புரட்சியாளர் சேகுவேரா அவர்களின் 93 வது பிறந்தநாள் – 14.6.1928
“உலகின் எங்கோ நடக்கும் அநீதிக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழன் தான்!”
இந்த புகழ்பெற்ற வரிகளை கூறியவர் ‘தோழர் சே’ என்று அன்போடு அழைக்கப்படும் புரட்சியாளர் சேகுவேரா ஆவார். அர்ஜென்டினா நாட்டில் பிறந்து , கியூபாவின் விடுதலைக்கு கொரில்லா யுத்தத்திற்கு தலைமை தாங்கி, பின் பொலிவியா நாட்டின் விடுதலைக்கு போராடி வீரமரணமடைந்த புரட்சியாளர் சே அவர்களின் இயற்பெயர் ஏர்னெஸ்டோ குவேரா என்பதாகும்.
மருத்துவ பட்டம் பெற்ற தோழர் சே அவர்கள் 1955 ம் ஆண்டு தோழர் பிடல் காஸ்ட்ரோ அவர்களை சந்தித்த தோழர் சே கொரில்லா படிக்கு தளபதியாக பொறுப்பேற்றார். தொடர்ச்சியான போர்களில் களம் கண்டு, 1959 ம் ஆண்டு தோழர் சே மற்றும் தோழர் பிடல் ஆகியோர் தலைமையிலான படை கியூப புரட்சியை வெற்றிகரமாக நடத்தியது.
விடுதலை பெற்ற கியூபாவின் வேளாண் துறைக்கு தலைமையேற்ற தோழர் சே அவர்கள் பின்பு தொழில்துறை அமைச்சராகவும், கியூப சோசலிச புரட்சி ஐக்கிய கட்சியின் பொலிட் பீரோ மற்றும் செயற்குழு உறுப்பினாராகவும் செயல்பட்டார். 1959 ம் ஆண்டு இந்தியா ஒன்றியத்திற்கு வருகை புரிந்தார்.
அமெரிக்க ஏகாதிபதியத்தை தன் வாழ்நாள் முழுக்க எதிர்த்தவர் தோழர் சே அவர்கள். அமெரிக்க ஏகாதிபதியம் எந்தெந்த நாடுகளில் தன் கோரப்பிடியை இறுக்கியதோ, அந்த நாடுகளையெல்லாம் புரட்சி வழியில் மீட்டெடுக்க நினைத்த தோழர் சே அவர்கள்
“நான் ஒரு கியூபன். நான் ஒரு அர்ஜெண்டைனன். நான் யாருக்கும் குறையாத லத்தீன் அமெரிக்க தேச பக்தன். இங்கே வந்திருக்கும் லத்தீன் அமெரிக்க முக்கிய மனிதர்கள் யாரும் தங்களை நான் அவமதித்து விட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதாவது ஒன்றின் விடுதலைக்கு எந்த பலனும் கேட்காமல், யாரையும் பலி கேட்காமல் நான் என்னையே தருவதற்கு தயாராக இருக்கிறேன்.”
என்று முழங்கினார்.
பின்பு காங்கோ மற்றும் பொலிவியாவில் புரட்சியை கட்டமைக்க தான் கியூப அமைச்சர் பதவியை உதறித்தள்ளி விட்டு மீண்டும் கொரில்லா படை கட்டும் முயற்சியில் இறக்கினார். 1967 ம் ஆண்டு அமெரிக்க உளவாளிகளின் சதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரு சிறந்த மருத்துவராக தொடங்கி, புரட்சியாளராக களம் கண்டு, மாவீரராய் மண்ணில் விதைக்கப்பட்ட தோழர் சே அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் செவ்வணக்கம் செலுத்துகிறது.
இதோ தோழர் சே அவர்களின் நினைவிடத்தின் அருகில் எழுதப்பட்டிருக்கிறது.
“அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய், சே!”
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010