‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் அவர்கள் பிறந்தநாள் – 5.9.1872
ஆங்கிலேய ஆட்சிக்கு முதல் எதிர்ப்பை வரலாற்றில் பதிவிட்ட போராட்டம் வேலூர் புரட்சி என்றால், ஆங்கிலேயர்களின் பொருளாதார சுரண்டலை எதிர்த்து தற்சார்பு பொருளாதார செயல் திட்டத்தை முன்னெடுத்ததும் தமிழராகிய வ.உ.சிதம்பரனார் அவர்களே.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் பகுதில் பிறந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றவர். 1894-ம் ஆண்டு வழக்கறிஞர் பட்டம் பெற்று, 1895-ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இலவயமாக வாதாடினார்.
1908-ம் ஆண்டு நடந்த கோரல் நூற்பாலை நிறுவனத்தின் தொழிலாளிகள் முன்னெடுத்த 9 நாள் வேலை நிறுத்தம் ஆங்கிலேயர்களை நிலைகுலைய செய்தது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது, மிகக் குறைந்த கூலி தருவது, விடுமுறை நாட்கள் தடுப்பது போன்ற பல தொழிலாளர் விரோத செயல்கள் கோரல் ஆலையில் நடைபெற்றன. உச்ச கட்டமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை வாங்கப்பட்டு தொழிலாளர்கள் உழைப்பு சுரண்டப்பட்டது. கையில் கைரேகை பார்க்க இயலும் காலை நேரம் முதல், மாலை நேரம் வரை நூற்பாலை ஓட்டியதால் ‘ரேகை பார்த்து ஓட்டுதல்’ என்றே இந்த கொடுமை அழைக்கப்பட்டது.
இவற்றை எதிர்த்து தொழிலாளர்களை திரட்டி வேலைநிறுத்ததில் ஈடுபட்டார் வ.உ.சியார் 9 நாள் நடைபெற்ற போராட்டத்தில் பெரிய நிதி திரட்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அளித்ததன் காரணத்தினால், அந்த வேலை நிறுத்தத்தின் வீரியம் குறையாமல் பார்த்துக் கொண்டார். வேலைநிறுத்தத்தினை தடுக்க இயலாத ஆங்கிலேய அரசு போராட்டத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது.
இந்தியாவின் செல்வ வளங்களை கொள்ளையடிக்கும் ஆங்கிலேய அரசை எதிர்த்து பேசத்தொடங்கிய வ.உ.சியார் அவர்கள், ‘பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்ற ஆங்கிலேய கப்பல் சரக்கு & போக்குவரத்து நிறுவனத்தை எதிர்த்து ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ (நாவாய் – பெரும் கப்பல்) என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதன் மூலம் 2 கப்பல்களை வாங்கி இலங்கை இந்தியா இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்கினார். இது ஆங்கிலேய அரசுக்கு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து வ.உ.சியார் மீது தேசத்துரோக வழக்கு ஆங்கிலேய அரசால் பதியப்பட்டது. அவரது கப்பல் நிறுவனம் முடக்கப்பட்டது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் கொடுமையான தண்டனையாக மாடுகளால் இழுக்கப்படும் செக்கு ஒன்றை தனி மனிதராக இழுக்க வேண்டும் என்று கொடுமை படுத்தப்பட்டார்.
இவ்வளவு சிரமங்கள் பட்டும் விடுதலை ஆனபோது வ.உ.சியார் அவர்களுக்கு அவர் பங்காற்றிய காங்கிரஸ் கட்சி உரிய மரியாதை தரவில்லை. தன் இறுதி காலத்தில் பெரும் தமிழ்த் தொண்டாற்றிய வ.உ.சியார் அவர்கள் பெரும் வறுமையில் வாடினார். ஆனால் தமிழ்ச் சமூகம் திரு வ.உ.சியார் அவர்களை ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று வரலாற்றில் பதிவிட்டது. இன்றளவும் ஆங்கிலேயர்களின் பொருளாதாரக் கொள்ளையை எதிர்த்த முதல் நபர் தமிழரே என்று புகழ் பாடியது.
சிறை மீண்ட பின் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆய்வு செய்த வ.உ.சிதம்பரனார் திருக்குறளுக்கு தெளிவுரை எழுதியதோடு, திருக்குறளின் 3 அதிகாரங்களை இடை செருக்கலாக இருக்கக்கூடும் என்றும் அறிவித்தார்.
பெரியாரோடு வ.உ.சிதம்பரனார் அவர்களின் கொள்கை இசைவு வியக்கத்தக்க அளவில் இருந்தது. பெரியாரின் சாதி பெயர் மறுப்பை முன்வைத்து தான் பெயருக்கு பின்னால் சாதிப்பெயரை மறுத்தார். பெரியாரை தன் “தலைவர்” என்று பெரியார் முன்னிலையில் வ.உ.சிதம்பரனார் முன்மொழிய, பெரியாரும் அதை பணிவோடு மறுத்தார். காங்கிரஸ் கட்சியின் பார்ப்பன ஆதிக்கத்தை வ.உ.சிதம்பரனார் உள்ளிருந்தே கடுமையாக எதிர்த்தார்.
ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் ஈகம் தமிழ்தேசிய அரசியலுக்கு அடிப்படையான தத்துவமாகும். ஏகாதிபத்திய பொருளாதார சுரண்டலை எதிர்க்காத அரசியல் இம்மண்ணுக்கு தேவையற்றது என்று உணர்த்திய ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010