தமிழ்நாடு அரசே! பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட பத்மா சேசாத்திரி பள்ளி ஆசிரியரையும், நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகத்தினரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடை! – மே பதினேழு இயக்கம்
சென்னை கேகே நகரில் உள்ள பத்மா சேசாத்திரி பால பவன் (PSBB) மேல்நிலைப் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், தன்னுடைய வகுப்பு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டது குறித்த குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்த குற்றச்சாட்டு பொதுவெளியில் பாதிக்கப்பட்ட மாணவிகள் வைத்த பின்பு, இது போன்ற பாலியல் குற்றங்களை பல ஆண்டுகளாக செய்து வருவதும், அதன் மீது பெற்றோர்கள், மாணவிகள் புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது மேலும் அதிர்ச்சிக்குறியதாக உள்ளது. குற்ற செயலில் ஈடுப்பட்ட ஆசிரியர் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் தமிழ்நாடு அரசு உடனடியாக போக்சோ சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால், இணைய வழி வகுப்பின் போது இடுப்பில் துண்டுடன் அருவருக்கத்தக்க வகையில் மாணவர்கள் முன்னிலையில் தோன்றியது மாணவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து மாணவிகள் சமூக வலைத்தளங்கள் வழியாக பொதுத்தளத்தில் முன்வைத்த போது, அவர் மீது மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளை பல்வேறு ஆண்டுகளில் அவரிடம் பயின்ற மாணவிகள் முன்வைத்துள்ளனர். தனிப்பட்ட முறையில் மானவிகளிடையே பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டது குறித்தும், அவரது மோசமான நடவடிக்கைகள் குறித்தும் பல முக்கிய பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ராஜகோபால் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து அவ்வப்போது பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகளும், பெற்றோர்களும் புகாரளித்த போதும், பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளதும் தற்போது வெளிவந்துள்ளது. பள்ளியின் முன்னாள் மாணவிகள் பள்ளி நிர்வாகத்தின் மீதான இந்த குற்றச்சாட்டுகளை தற்போது வெளிப்படையாக முன்வைத்து வருகின்றனர். இச்சம்பவம் வெளிய வந்த பின்பு தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள முயன்ற போது, பள்ளி நிர்வாகம் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துள்ளது. ஆசிரியரின் குற்றச்செயலை மூடி மறைக்கும் வேலையில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுவதையே இது காட்டுகிறது.
கேகே நகர் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, PSBB நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு பள்ளிகளில் இது போன்று மாணவியர்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பல்வேறு சம்பவங்கள் தற்போது வெளிவந்துள்ளது. அதே போன்று, பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சமஸ்கிருத ஆசிரியர் உள்ளிட்ட பலர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பள்ளி நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்களால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் என்பதாலே நடவடிக்கை எடுக்கவில்லை என்று அறிய முடிகிறது.
2012 ஆகஸ்ட் 16 அன்று இதே பள்ளியில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரஞ்சன் எனும் 4ம் வகுப்பு மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த போது, ஒரு சிலர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டு பரப்பரப்பு அடங்கிப்போனது. அப்போது PSBB பள்ளியை கண்டித்து மே பதினேழு இயக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டு, சுவரொட்டிகள் காவல்துறையினரால் கிழிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு 20 நாட்களுக்கு முன்னர், தாம்பரம் அருகே பள்ளி வாகன விபத்தில் ஸ்ருதி என்னும் 6 வயது சிறுமி இறந்த போது, பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
PSBB பள்ளியின் நிர்வாகிகள் அரச அதிகாரவர்க்கத்துடன் பேணும் நட்பு, குற்றச்சாட்டுகளிலிருந்து பள்ளியை காப்பாற்றுவதற்கு உதவிகரமாக இருந்துள்ளது. அப்படியாக தப்பித்துக்கொள்ளும் போக்கே தற்போது பள்ளி ஆசிரியர்கள் பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவது வரை கொண்டுச் சென்றுள்ளது. அத்தகைய போக்கை இனிமேலும் அனுமதிக்க கூடாது.
PSBB பள்ளி பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட வேண்டும். இதனை குற்ற நடவடிக்கையாக காவல்துறையினர் மூலம் மட்டும் மேற்கொள்ளாமல் பள்ளிக்கல்வித்துறை மூலம் துறைரீதியான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும். குற்றச்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் துணை போன பள்ளி நிர்வாகிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையிலடைக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் மீதான அனைத்து குற்றங்களையும், கடந்த கால குற்றங்களையும் கருத்தில் கொண்டு PSBB நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளையும் அரசுடமையாக்கி தமிழ் நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010