நீட் எதிர்ப்பு நாள் – தங்கை மருத்துவர் அனிதா அவர்கள் நீட் எனும் நவீன மனுநீதியால் படுகொலை செய்யப்பட்ட நாள் (01-09-2017)
பார்ப்பனர்களிடமும், சமஸ்கிருதம் படித்த உயர் சாதியினரிடமும் மட்டுமே சிக்கிக் கிடந்த மருத்துவ படிப்பானது நீதிக்கட்சியின் காலத்தில் ஐயா பனகல் அரசர் அவர்களின் ஆட்சியில் அனைத்து சமூக மக்களும் படிக்கும் வண்ணம் விடுவிக்கப்பட்டது. அன்று முதல் இம்மண்ணின் மக்கள் மருத்துவம் பயில தொடங்கியதன் விளைவே இன்றும் தமிழ்நாடு மருத்துவ குறியீட்டில் இந்திய ஒன்றிய மாநிலங்களில் முதல் இடத்தை பெற்று வருகிறது.
இந்துத்துவ பார்ப்பனிய கட்சியான பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் பார்ப்பனிய கட்சியான காங்கிரஸ் முன் மொழிந்த நீட் தேர்வு என்னும் ‘அனைத்து இந்திய மருத்துவ கல்லூரிகளுக்கும் ஒற்றை நுழைவு தேர்வை’ 2017-ம் ஆண்டு தமிழ்நாட்டின் மீது திணித்தது. அன்று ஆட்சியில் இருந்த அடிமை அதிமுக அரசின் தமிழர் விரோத போக்கால் அந்த திணிப்பும் மக்களின் பெரும் எதிர்ப்பையும் மீறி செயல்படுத்தப்பட்டது.
நீட் அறிமுகப்படுவதற்கு முன் ஏழை-எளிய-கிராமப்புற- பட்டியலின-அரசு பள்ளியில் மாணவச் செல்வங்களுக்கு கிடைத்துவந்த மருத்துவப் படிப்பு பிறகு எட்டாகனியாக மாறிப்போனது. குறிப்பாக நீட் பயிற்சி மையங்களில் பல இலட்சங்கள் செலவு செய்து பயிலும் வாய்ப்புள்ள பணம் படைத்த, நகரங்களில் வசிக்கும் உயர் சாதி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றாயிற்று.
அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவமணிகளில் அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தை சேர்ந்த குழந்தை அனிதாவும் ஒருவர். பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஏழை சுமை தூக்கும் தொழிலாளியின் மகளும், பண்ணிரெண்டாம் வகுப்பில் 1200-க்கு 1176 என்ற சிறந்த மதிப்பெண் இலக்கை அடைந்தவருமான தங்கை அனிதா, நீட் தேர்வால் தன் மருத்துவ கனவை அடைய முடியாமல் மனமுடைந்தார்.
அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மக்கள் இதயங்கள் அனைத்தையும் தட்டி தனக்கான நீதியை கேட்ட தங்கை அனிதா கடைசியான இந்திய ஒன்றியத்தின் உச்ச அதிகார நிலையான உச்ச நீதிமன்றத்தின் கதவையும் தட்டினார். ஆனால் இந்திய ஆரிய பார்ப்பன இந்துத்துவத்தின் 2000-ம் வருட சாதி வெறி ஏறிய காதுகளில் ஒரு சிறு குழந்தையின் உரிமைக்குரல் கேட்கவில்லை.
மனதில் கொண்ட மருத்துவக் கனவை தள்ளி வைக்க முடியாமலும், சாதி வெறியும், வர்க்க வெறியும் ‘ஆனந்த தாண்டவம்’ ஆடும் இந்த சமூகத்தில் வாழப் பிடிக்காமலும் தூக்கிட்டு தன் உயிரை இழந்து நீட் எனும் நவீன மனுநீதியின் கொடூரத்தை நமக்கெல்லாம் உணர்த்தினார்.
இந்த கொடுமைக்குப் பிறகும் பார்ப்பனிய சமூகம் அவர் மரணத்தை கேலி செய்தது. “அனிதா மருத்துவப் படிப்புதான் படிக்க வேண்டுமா? வேற ஏதும் படிப்பே இல்லையா?” என்று ‘கீதா உபதேசம்’ செய்தது. மேலும் “ஏழை மாணவி என்றாயே? உச்ச நீதிமன்றம் செல்ல பணம் எங்கிருந்து வந்தது?” என்று பார்ப்பன கும்பல் கேட்டபோது, மே பதினேழு இயக்கம் “அப்படியென்றால் உங்கள் உச்ச நீதிமன்றம் பணம் படைத்தவர்களுக்கு மட்டும்தானா? ஏழைகள் அங்கே செல்லக்கூட முடியாது என்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்தது.
தங்கை அனிதா மரணம் ‘தற்கொலை’ அல்ல; அது பார்ப்பனியத்தின் பச்சைப் படுகொலை. அனிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு கொதித்த தமிழ்நாட்டு மக்கள் ‘மருத்துவர் அனிதா’ என்று முழங்கி தங்கள் மனதில் அவரை மருத்துவராகவே நிலைநிறுத்தினார். அவரின் நினைவுநாளை ‘நீட் எதிர்ப்பு நாள்’ என்றும் முழக்கமிட தொடங்கினர்.
இந்திய ஒன்றியத்தின் கோரப்பிடியில் சிக்கிக் கிடக்கும் தமிழ்நாட்டின் கல்வி சார்ந்த உரிமைகள் அனைத்தும் நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கையால் பறிபோகின்றன. மருத்துவப் படிப்பு மட்டும் மல்லாமல் பொறியியல், சட்டம், கலை-அறிவியல் பட்ட படிப்புகளுக்கும் நீட் தேர்வை திணிக்க பாஜக முயல்கிறது. “சூத்திரர்கள் படிக்கக் கூடாது” என்ற மனுநீதியும், “உழைக்கும் வர்க்கம் உழைக்க மட்டுமே செய்யவேண்டும்” என்ற முதலாளிய வர்க்க நீதியும் ஒருங்கே இயங்கும் நீட் தேர்வும், அதை செயல்படுத்தும் புதிய கல்விக் கொள்கையும் ‘கல்வி எங்கள் அடிப்படை உரிமை’ என்ற சமூகநீதிக்கு எதிரானது.
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் போராடி பெற்று தந்த கல்வி உரிமை என்னும் பெருங்கனவை ‘இந்துத்துவா’ என்னும் கறையான் அரிக்கிறது. அதை தடுக்க சாதி, மதம் கடந்து தமிழர்களாய் ஒன்றிணைவோம்; நீட் என்னும் நவீன தீண்டாமையை தமிழ்நாட்டில் இருந்து அறுத்து எறிவோம் என்று மே பதினேழு இயக்கம் சூளுரைக்கிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010