கொரோனா 3-வது அலை குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்குமென்று எச்சரிக்கப்படுவதால், எதிர்கால சந்ததியை காக்க அணியமாக தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைக்கிறோம்! – மே பதினேழு இயக்கம்.
கொரோனா எனும் பெருந்தொற்றின் இராண்டாம் அலையே இன்னும் இந்தியாவில் முடிவடையாத நிலையில் மூன்றாம் அலை வருகிறது என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதோடு, இந்த அலையில் 10 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுவது பெருந்துயரத்தை ஏற்படுத்துகிறது.
இதுவரை வந்த இரண்டு அலைகளிலும் வயதானவர்கள் மற்றும் நடுத்தர வயதினர் தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் என்றாலும், அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்கு அரசு எடுத்த முயற்சிகளுக்கு இவர்களும் ஒத்துழைத்தனர். அதனால் ஓரளவுக்கு அரசினால் இந்த தொற்றை எதிர்கொள்ளமுடிந்தது. ஆனால் அடுத்த அலை குழந்தைகள் குறிப்பாக 10 வயதுக்கு கீழுள்ளவர்களை பாதிக்குமென்றால் இதை ஏற்கனவே வயதானவர்கள் மற்றும் நடுத்தர வயதினருக்கு வந்த போது கையாண்டதை போல கையாள முடியாது.
கொரோனா பெருந்தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது, சானிடைசர் உபயோகிப்பது இவையனைத்தும் நடுத்தர வயதுடையவர்களை பின்பற்ற வைப்பதே அரசுக்கு சவாலானதாக இருக்கும்போது குழந்தைகளை இந்த முறைக்குள் கொண்டு வருவது மிகவும் சவாலானது. இவர்களை கையாளுவதற்கென்று தனி கட்டமைப்பு வசதி, சிகிச்சை முறை எல்லாம் வேண்டும்.
இவ்வளவு இக்கட்டிலிருந்து மக்களை காக்க வேண்டிய இந்திய ஒன்றிய அரசு அதற்கான எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. இதுவரை 3% பேர்கள் மட்டுமே முழுமையாக 2 தடுப்பூசிகள் போட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசை நம்பி பயனில்லை என்று கேரளா, ஒரிசா போன்ற மாநில அரசுகள் தங்களது மக்களை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல தமிழ் நாடு அரசும் எதிர்கால தலைமுறையினரை காக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனே தொடங்க வேண்டுமென்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010