டில்லியில் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ராபியா சைஃபி என்ற இளம்பெண்ணிற்கு நீதி வழங்கிடு

டில்லியில் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ராபியா சைஃபி என்ற இளம்பெண்ணிற்கு நீதி வழங்கிடு! – மே பதினேழு இயக்கம்

டில்லி காவல்துறையில் பணிபுரிந்து வந்தவர் ராபியா சைஃபி. 21 வயது இஸ்லாமிய இளம்பெண்ணான இவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, மிக மோசமான நிலையில் உடல் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆனால், காவல்துறையை சேர்ந்த ஒருவரது கொலையை காவல்துறையே மூடி மறைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ராபியா சைஃபி கொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும், இத்தகைய கொடூரமாக செயலை செய்த உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

ராபியா சைஃபி கடந்த ஆகஸ்ட் 27 அன்று காணாமல் போயுள்ளார். மூன்று நாட்களுக்கு பிறகு ஃபரிதாபாத் நகர் அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அப்போது அவரது உடல் மிகக் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அவரை குறைந்தது 4 நபர்களாவது கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. உடலில் 50-க்கும் மேற்பட்ட கத்தி குத்துகள் உள்ளன. உடல் கிழிக்கப்பட்டுள்ளது. மார்பகங்கள் வெட்டப்பட்டுள்ளன. பெண்ணுறுப்பு மிக மோசமான நிலையில் சிதைக்கப்பட்டுள்ளது. இப்படியான கொடூர செயலை கண்ட பிறகும் காவல்துறையும், ஊடகங்களும் இதில் கவனம் செலுத்தவில்லை என்பது தான் அதிர்ச்சியளிக்கிறது.

இந்த செய்தி வெளியுலகிற்கு தெரிந்த பிறகு, ஒருவர் தன்னை ராபியா சைஃபியின் கணவர் என்றும், தான் தான் அவரை கொன்றதாகவும் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். ஆனால் ராபியா சைஃபிற்கு திருமணம் நடைபெறவில்லை என்றும், இதன் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளதென்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். காவல்துறை இந்த வழக்கில் முக்கியத்துவம் செலுத்தாததும், செய்தி ஊடகங்களின் புறக்கணிப்பும் இதன் பின்னால் மிகப்பெரிய சதி இருப்பதையே உணர்த்துகிறது. அவரது பணியில் ஏற்பட்டுள்ள சிக்கலே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

டில்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எவ்விதத்திலும் இச்சம்பவம் குறைந்ததில்லை. ஆனால், அச்சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தில் சிறிதளவு கூட இச்சம்பவம் ஏற்படுத்தவில்லை என்பது அதிர்ச்சிக்குறியதாக உள்ளது. இஸ்லாமியர் என்பதாலேயே அவர் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும், குற்றவாளி இஸ்லாமியர் என்றால் சிறு பிரச்சனையை கூட பெரியளவிற்கு மாற்றும் பாஜக மற்றும் அதன் சார்பு ஊடகங்கள் அமைதியாக இருப்பது நம் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

பெண்கள் மீதான குற்றங்கள் முறையாக விசாரிக்கப்படுவதும் இல்லை, குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்றுத்தருவதும் இல்லை. குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர். இதனாலேயே பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்கின்றன. மேலும் இசுலாமிய பெண் என்பதால் இக்கொலை இந்திய ஊடகத்தில் முக்கியத்துவம் பெறவில்லை என்பது அவமானத்திற்குரியது.

ராபியா சைஃபி கொல்லப்பட்டது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அவரது கொலையில் சதி இருப்பதும் தெரியவருகிறது. இதன் பின்னணியை ஆராய்ந்து உண்மை குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. நிர்பயா சட்டம் கொண்டு வந்த பின்பும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது, தண்டனையால் மட்டுமே குற்றங்களை தடுத்துவிட முடியாது என்பதையே காட்டுகிறது. பெண்களை மதிக்கும் வகையில் சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்குவது மட்டுமே தீர்வை வழங்க முடியும். அதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply