தனித்தமிழ் இயக்க முன்னோடியும், பெரியாரின் தனித் தமிழ்நாடு கோரிக்கையை ஆதரித்தவருமான ஐயா மறைமலை அடிகளார் அவர்கள் பிறந்தநாள் – 15.07.1878
“வடநாட்டவர்களிலேயே இந்தி மொழியை அறியாமற் பலதிறப்பட்ட பன்மொழிகளை வழங்கும் மக்கட் கூட்டம் பலவாயிருக்க, இத்தென்னாட்டவர் மட்டும் இந்தி மொழியைக் கற்றுப் பேசுதலால் யாது பயன் விளைந்திடக் கூடும்? இவ்வியல்புகளையெல்லாம் நடுநின்று எண்ணிப் பார்க்கவல்ல அறிஞர்க்கு, இத்தென்னாட்டவர்கள் தமக்கு எவ்வகையிலும் பயன்படாத்துந் தெரியாததுமான இந்தி மொழிகளில் ஒன்றை வருந்திக் கற்றலால் வீண் காலக் கழிவும் வீண் உழைப்பும் வீண் செலவும் உண்டாகுமே யல்லாமல் வேறேதொரு நன்மையும் உண்டாகாதென்பது நன்கு விளங்கும்”
இவ்வாறு கூறி ‘இந்தி மொழி தமிழ் பேசும் நல்லுலகிற்கு அவசியமற்றது’ என்பதை எடுத்துரைத்த தனித்தமிழ் இயக்க முன்னோடியும், பெரிய முன்வைத்த தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கையை முன்மொழிந்தவருமான ஐயா மறைமலை அடிகளார் அவர்களின் பிறந்தநாள் இன்று.
பெற்றோர் தனக்கிட்ட வேதாசலம் என்ற இயற்பெயரை தமிழின்பால் கொண்ட அன்பாலும், தனித்தமிழ் பற்றின் காரணமாகவும் மறைமலை என்று மாற்றிக்கொண்டார். பள்ளி படிப்பில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த ஐயா மறைமலை அடிகள் தமிழ் அறிஞர்களிடம் தமிழ் கற்று சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஐயா பரிதிமாற் கலைஞர் அவர்களுடன் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் அளவிற்கு தமிழ் புலமை பெற்றவர்.
வள்ளலார் அவர்களின் மீது பெரும் பற்று கொண்டு “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” ஏற்படுத்திய ஐயா மறைமலை அடிகள், தற்காலத்தில் தனித்தமிழ் பெயராக அந்த இயக்கத்திற்கு “பொதுநிலை கழகம்” என்று பெயரிட்டார்.
தந்தை பெரியாரின் மீது பெரு மதிப்பு கொண்ட மறைமலை அடிகள், பெரியார் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முழுமையாக ஆதரித்த, 1938 இல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தலைமை தாங்கி தன் இந்தி எதிர்ப்பை பறைசாற்றினார். இதே ஆண்டில் திருவல்லிக்கேணி கடற்கரை மாநாட்டில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை பெரியார் முன்வைத்த போது, மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியவர் ஐயா மறைமலை அடிகளார் அவர்களே.
ஆரியர்களின் வருணாசிரம கொள்கைக்கு எதிராக தொடர்ந்து பேசியவரும், பார்ப்பன ஆதிக்கம் மற்றும் இந்தி ஆதிக்கம் போன்றவற்றை எதிர்த்தவருமான ஐயா மறைமலை அடிகள் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் தமிழ்ப் பணிகளை நினைவு கூறுவோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010