வேலூர் சிப்பாய் புரட்சி – 10-07-1806
ஆங்கிலேயர் ஆட்சியில் ஒட்டுமொத்த இந்திய நிலப்பரப்பும் கைப்பற்றப்பட்ட பின்பு தென் பகுதியின் முக்கியமான ராணுவத் தளமாக கருதப்பட்ட கோட்டை வேலூர் கோட்டை ஆகும். ஆங்கிலேயே படைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 370 ஆகவும், தமிழர்கள் உள்ளடக்கிய படையின் எண்ணிக்கை 1500 ஆகவும் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பல்வேறு அரசர்களின் போர் முற்றுகைகளை தாங்கி நிலைத்து நின்ற வேலூர் கோட்டை மீதான தமிழர்களின் புரட்சிப்படை தொடுத்த போர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு புதிய வரலாற்றை எழுதியது.
ஆங்கிலேயப் படையில் பணியாற்றிய ஆங்கிலேயர் அல்லாத இராணுவ வீரர்கள் அனைவருக்கும் ராணுவ கட்டுப்பாடுகள் என்ற பெயரில் விதிக்கப்பட்ட ஒருசில புதிய கட்டுப்பாடுகளும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து தமிழகத்தில் பரவலாக நடைபெற்று வந்த கிளர்ச்சிகளுக்கு எதிராக ஆங்கிலேயர் படை முன்னெடுத்த கடுமையான ஒடுக்குமுறைகள் மற்றும் கைது நடவடிக்கைகளும் வேலூர் சிப்பாய் புரட்சிக்கு மிக முக்கியமான காரணங்களாக அமைந்தன.
திப்பு சுல்தான் அவர்களின் வாரிசுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததும், ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட பல்வேறு ராணுவ தலைவர்கள் மற்றும் வீரர்கள் வேலூர் கோட்டையிலேயே சிறைபட்டு கிடந்ததும் ஆங்கிலேயப் படையில் பணியாற்றி வந்த தமிழர்களிடையே ஒரு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் கிளர்ச்சியாளர்களில் பலர் ஆங்கிலேய படையிலேயே இணைக்கப்பட்டு இருந்ததால், இத்தகைய போராட்டத்தை தொடங்குவது பற்றி ரகசியமாக செயல் திட்டம் தீட்டி வந்தனர். மேலும் அப்படைகளில் பணியாற்றிவந்த ஆங்கிலேயர்களுக்கும் தமிழர்களுக்கும் காட்டப்பட்டு வந்த பாரபட்சமான அணுகுமுறையும், ஊதியம் மற்றும் பதவி உயர்வு களில் காட்டப்பட்ட வேற்றுமையும் தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆங்கிலேய அதிகாரிகள் அணிய கூறி கட்டாயப்படுத்திய “அக்னியூ தலைப்பாகைகள்” தமிழர்களை மக்களிடையே கேலிப் பொருளாய் காட்டுவதை உணர்ந்த அவர்கள் தலைப்பாகையை அணிய மறுத்த பொழுது கடுமையான நடவடிக்கைகளும், சவுக்கடிகளும் தண்டனையாக தரப்பட்டது வீரர்களிடையே மேலும் ஆத்திரத்தை அதிகரித்தது.
ஜூலை 13-ஆம் தேதி வேலூர் கோட்டை முற்றுகையை துவங்குவதாக தமிழகம் மற்றும் மைசூர் பகுதிகளில் இருந்த பல்வேறு விடுதலை உணர்வாளர்களையும் ஒருங்கிணைத்திருந்த நேரத்தில் நடைபெற்ற ஒரு சிறு தவறினால் வேறுவழியின்றி ஜூலை 10-ஆம் தேதியே சரியான திட்டமிடல் இன்றி வேலூர் சிப்பாய் புரட்சி முன்னெடுக்கப்பட்டது. ஏறத்தாழ எட்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வேலூர் கோட்டையில் பறந்து கொண்டிருந்த ஆங்கிலேய அரசு கொடி இறக்கப்பட்டு திப்புசுல்தானின் கொடி ஏற்றப்பட்டது.
ஆனால் போராட்டம் திட்டமிட்ட தேதிக்கு முன்பே நடைபெற்றாலும், அந்த செய்தியும் மற்ற பகுதிகளுக்கு சென்றடையாத காரணத்தினாலும், வெளியில் இருந்து வரவேண்டிய உதவிகள் வராத காரணத்தினாலும் ஆங்கிலேயப் படைகள் இப்போராட்டத்தை கடுமையான முறையில் ஒடுக்கின. வேலூர் சிப்பாய் புரட்சி தோல்வியில் முடிந்த கணத்தில் ஏறத்தாழ 800 தமிழ் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும், ஏறத்தாழ அதே எண்ணிக்கையில் காயமுற்றும் பாதிக்கப்பட்டனர். மேலும் சிறைக் கொடுமைகளும், கடுமையான தண்டனைகளும் கொடுக்கப்பட்டு ஆங்கிலேய அரசால் புரட்சியில் பங்கு பெற்றவர்கள் பழி வாங்கப்பட்டனர்.
இருப்பினும் வேலூர் சிப்பாய் புரட்சி தமிழகத்தில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலேய அரசு அதிகாரிகளின் போக்கு ராணுவ நிலைப்பாட்டில் மட்டுமல்லாமல், சமூக நிலைப்பாட்டையும் உள்ளடக்கி மாறுவதற்கு இப்போராட்டமே காரணமாயிருந்தது.
இந்திய நிலப்பரப்பில் ஆங்கிலேய அதிகாரத்தை கேள்வி கேட்ட முதல் புரட்சியை நிகழ்த்தியவர்கள் தமிழர்கள் என்ற பெருமையுடன் வேலூர் சிப்பாய் புரட்சி போராட்டத்தில் உயிர் நீர்த்த அனைத்து தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010