ஹிரோஷிமா – நாகசாகி பேரழிவை நினைவு கூறுவோம் (ஆகஸ்டு 6 மற்றும் ஆகஸ்டு 9, 1945)
“சமாதிகள் எழுப்படாத சுடுகாடுகள், ஹிரோஷிமா – நாகசாகி”
1945 ம் ஆண்டு ஆகஸ்டு 6 மற்றும் 9 ம் தேதிகளில் அமெரிக்கா வீசிய இரண்டு அணுகுண்டுகளினால் பேரழிவை சந்தித்த ஜப்பானின் இரு நகரங்களை பற்றி கூறப்படும் வாசகங்கள்தாம் இவை.
இரண்டாம் உலகப் போரின் இறுதி காலத்தில் தொடர்ச்சியாக போரை நடத்திய ஜப்பானை முழுவதும் அழிக்கப் போவதாக ‘நேச நாடுகள்’ அணி சார்பாக அமெரிக்கா அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்டு 6 ம் தேதி ‘சின்ன பையன் (Little Boy)’ என்ற பெயரை கொண்ட அணுகுண்டை ஹிரோஷிமா நகரில் வீசியது.
ஏறத்தாழ 16 கி.மீ சுற்றளவுக்கு அதன் பாதிப்பு இருந்தது. 3.5 லட்சம் மக்கள் வசித்து வந்த ஹிரோஷிமா நகரில், குண்டு வீசப்பட்ட மையப்பகுதியில் ஏறத்தாழ 60,000 மக்கள் உடனடியாக இறந்தனர். அணுகுண்டின் வெப்பத்தாலும், கதிரியக்கத்தாலும் உடல் உருகி இறந்தது போக, பலர் அருகில் இருந்த ஆற்றில் குதித்து வெப்பத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்தனர். ஆனால் ஆற்று நீரோ கொதித்து கொண்டிருந்தது. இது தவிர அடுத்த 1 வாரத்தில் மேலும் 70,000 பேர் கதிரியக்கப் பாதிப்புக்குள்ளாயினர்.
இந்த மரண ஓலங்கள் முடியும் முன்னரே ஜப்பானின் இன்னொரு நகரமான நாகசாகியில் ஆகஸ்டு 9 ம் தேதி ‘குண்டு மனிதன் (Fat Man)’ என்ற பெயரை கொண்ட மற்றொரு அணுகுண்டை வீசியது. இதில் ஏறத்தாழ 70,000 பேர் உடனடியாக மரணமடைந்தனர். அந்த நேரத்தில் அந்நகர்களின் மீது பெய்த மழை கூட கதிரியக்க தன்மை கொண்ட அமில மழையாக பொழிந்து மக்களை வாட்டியது.
ஆனால் அமெரிக்க ஏகாதிபதியமோ இரண்டாம் உலகப் போரை நிறுத்தியதே தாங்கள் வீசிய அணுகுண்டுகள் தான் என்று அவர்களின் கொலை பாதகத்தை நியாயப்படுத்தியது. ஆம், உலக வல்லரசுகள் என்று மார்தட்டிக்கொள்ளும் நாடுகளின் அறம் இதுவாகத்தான் இருக்கிறது.
இரண்டாம் உலகப்போரின் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளும் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டன. அதற்கு உறுதுணையாக அணு சக்தி ஆய்வுகளையும், உறங்கும் அணுகுண்டுகளான அணு மின்நிலையங்களையும் நிறுவி வருகின்றன. குறிப்பாக நவீன மின் தயாரிப்பு முறையாக அணு மின்நிலையங்கள் மக்கள் நெருக்கம் மிகுந்த வாழ்விடங்களில் நிறுவப்படுகின்றன. தொழிற்நுட்ப மற்றும் இயற்கை சீற்றங்கள் போன்ற பல காரணங்களால் இந்த அணு மின்நிலையங்களில் பல ஆபத்துக்கள் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளன.
எடுத்துக்காட்டாக 2011-ம் ஆண்டு தெற்காசியாவை உலுக்கிய சுனாமி பேரழிவில் ஜப்பான் புகுஷிமா அணு மின்நிலையம் நேரடியாக பாதிக்கப்பட்டு அணு கதிரியக்கம் கடல் நீரில் கலந்த பேராபத்து உண்டானது. ஆனாலும் மற்ற உலக நாடுகள் இதிலிருந்து பாடம் கற்றுகொண்டபாடில்லை.
குறிப்பாக இந்திய ஒன்றியம் தனது கடற்கரை எல்லை மாநிலங்களில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் தமிழர் கடற்கரை பிரதேசங்களில் அணு மின்நிலையங்களை அமைத்து வருகிறது. சென்னை கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணு மின்நிலையங்கள் இது போன்ற கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ளது. சமூக செயல்பாட்டாளர்களும், அரசியல் இயக்கங்களும், சூழியல் வல்லுனர்களும் தங்கள் கடுமையான எதிர்ப்புகளை காட்டி போராடுகின்ற போதும் ஒன்றிய அரசு அதை பற்றி பொருட்படுத்தாமல், மேலும் பல அணு உலைகளை அங்கு அமைப்பதிலேயே குறியாய் இருக்கிறது.
தன் சமகால வரலாற்றில் அணு ஆயுத மற்றும் அணு உலை அழிவுகளை கண்ட பின்னும், ஏகாதிபதிய நாடுகளின் வற்புறுத்தலின் பேரிலும், அவர்களது காலாவதியான தொழிற்நுட்பத்தை மூன்றாம் உலக நாடுகளில் விற்க நடக்கும் பொருளாதார சுரண்டல்களுக்கு அடிபணிந்தும் இந்திய ஒன்றியம் உள்ளிட்ட வளரும் நாடுகள் தங்கள் சொந்த மண்ணின் மக்கள் வாழ்வாதாரத்தை உறங்கும் அணு ஆயுதங்கலான ‘அணு உலைகளின்’ நடுவில் புதைக்கின்றன.
அடுத்த தலைமுறையின் அமைதியான வாழ்விடத்தை உறுதி செய்யும் பொருட்டு ஹிரோஷிமா – நாகசாகி நகரங்களில் படுகொலை செய்யப்பட்ட அம்மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதுடன், அனைத்து விதமான அணு ஆயுதங்கள், அணு உலைகளை உடனே களைந்திட வேண்டும் எனும் கோரிக்கையை வலுப்படுத்துவோம். அணு கதிர்வீச்சற்ற உலகை படைத்திடுவோம் என மே பதினேழு இயக்கம் உறுதிமொழி ஏற்க அழைக்கிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010