தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கிச் சூடு! சிங்கள இனவெறியின் தமிழின விரோத தாக்குதல்! தோல்வியடைந்த பாஜகவின் வெளியுறவுக் கொள்கை.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கிச் சூடு! சிங்கள இனவெறியின் தமிழின விரோத தாக்குதல்! தோல்வியடைந்த பாஜகவின் வெளியுறவுக் கொள்கை. – மே பதினேழு இயக்கம்

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் பகுதிகளை சார்ந்த மீனவர்கள் 10 பேர், கடந்த 28-07-2021 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை அத்துமீறி கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் அக்கரைப்பேட்டையை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரது தலையில் குண்டு பாய்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். சிங்கள இனவெறி இலங்கை கடற்படையின் இந்த தமிழின விரோத தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் ஆண்டாண்டு காலமாக எவ்வித இடையூறும் இல்லாமல் மீன்பிடித்து வரும் வேளையில், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பிறகான, கடந்த 12 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்தினரால் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான தமிழ் மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும் போதும், மீனவர்கள் ஒன்றிய, மாநில அரசுகளிடம் முறையிட்டும், தமிழ் அமைப்புகள் பல போராடியும், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் நின்றபாடில்லை. சொந்த நாட்டு மக்கள் அண்டை நாட்டு இராணுவத்தால் தொடர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழக்கும் வேளையில், ஒன்றிய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கடந்து செல்கிறது. தற்போது நாகப்பட்டினம் மீனவர்கள் மீதான தாக்குதலிலும் அரசின் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது துயர்மிகுந்ததாகும்.

பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை என்று தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடத்தப்படும் 7வது தாக்குதல் ஆகும். தாக்குதல் நடத்துவதோடு மட்டுமல்லாமல், மீனவர்களின் வலைகளை அறுத்தெறிவதும், படகுகளை சேதப்படுத்துவதும் தொடர் நிகழ்வாகிப் போனது. இதனால் பொருளாதார ரீதியாக இழப்புகளை சந்திக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இலங்கை ராணுவத்தினரின் இந்த செயல் தமிழினப்படுகொலையின் தொடர்ச்சியே. சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் தமிழர்கள் மீதான இனவெறியையே தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் காட்டுகிறது.

தமிழீழ இனப்படுகொலையை நடத்திய, தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ந்து கொன்றுகுவித்து வரும் இலங்கை நாட்டை நட்பு நாடாக கருதும் இந்தியா, தன் சொந்த நாட்டு மீனவர்கள் கொல்லப்படும் போதும், தாக்கப்படும் போதும் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையை கூட மேற்கொள்வதில்லை. மிகவும் அரிதாக பிற மாநில மீனவர்கள் வேறு நாட்டினரால் தாக்குதலுக்குள்ளானால், அந்நாட்டு தூதுவரை அழைத்து கண்டிக்கும் இந்திய அரசு, தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டால் கூட அப்படியான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை. இந்திய அரசின் தமிழர் விரோத போக்கையே இது காட்டுகிறது. இந்திய அரசின் இந்த போக்கு இலங்கை ராணுவத்தினரை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அமைகிறது.

கச்சத்தீவை மீட்பது தமிழ்நாட்டின் கடல் எல்லையை மாற்றியமைக்கும். இதனால் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதில் சிக்கல் உண்டாகாது. கச்சத்தீவை மீட்போம் என்று ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக இறங்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கிய இலங்கை ராணுவத்தினர் மீது வழக்கு பதிவதோடு, அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தொடர் தாக்குதலை ஈடுபடும் இலங்கை அரசை கண்டிக்கும் விதமாக, சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் தூதுவரை அழைத்து, தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழ்நாட்டு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

புவிசார் அரசியலின் மிக முக்கிய பகுதியில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா-இலங்கை நாடுகள் விரும்பவில்லை என்பதையே தமிழீழ இனப்படுகொலையும், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலும் காட்டுகிறது. அதேவேளை, இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்படப் போவது தமிழர்களே. அதன் ஒரு பகுதி தான் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பது. இலங்கையை நட்பு நாடென கருதி, தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டுகொள்ளாமல் இருந்த இந்திய அரசின், இலங்கை மீதான வெளியுறவுக் கொள்கை தோல்வியில் முடிந்துள்ளதையே காட்டுகிறது.

இலங்கை மீதான வெளியுறவுக் கொள்கை தீர்மானிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் தொடர்ச்சியாக கூறி வருகிறது. அப்படியான சூழ்நிலையே, சீனாவின் ஆதிக்கம் நிறைந்த இலங்கையிடமிருந்து இந்தியாவின் எல்லையோர பாதுகாப்பை உறுதிபடுத்தும். அதில் தமிழ்நாட்டு மீனவர்கள் மிக முக்கிய பங்கு வகிப்பவர்களாக இருப்பார்கள். எனவே, இலங்கை மீதான வெளியுறவுக்கொள்கையை மாற்றியமைப்பதும், தமிழ்நாட்டு மக்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கை வடிவமைக்கப்படுவதே தீர்வைத்தரும் என்பதை மே பதினேழு இயக்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply