ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவு நாள் – 11-06-1995
“விடுதலை வேண்டும்! அதுமுதல் வேலை!
வேறு எந்த வேலையும் செய்யலாம் நாளை!”
இந்த அறைகூவல் விடுத்தவர் தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் நிலைத்த புகழ் பெற்ற புலவர்களில் முதன்மையானவாரான ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஆவார். தமிழ் மீதும், தமிழ் நாட்டின் மீதும், தமிழினத்தின் மீதும் அளப்பரியா அன்பும், அக்கறையும் கொண்ட தனித்துவம் பெற்ற தமிழ்தேசிய அரசியல் அறிஞராகத் திகழ்ந்தவர் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள்.
தமிழ்நாட்டில் பிற மொழி ஆதிக்கத்தை, குறிப்பாக இந்தி மொழி திணிப்பை கடுமையாக எதிர்த்து எழுதியும் பேசியும் வந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள்
“நிலை தளராதா? – இந்திக்
களை உலராதா?
நெடு நெடுவென, தளதளவெனப்
பயிர் வளராதா? – தமிழ்ப்
பயிர் வளராதா?”
என்று தமிழினத்தை பார்த்து கேள்வி எழுப்பியவர்.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் மாணவராக இருந்து, இறுதி காலம் வரை நட்பு பாராட்டிய பாவலரேறு பெருஞ்சித்திரனார் தனித்தமிழ் மொழி வழக்கை உறுதியாக முன்னிறுத்தினார். தமிழ் மொழி தொடர்பான பல்வேறு சமூக முன்னெடுப்புகளுக்கு முதல் மனிதராய் நின்று உறுதுணை அளித்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள்.
ஆரிய பார்ப்பன எதிர்ப்பே தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும் விடுதலை அளிக்கும் என்பதை உணர்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள், பார்ப்பனியத்தை எதிர்க்கும் கருவியாய் திராவிடத்தை ஏற்றுக் கொண்டு
“திரவிடத்தின் மக்கட்குத் தீந்தமிழின்
ஆற்றல்தான் அவர்தம் மூச்சு!”
என்று பாடினார்.
இன்று நாம் முன்மொழியும் ஆரிய பார்ப்பன எதிர்ப்பையும், பனியா கும்பலின் பன்னாட்டு சந்தை எதிர்ப்பையும் தனக்கே உரிய தன்மையில் அன்றே வெளியிட்டிருந்தார்.
“பார்ப்பனியம் இன நஞ்சைப்
பரப்புவதை கைவிடினும், வணிக கும்பல்
ஊர்ச்சுரண்டல் இல்லாமல்
உலக நலம் கருதிடினும் தமிழ கத்தை
தார்ப்பாய்ச்சுக் காரர்களாம்
வடநாட்டார் தாம்ஆள ஒப்ப மாட்டோம்!”
இந்தி எதிர்ப்பு தொடங்கி, தமிழீழ விடுதலை ஆதரவு வரை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்துப் போராடி, தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பை உருவாக்கிய தோழர் தமிழரசன் ஆதரித்தவர் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார். அதுமட்டுமல்லாமல் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், தமிழீழ தேசியத் தலைவருமான தோழர் பிரபாகரன் அவர்களை தொடக்கம் முதலே அரவணைத்து வெளிப்படையாக ஆதரவு அளித்து
“இதோ நான் ஒருவன்
இங்கிருக் கின்றேன்!
எனைச் சிறை செய்யினும் செய்க!
ஈழத் தமிழரை
ஆதரிக் கின்றேன்!
என் தலை கொய்யினும் கொய்க!”
என்று பாடினார். மேலும்,
“செந்தமிழ் மறவன் பிரபா கரனின்
சீரும் மறவர் புலிப்படை
இந்தியப்படைக்குத் தவிப்புக் காட்டி
ஈகம் செய்த வெளிப்படை!”
என்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும், தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றியும் புகழ்ந்து எழுதினார்.
சாதி ஒழிப்பில் சற்றும் சமரசம் செய்யாத பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தந்தை பெரியாரின் மீது பெரும் பற்று கொண்டிருந்தார். பெரியாரைப் பற்றி கூறும் பொழுது,
“பெரியார் பிறந்தார்! பிறந்தது உள்ளொளி!
அரியார் நாம் எனும் ஆக்கமும் சிறந்ததே!”
என்று வாழ்த்துப் பாடியும்,
“திருக்குறள் பொதுமக்களிடமும் அறிஞர்களிடமும் இன்று பரபலாக வழங்குவதற்கும் பெருமையுற்றதற்கும் ஒருவகையில் பெரியார்தாம் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. திருக்குறளுக்காக மாநாடுகளை நடத்திய முதல் பேரறிஞர் அவர். தமிழ் விழாவான பொங்கல் விழாவைப் பொதுமக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடும்படி செய்தவரும் பெரியார்தாம்…
.. தமிழினத்திற்காக மட்டுமல்லாமல் தமிழ்மொழிக்கும் தொண்டு செய்த பேரறிஞர் பெரியார். உலகிற்கே பயன்படுகின்ற வகையில் அரிய கருத்துக்களை வெளிப்படுத்தியவரும், மக்கள் தொண்டாற்றியவருமாகிய பெரியார், தமிழ் மொழியில்தான் பேசினார். தமிழ்நாட்டில் தான் பிறந்து வாழ்ந்தார் என்பது நமக்கெல்லாம் பெருமையன்றோ! வாழ்க பெரியார்”
இன்று அவர் நடத்தி வந்த தென்மொழி (1982) இதழில் எழுதியும் பெரியாரைப் போற்றினார். பெரியாரின் மறைவின் பொழுது,
“நாளெல்லாம் வாழ்க்கையெல்லாம்
நடை நடந்து
திரையுடலை நோயுடலைச்
சுமந்துபல ஊர்திரிந்து
தொண்டு செய்த
இரை கடலை அடடா, இவ்
வெறியேற்றை தமிழ்நாடும்
இழந்த தம்மா!”
என்று புகழஞ்சலி செலுத்தினார்.
இவ்வாறு தன் வாழநாளெல்லாம் தமிழ் பற்றியே சிந்தித்து, தமிழைப் பாடி, தமிழ்தேசத்தின் விடுதலையை வலியுறுத்திய ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010