தோள்சீலைப் போராட்டம் வெற்றி பெற்ற தினம் (26.07.1859)
மனித சமூகம் நாகரிகத்தின் புள்ளியை தொட்ட தருணம் ஆடை அணிய தொடங்கிய தருணம்தான். அதனால்தான் இன்றளவும் மனிதர்களின் இன்றியமையா தேவைகளில் உணவிற்கு அடுத்து உடை இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. ஆனால் இந்துமதம் பரவியிருந்த நிலப்பரப்பில் ‘எந்த சாதியினர் எப்படிப்பட்ட உடை அணியவேண்டும்’ என்று கூட மனுதர்மத்தின் வழியாக தனது வெறியை புகுத்தி இருந்தனர், தங்களை மேல் வர்ணத்தவர் என்று அழைத்துக் கொண்ட காட்டுமிராண்டிகள்.
அதன் உச்சகட்டமாக இன்றைய கேரளா மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளடக்கியிருந்த திருவாங்கூர் அரசாட்சியில் உயர் சாதியாக தங்களை எண்ணிக்கொண்ட இந்துத்துவ பார்ப்பன சமூகத்தினராகிய ‘நம்பூதிரி’ சமூகத்தினர், கேரள நாடார், ஈழவ சமூகம் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இடுப்புக்கு மேல் எந்த ஆடையும் அணியக்கூடாது என்று கட்டுபாடுகளை விதித்திருந்தனர்.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூக பெண்கள் மார்பை மூடாமல் வெற்றுடம்புடனே பொதுவெளிக்கு வரவேண்டும் என்று சாதிவெறியின் காட்டுமிரான்டித்தனதை வெளிப்படுத்தினர். மீறி மேலாடை அணிந்து மார்பை மறைக்க விரும்பினால், அப்பெண்கள் தங்கள் முலையின் அளவிற்கேற்ப வரி செலுத்திவிட்டே அணிய வேண்டும் என்று ‘முலைவரி’ சட்டமியற்றினர். பலகாலமாக இந்த சாதி மற்றும் ஆணாதிக்க வக்கிர கொடுமைகளை மனதில் அழுத்தி வைத்திருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வெகுண்டெழுந்தார் ‘நங்கேலி’ என்ற புரட்சி மங்கை (1806).
‘மார்பை மறைக்க மேலாடை அணிவேன்’ என்று முழங்கிய அவரிடம் முலைவரி கேட்டு வந்த உயர் சாதித்திமிர் கொண்ட ஆண்களிடம் தன் இரு முலைகளையும் அறுத்து கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தனது ஆடை உரிமைக்காக அந்த இடத்திலேயே உயிர் ஈகமும் செய்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பின் திருவாங்கூர் அரசாட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேலாடை அணிவதற்கான போராட்டங்கள் வெடித்தன. ‘மாராப்பு’ என்று அழைக்கப்படும் தோள்பட்டையில் சீலை அணியும் உடைவடிவத்தால் இப்போராட்டங்கள் ‘தோள்சீலைப் போராட்டங்கள்’ என்று அழைக்கபட்டன.
1822ம் வருடம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் இதற்கான மக்கள் போராட்டம் முதலில் எழுந்தது. 1827ம் ஆண்டு ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை, உடையார்விளை, புலிப்புனம் ஆகிய பகுதிகளில் போராட்டம் வெடித்தது. அப்பொழுது “தோள் சீலை அணிந்து வரும் ஒடுக்கப்பட்ட பெண்களின் மேலாடையை எந்த ஒரு சமூக ஆணும் தடுக்கலாம்” என்ற உத்தரவை திருவாங்கூர் அரசின் ‘மகாராணி’ வெளியிட்டார்.
மேலும் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த தருணத்தில் முத்துக்குட்டி சாமியார் அய்யா வைகுந்தர் 1836ம் ஆண்டும், 1838ம் ஆண்டும் இந்த கொடுமைகளை எதிர்த்தும், சாதி கட்டமைப்பை எதிர்த்தும் குரல் கொடுக்கத் தொடங்கினார். அதன் விளைவாக மக்கள், குறிப்பாக பெண்கள், இந்து மதத்தின் பெயரால் நடந்த இது போன்ற நாகரீகமற்ற செயல்களுக்கு எதிராய் திரண்டெழுந்தனர். மேலும் இந்து மதத்தை துறக்கவும் செய்தனர்.
ஆங்கிலேய அரசின் ஆட்சி காலமானதால் ஆங்கிலேய சீர்திருத்தவாதிகளும் இதற்கு எதிராக குரல் எழுப்பினர். குறிப்பாக கிருத்துவ மதத்திற்கு மாறிய பெண்களுக்கு இந்த உடை கட்டுப்பாடு போடக்கூடாது என்று ஆங்கில அரசின் வழியே சட்டம் இயற்றினர். ஆனாலும் திருவாங்கூர் அரசு பல முட்டுக்கட்டைகளை போட்டது.
பலகட்ட போராட்டங்ககளுக்கு பின், ஏறத்தாழ 54 ஆண்டுகள் கழித்து 1859ம் ஆண்டு மேலாடை அணிவதற்கு அனுமதிக்கப்படுவதாக சட்டம் இயற்றப்பட்டது. அதிலும் சில ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தொடர்ச்சியான மக்கள் அழுத்தத்தாலும், சமூக சீர்திருத்தவாதிகளின் குரலாலும் 1965ம் ஆண்டு இந்த கொடுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டது.
இந்து மதத்தில் பெண்கள் எப்பொழுதுமே மதிக்கப் பட்டதில்லை என்பதற்கு மேற்கண்ட வரலாற்று சான்றே போதுமானது. மக்களின் போராட்டங்களே தீர்வை தருமென்று உணர்த்துவதும் இதே வரலாறுதான்.
இந்துமதக் கொடுமைகளுக்கு எதிராக களம் கண்ட வீரமங்கை நங்கேலிக்கும், இதர போராளி பெண்களுக்கும் பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
“பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை” – மேதகு பிரபாகரன்.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010