உழவர்களின் 6 மாத போராட்டத்தை புறக்கணிக்கும் மக்கள் விரோத மோடி அரசின் 7ம் ஆண்டு நிறைவு நாள் கருப்பு நாள்! வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏந்துவோம்! – மே பதினேழு இயக்கம்
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்ட உழவர்கள், கடந்த 6 மாதங்களாக தலைநகர் டில்லியின் எல்லையில் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். உழவர்களின் தீரமிக்க 6 மாத போராட்டத்தை குறிக்கவும், மோடியின் 7 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சியை குறிக்கவும், மே 26 புதன் கிழமையை கருப்பு நாளாக அனுசரிக்க உள்ளதாக உழவர் போராட்டக் குழு அறிவித்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கிறது.
வேளாண்மையை கார்பரேட் மயமாக்கும், உழவர்களை வேளாண் கூலிகளாக மாற்றும் மூன்று உழவர் விரோத சட்டங்களை உழவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மோடியின் ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது முதல் நாடு முழுவதும் உழவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். உழவர்களின் போராட்டத்தையும், கோரிக்கையையும் மோடி அரசு முற்றிலும் கண்டுகொள்ளாத நிலையில், கடந்த நவம்பர் மாதம் தலைநகர் டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர்.
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த உழவர்கள் பெருமளவில் டில்லி நகரை நோக்கி படையெடுத்த போது, அவர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டனர். உழவர்கள் டில்லி நகருக்குள் நுழைவதை தடுக்கும் விதமாக, மோடி அரசு அனைத்துவித தடைகளை ஏற்படுத்தியது. இதனால், டில்லி எல்லையில் உழவர்கள் முகாமிட்டு போராடத் துவங்கினர். 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து போராடிய உழவர்களை பேச்சுவார்த்தையின் மூலம் சமரசம் செய்ய முயன்ற மோடி அரசு, உழவர்களின் உறுதித்தன்மையை கண்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதையும் நிறுத்திவிட்டது.
கடும் குளிரில் துவங்கிய போராட்டம் 6 மாதங்களாக இன்று கடும் வெயிலிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அறிவித்தவாறு, உழவர்கள் இன்றளவும் போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்து வருகின்றனர். டில்லி உட்பட நாடும் முழுவதும் கொரானா பெருந்தொற்று கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற சூழலிலும், உழவர்களின் போராட்டத்தை மதிக்காத மோடி அரசு உழவர்களை பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. கார்பரேட் நலன்களுக்காக மோடி அரசு உழவர்களை கைவிட்டதையே இது காட்டுகிறது.
இந்நிலையில், போராட்டத்தை துவங்கி 6 மாதமாகியும் உழவர்களின் குரலை செவிமடுத்து கேட்காத மோடி அரசு, ஆட்சியை பிடித்து 7 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் விதமாக மே 26 புதன்கிழமையை கருப்பு நாளாக அனுசரிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளனர். உழவர் போராட்டக்குழு சம்யுக்தா கிசான் மோர்ச்சா விடுத்துள்ள இந்த போராட்டதிற்கு மே பதினேழு இயக்கம் முழு ஆதரவை அளிக்கிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்கும் விதமாக வீடுகள் தோறும் கருப்புக் கொடியை ஏற்றுமாறு தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் மே பதினேழு இயக்கம் வேண்டுகோள் விடுகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010