தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத் தலைவர் தோழர் மதிவண்ணன் மீதான தாக்குதலை கண்டிக்கின்றோம்!

தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத் தலைவர் தோழர் மதிவண்ணன் மீதான தாக்குதலை கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்

ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தின் அறிவுஜீவி தளத்தில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் மிக முக்கிய தோழரும், எழுத்தாளரும், தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத் தலைவருமான தோழர் மதிவண்ணன் (Mani Mathivannan) அவர்கள் மீது இந்து முன்னணியை சேர்ந்த இந்துத்துவ தீவிரவாதிகள் கொலைமுயற்சி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப் போராளி ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி கடந்த 20ம் தேதி இரவு ஈரோடு மாவட்டம் குட்டைமேடு கிராமத்திற்கு சென்றிருந்த போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. தோழர் மதிவண்ணன் மீதான இந்த தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 20 (20-08-2021) அன்று விடுதலைப் போராளி ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம் சார்பாக மேற்கு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வீரவணக்க கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக அன்றிரவு ஈரோடு மாவட்டம் உலகடம் அருகேயுள்ள குட்டைமேடு கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பங்கேற்க நிர்வாகிகளுடன் தோழர் மதிவண்ணன் சென்றிருந்த போது, அங்கு ஏற்கனவே தகராறு செய்துகொண்டிருந்த இந்து முன்னணியை சேர்ந்த இந்ததுவ குண்டர்கள், தோழர் மதிவண்ணன் சென்றுகொண்டிருந்த கார் மீது கல்லை வீசி கொலைமுயற்சி தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தோழர் மதிவண்ணன் சென்ற காரின் கண்ணாடி முழுவதுமாக சேதமடைந்த நிலையில் அவர் காயமின்றி தப்பினார்.

அம்பேத்கரிய, பெரியாரிய, இடதுசாரி சிந்தனையோட்டத்தில் செயல்படும் தோழர் மதிவண்ணன் அவர்கள் தமிழ்நாட்டின் சிறந்த அறிவுஜீவிகளில் ஒருவராக கருதப்படுகிறார். ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து செயலாற்றி வரும் தோழர் மதிவண்ணன், தலித் விடுதலைக்காக கட்டுரைகள், கவிதைகள், புத்தகங்கள் என எண்ணற்ற படைப்புகளை வழங்கியுள்ளார். அவரது படைப்புகள் இந்துத்துவத்திற்கு எதிரான வாதங்களை தொடர்ந்து முன்வைக்கின்றன. தோழரது முற்போக்கு கருத்துகள் , செயற்பாடுகள் மக்கள் மதவெறி-சாதிவெறிக்கு பலியாகமல் தடுக்கும் பணியை செய்வதால் இந்துத்துவவாதிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக வெள்ளித் திருப்பூர் காவல்நிலையத்தில் புகாரளித்த போது காவல்துறையினர் அதனை ஏற்க மறுத்துள்ளனர். பின்னர் புகாரை ஏற்றுக்கொண்டு சுமார் ரூ.50 மதிப்புடைய கண்ணாடி சேதமடைந்ததாக 194பி என்ற சாதாரணப் பிரிவில் வழக்கு பதிந்துள்ளனர். ஒண்டிவீரன் நினைவு வீரவணக்கக் கூட்டம் என்ற பங்கேற்க வந்த தமிழ்நாட்டின் முக்கிய சிந்தனைவாதிகளில் ஒருவரான தோழர் மதிவண்ணன் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலை சாதாரண வழக்காக பதிவு செய்து காவல்துறையினர் இந்து முன்னணியினருக்கு துணை போயியுள்ளனர். தமிழ்நாட்டில், குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் காவல்துறையினர் இந்துத்துவ கும்பலுக்கு துணைபோவதை தொடர்ச்சியாக காண முடிகிறது. காவல்துறையில் சாதியவாத, மதவாத இந்ததுத்துவ கருத்துக்கள் புரையோடி போயிருப்பதையே இது காட்டுகிறது.

இந்துத்துவ சிந்தனையோட்டத்திற்கு எதிராக செயல்படும் முற்போக்கு சிந்தனையாளர்களை கொலை செய்வதும், சிலர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபடுவதையும் மோடி அரசு பதவியேற்றதற்கு பிறகான காலத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதை காண்கிறோம். அப்படியான தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாக தோழர் மதிவண்ணன் மீதான தாக்குதலை பார்க்க முடிகிறது. அம்பேத்கரிய, பெரியாரிய, இடதுசாரி சிந்தனைகளை தொடர்ச்சியாக மக்களிடையே கொண்டுசெல்வதை இந்துத்துவ தீவிரவாதிகள் கடும் அச்சுறுத்தலாக காண்கின்றனர் என்பதையே தோழர் மதிவண்ணன் மீதான தாக்குதல் உறுதி செய்கிறது.

மேற்கு மாவட்டங்களில் செறிவாக காணப்படும் அருந்ததியர் சமூகத்தினரிடையே பிளவை உண்டு பண்ணும் வேலையை ஆர்எஸ்எஸ்-பாஜக தொடர்ச்சியாக செய்து வருகிறது. அருந்ததியர் சமூகத்தினரை இந்துத்துவவாதிகளாக மாற்றுவதற்கு தோழர் மதிவண்ணன் போன்ற முற்போக்கு சக்திகள் தடையாக உள்ளனர். இதனாலேயே, பெரியாரிய அம்பேத்கரிய கருத்துக்களை பேசிவரும் தோழர் மதிவண்ணன் அவர்களை குட்டைமேட்டில் நடைபெற்ற ஒண்டிவீரன் நினைவு வீரவணக்கக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என்று இந்து முன்னணியினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்ச் சமூகத்தில் பிளவை உண்டாக்க முயலும் இந்து முன்னணியினரின் இது போன்ற தமிழின விரோத செயல் மிகவும் ஆபத்தானது.

தமிழ்நாட்டில் தலைதூக்கி வரும் இந்துத்துவ தீவிரவாதம் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். இது போன்ற தொடர் குற்ற செயலில் ஈடுபடும் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகளை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட வேண்டும். குற்ற செயலில் ஈடுபட்ட இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு துணை போகும் காவல்துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.

சமூகநீதி மண்ணில், குறிப்பாக சமூகநீதியை முன்னிறுத்தும் திமுக ஆட்சியில் சமூகநீதி பேசிவரும் தோழர் மதிவண்ணன் மீதான தாக்குதல் எளிமையாக கடந்து போகக் கூடிய விடயமல்ல. தாக்குதலில் ஈடுபட்ட இந்துமுன்னணியினர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010
25/08/2021 

Leave a Reply