தமிழ்நாடு அரசே! சாதிவெறி கொலைகளை தடுத்திடு! கம்பம் நகர தமிழ்ப்புலிகள் கட்சி பொறுப்பாளர் படுகொலைக்கு உரிய நீதி வழங்கிடு! – மே பதினேழு இயக்கம்
தேனி மாவட்டம் கம்பம் நகரத்தில் சாதி ஒழிப்பிற்காக போராடி வந்த தமிழ்ப் புலிகள் கட்சியின் தேனி மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் தோழர் கம்பம்.திருநாவுக்கரசு அவர்கள், சாதிவெறியர்களால் 21-06-21 அன்று இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சாதிவெறியர்களின் இந்த செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஒடுக்கப்பட்ட பட்டியலின வகுப்பை சேர்ந்த தோழர் திருநாவுக்கரசு, கம்பம் பகுதியில் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களை குறிவைத்து செயல்படும் கந்துவட்டி கும்பலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தவர். அந்த கும்பல் மீது பல புகார்கள் அளித்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்தவர். அதே போல், சமூக விரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர்களுக்கு எதிராக போராடி வந்தவர்.
தலித் மக்களின் பொதுப்பாதையை மறைத்து ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியவர். தலித் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உணவு விடுதிக்கு எதிராகவும், தலித் மக்களின் மாயான ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்தவர். தலித் மக்களுக்காக தன் வாழ்வை அர்பணித்து, சாதி வெறியர்களுக்கு எதிராக தொடர்ந்து களமாடி வந்தவர் தான் தோழர் திருநாவுக்கரசு.
இந்த படுகொலையில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டு வேறு இரு நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இது பட்டியலின மக்களுக்கு எதிரான காவல்துறையின் சாதிவெறி போக்கையே காட்டுகிறது. இச்செயல் காவல்துறை சீரமைக்கப்பட வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
தோழர் திருநாவுக்கரசு அவர்களை இழந்து வாடும் தமிழ்ப்புலிகள் கட்சியினருக்கும், அவரது கும்பத்தினருக்கும் மே பதினேழு இயக்கம் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது. 5 வயது பெண் குழந்தையையும், 4 மாத கர்ப்பிணி மனைவியையும் கொண்ட அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டையும், தகுதிக்கேற்ப அரசுப் பணியும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. சாதிக்கு எதிராக போராடுபவர்களை காக்கும் விதமாகவும், சாதிவெறியர்களை ஒடுக்குவதற்கும் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசிற்கு மே பதினேழு இயக்கம் கோரிக்கை வைக்கிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010