கரும்புலிகள் தினமான இன்று மே பதினேழு இயக்கம் தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.
அது ஒரு 1987 ம் ஆண்டு ஜூலை மாத இரவு நேரம். அந்த பகுதியில் முகாம் அமைத்திருந்த சிங்கள இனவெறி அரசின் இராணுவ கும்பலுக்கு அடுத்து நடக்கப் போவது தெரிந்தருக்க வாய்ப்பில்லை. தமிழீழ விடுதலைக்கு தங்களின் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க மாவீரகளில் ஒருவரான கேப்டன் மில்லர் ஒரு வண்டி நிறைய வெடி மருந்துகளோடு நெல்லியடி இராணுவ முகாமில் மோதி அம்முகாமை தகர்த்ததோடு தன் இன்னுயிரையும் ஈழ மண்ணின் விடுதலைக்கு ஈகம் செய்தார். அன்று முதல் ‘கரும்புலிகள்’ என்ற புதிய படை அங்கே உருவானது.
ஆம், தமிழீழ விடுதலைப் புலிகள் வரலாற்றிலும், ஈழத் தமிழர்கள் மனதிலும், சிங்கள இனவெறி இராணுவத்தின் மன அச்சத்திலும் நீங்கா இடம் பெற்ற கரும்புலிகள் ஈகத்தை நினைவு கூறும் இந்த தினம் 1993 ம் ஆண்டு முதல் மாவீரர் கேப்டன் மில்லர் அவர்களின் நினைவாக தேசியத்தலைவர் ‘மேதகு’ பிரபாகரன் அவர்களால் அறிவிக்கப்பட்ட போது அவர் கீழ் கண்டவாறு கூறினார்.
“கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தனது அழிவில் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்.”
இந்த சொற்கள் எள்ளளவும் மிகைப்படுத்தப்பட்டதல்ல. கரும்புலிகள் ஈகம் தமிழீழ விடுதலை போரில் ஈழத்தமிழர்களின் உரிமையை உலகிற்கு பறை சாற்றியது. கேப்டன் மில்லரை தொடர்ந்து கேப்டன் காந்தரூபன், கேப்டன் வினோத், கேப்டன் கொலின்ஸ், லெப். கேணல் போர்க், கேப்டன் அங்கயற்கண்ணி, லெப். கேணல் நளாயினி என்று இந்த மாவீர்களின் பேரிகத்தால் சிதைவுற்ற சிங்கள படைத்தளங்களும், போர்க் கப்பல்களும் ஏராளம்.
‘போரில் மரணம் ஏற்படலாம்’ என்ற எண்ணத்துடம் போராடுவது ஒரு வகை என்றாலும், நிச்சயமாக மரணிக்கவே போருக்கு செல்கிறோம் என்ற எண்ணத்துடன் களமாடும் கரும்புலிகளின் உறுதியை புரிந்து கொள்ள மனிதாபிமானம் தேவை. மரணத்தை விட மண் விடுதலையே பெரிதென்று முடிவெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலியாக்கிய கேப்டன் மில்லர் அவர்களை பெற்றெடுத்த தாய் கூறுகிறார்.
“என்ர மகன் நாட்டுக்காகத்தானே செத்தவன். நினைக்க பெருமையா இருக்கு”
கரும்புலிகள் தினமான இன்று அந்த மாவீரகளை நினைத்தும், தமது இன விடுதலைக்கு அவர்களை தந்திட்ட குடும்பங்களை நினைத்தும் பெருமை கொள்வோம். அவர்களது ஈகத்தினை போற்றுவோம்.
வெல்லும் தமிழீழம்.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010