறது.
புதிய கல்விக் கொள்கையில் உள்ள கற்றல், கற்பித்தல் முறையில் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது என்ற அடிப்படையில், கடந்த அதிமுக ஆட்சியின் போது அகஸ்தியா என்ற தொண்டு நிறுவனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. திமுக ஆட்சியிலும் அது தொடர்ந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், அரசின் கொள்கைக்கு மாறாக எந்த நிறுவனம் செயல்பட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று கூறினார்.
அதேபோல், கொரோனா கால கற்றல் குறைபாட்டை கண்டறியும்படி 3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு NAS எனப்படும் தேசிய திறனறித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள 3, 5, 8, 10 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறையை பின்பற்றி கொண்டு வரப்பட்டதாகும். மாணவர்களை தரம் பிரித்து தொழிற்கல்வி பயிற்சி என்ற குலக்கல்வித் திட்டத்தை திணிக்கும் இந்த திறனறித் தேர்வின் மூலம் பெறும் மதிப்பெண் மாணவர் தேர்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு விளக்கம் கொடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த தன்னார்வலர்களை கற்றல், கற்பித்தலுக்கு அனுமதிப்பது, ஆர்எஸ்எஸ்-பாஜக கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரு திட்டமே. தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதில், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் மட்டும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. எனில், கற்றல், கற்பித்தல் முறையில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுமென்றால், அது ஏதோ ஒரு வகையில் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நிறுவனமாகவே இருக்கும். அப்படியென்றால், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் ஆஎஸ்எஸ் கண்ட கனவுத் திட்டமாக அமைத்திடும் நிலை உருவாகியுள்ளது.
‘இல்லம் தேடி கல்வி’ திட்டம், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களையும், 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அனுமதிப்பது மிகவும் ஆபத்தான முடிவாகும். இதன் மூலம் ஆர்எஸ்எஸ் தனது இந்துத்துவ கருத்துக்களை மாணவர்களிடையே திணித்திட வழிவகுக்கும். தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் தகுதித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் போது, கற்பித்தலுக்கு எவ்விதத்திலும் தொடர்பற்ற தன்னார்வலர்களை பயன்படுத்துவது நேரெதிர் விளைவுகளையே உண்டாக்கும். மேலும், இல்லம் தேடி கல்வி கற்றுக்கொடுக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நிலை மோசமான நிலையில் இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு முற்றிலும் நிராகரித்துள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலான மாற்றுத் திட்டங்கள் பள்ளிக் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுவது கண்டனத்திற்கு உரியதாகும். தமிழ்நாட்டிற்கென கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அப்படியான கல்விக் கொள்கை ஏதும் உருவாக்கப்படாத நிலையில், பள்ளி கல்வித்துறையில் அரசு பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இல்லையென்றால், தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லையா? இல்லை, பள்ளி கல்வித்துறை ஆஎஸ்எஸ் சார்பு அதிகாரிகளால் இயக்கப்படுகிறதா?
தமிழ்நாடு அரசு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக தமிழ்நாட்டில் புகுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கென கல்விக் கொள்கை உருவாக்கப்படும் வரை பள்ளி கல்வித்துறையில் புதிய திட்டங்கள் கொண்டுவருவதை அனுமதிக்கக்கூடாது என்றும், இதுவரை கொண்டுவரப்பட்ட திட்டங்களை திரும்பப் பெற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மாநில சுயாட்சியை நோக்கி நகர வேண்டிய சூழலில், ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களை மாவட்ட நிர்வாகங்களை போல நடத்த துவங்கியுள்ளது சனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அப்படியான பாசிச திட்டத்தின் ஒரு பகுதியாக ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை இருக்கும் போது, அதன் தாக்கம் தமிழ்நாட்டில் எள்ளளவும் ஏற்படக்கூடாது என்பதே சனநாயகத்தை விரும்புவோரின் எண்ணமாக உள்ளது. புதிய கல்விக் கொள்கை தடுத்து நிறுத்தப்படுவதோடு, கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வருவதற்காக முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அதுவே ஒன்றிய அரசின் அச்சுறுத்தல்களிலிருந்து நம்மை காப்பாற்றும்.
மே பதினேழு இயக்கம்
9884864010