அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முதல்வரால் நியமனம் பெற்றது வரலாற்று சிறப்புமிக்கது, வரவேற்பிற்குரியது. சாதிகளை காக்கும் மதம், மதத்தை காக்கும் கோவில், இவற்றை கட்டுப்படுத்தும் வேதம். இந்த பார்ப்பன சங்கிலி முறியாமல் சமத்துவ பாதை சாத்தியமில்லை. கடவுளை, கோவிலை, ஆன்மீகத்தை சனதான-பார்ப்பனியத்திடமிருந்து விடுவித்து அனைத்து சாதியினர் கையில் ஒப்படைத்தால்தான் சமத்துவம் சிறிதேனும் துளிர்விடும். தந்தை பெரியாரின் சமத்துவத்தை நோக்கிய கோரிக்கைகளில் முகாமையானது நடைமுறைக்கு வருவதில் பெருமகிழ்ச்சி.
சாதி அடிப்படையில் கடவுளை தொடும் உரிமையை, பூசை செய்யும் உரிமையை மறுப்பது எனும் நிலை இந்நியமனத்தால் இனி மாறவேண்டும். ’கோபுரதரிசனம், கோடிபுண்ணியம்’ எனும் சூழ்ச்சிகரமான உபதேசங்கள் ஒழியட்டும். இந்து மதத்தின் அடிப்படைகளில் இரண்டு வருணமும், ஆசிரமமும். வேதங்களை கற்று, வேள்விகள் செய்யும் ஆசிரமமுறைகள் பூணூல் அணியும் இருபிறப்பாளராக தன்னை சொல்லிகொள்ளும் பார்ப்பனர்களுக்கே உண்டு என்கிறது மனுதர்மம்.
சூத்திரர்கள் இருபிறப்பாளர்களில்லை என்பதால் பூணுலும் அணிய இயலாது என்கிறது மனு. துறவு பூண்டாலும், வேதம் கற்றாலும் சன்னியாசியாக, அர்ச்சகராக சூத்திரன் சனாதனத்தால் அங்கீகரிக்கப்படுவதில்லை. இதை செய்வது சனாதான நெறியை மீறுவதாகும். இதை செய்ததாலேயே சம்புகனை இராமன் கொன்றான்.
துறவு மேற்கொண்ட மடாதிபதிகளாக இருக்கும் சைவமடாதிபதிகளை வேத பார்ப்பனர்கள் சங்கராச்சாரிக்கு கீழானவர்களாகவே கருதுகிறார்கள் என்பதற்கு இன்று மதுரை ஆதீனம் மறைவை பற்றி ‘தி இந்து’வின் செய்தியில் ஆதீனம் முரசொலியில் பணியாற்றியது பிற சச்சரவுகளை பற்றி எழுதிய ’இந்து’ தலைவர்களின் இரங்கல் செய்தியை தவிர்த்தது. அதேசமயம் ஜெயேந்திர சரஸ்வதி சாவு செய்தியில் அவரின் மீதான கொலைவழக்கு, பெண் பாலியல் குற்றச்சாட்டு ஆகியவற்றையெல்லாம் சொல்லாமல் பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் ஆகியோரின் செய்திகளை கவனமாக தொகுத்து எழுதுகிறது.
ஆதினம், சங்கராச்சாரி ஆகியோர் சமமான மத தலைவர்கள், சன்னியாசம் கொண்டவர்கள் என்ற போதும், சங்கராச்சாரி பார்ப்பனர் எனும் இருபிறப்பாளர் எனும் காரணத்தினால் உயர்த்தியே பார்ப்பன பத்திரிக்கை ‘தி இந்து’ எழுதுகிறது. ஏனெனில் சூத்திரர்கள் பிரமச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் ஆகியமுறைகளின் மூலம் சன்னியாசமடைய இயலாது என்கிறது சனதானம். இந்த நான்குவகை ஆசிரமமுறை பார்ப்பனர்களுக்கே உரித்தானது என்பதை புரட்சியாளர் அம்பேத்கரின் கூற்றிலிருந்து மேற்கோள் காட்டுகிறார், பேரா.நெடுஞ்செழியன் அவர்கள்.
இந்த ஆசிரமமுறையற்ற சூத்திரர்கள் அர்ச்சகர் ஆவதோ, சன்னியாசி ஆவதோ சாத்தியமற்ற நிலையிலேயே இன்றளவும் இந்துமதத்தை வைக்க விரும்புகிறார்கள் உயர்சாதி கூட்டத்தினர். தனது இழிவான மனநிலையையே முற்போக்கு மரபு கொண்டது என்று சொல்லிக்கொள்ளும் ‘இந்து‘ இதழ் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. இறுக்கமான நிறுவனமாகி இருக்கும் இந்துமத உயர்சாதி ஆதிக்கத்தை உடைக்கும் பேராயுதமாக அனைத்து சாதியினருக்கான அர்ச்சகர் ஆகும் உரிமை உள்ளது.
இப்படியான மாற்றத்தின் மூலமாக பல்வேறு உரிமைகளை சமத்துவமானதாக மாற்றும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வகையில் சனாதன கட்டமைப்புகளை உடைக்கும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான அனைத்துசாதியினரும் அர்ச்சகர் ஆவதை தடைகடந்து நடைமுறைப்படுத்திய முதல்வர் மரியாதைக்குரிய திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும், இந்த உரிமைபோராட்டத்தில் தொடர்ந்து பங்காற்றிய திராவிடஇயக்க-பெரியாரிய தோழர்களுக்கும், அம்பேத்கரிய-முற்போக்கு அறிஞர்களுக்கு-செயல்பாட்டாளர்களுக்கும் மகிழ்வுடன் வாழ்த்துகளை தெரிவிப்போம்.
தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்