
FamilyMan எனும் படம் தமிழீழ போராளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்துகிறது. ‘மெட்ராஸ்கபே’ படம் போல பல படங்களில் ஈழப் போராட்டம் கொச்சைப்படுத்தப்படுகிறது. ‘புலிப்பார்வை’ போன்ற படங்கள் போராளிகளை மலினப்படுத்துகிறது. இவ்வகை தமிழர் விரோத படங்கள் தங்குதடையின்றி உருவாகி வெளியாகின்றன. இவை எவ்வகையிலும் கலை சார்ந்த படைப்புகள் அல்ல. இந்தியாவின் தேசிய இனங்களின் சுயமரியாதையை இழிவு செய்யும் வகையிலான பிரச்சாரங்கள். இவை எதேச்சையாக எடுக்கப்படுவதில்லை.
7 தமிழர் விடுதலையை பேசும்பொழுது இந்து நாளிதழ் ‘ராஜீவ் கொலை-வி.புலிகள் வீழ்ச்சி’ என அரைப்பக்கத்தில் கட்டுரையை எழுதுகிறது. இலங்கை மீது பொருளாதாரதடை என தீர்மானத்தை தமிழகம் போட்டவுடன் இலங்கை அரசுடன் நெருக்கமான ‘லைக்கா’ நிறுவனத்திற்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்கிறது. தேசியத்தலைவர் படங்கள் பதிந்த சமூகவளைதள பக்கங்கள் நிரந்தரமாக அறிவிப்பின்றி முடக்கப்படுகின்றன. இனப்படுகொலை காணொளிகள் யூட்யூபிலிருந்து காணாமல் போகின்றன. புத்தக சந்தையில் வி.புலிகள் பற்றிய புத்தகங்கள் வைத்திருக்கிறார்களா என துருவி விசாரிக்கிறார்கள். ஈழப்படுகொலைக்கான நினைவேந்தலைக் கூட நடத்தவியலாதவாரு அடக்குமுறை ஏவப்படுகிறது. அரசியல் நிகழ்வுகளுக்கு மெரினா நிரந்தரமாக மூடப்படுகிறது. இவையெல்லாம் தொடர்பற்றவையல்ல.
ஹிட்லர் படங்களை கூட அனுமதிக்கும் சமூகவளைதளம் புலிகள் படங்கள் கொண்ட கணக்குகளை முடக்குகின்றன. பேமிலிமேன் போல புலிகளை கொச்சைப்படுத்தலாம் அல்லது புலிப்பார்வை போல மலினப்படுத்தலாம். இவற்றைத் தவிர தீவிர அரசியல் விவாதங்களை மறுப்பதன் பின்னால் இயங்கும் அரசியல் பற்றி தமிழர்களிடத்தில் உணர்த்தாமல் போகும் பட்சத்தில் தமிழின விரோத வரலாறே தமிழ்நாட்டில் நிலைபெறும்.
இந்திய துணைக்கண்டத்தில் தமிழகத்தைப் பற்றிய மலினப்பார்வை, தமிழர்கள் என்பவர்கள் குற்றவாளிகள் எனும் பிம்பம் பொதுப்புத்தியில் புகுத்தப்படுகிறது. ஆரிய தேசத்தை கட்டியெழுப்புகிறோமென வெளிப்படையாக அறிவித்த சனாதனிகள் இப்பொழுது அரசியல் ஆற்றலாக அதிகாரத்தை அலங்கரிக்கிறார்கள். காங்கிரஸில் நுழைந்து ஆக்கிரமித்தவர்கள் தமக்கான கட்டமைப்பை உருவாக்கி இருக்குமிடத்தில் இது இயல்பாகிப் போகிறது. இன்றய உத்திரபிரதேசத்தை ‘ஆரியவர்த்தா’ என பெயரிடவேண்டுமென்றவர்கள் தமிழர்களை எதிரிகளாக அறிவிப்பதில் என்னவியப்பு இருக்க இயலும்.
வேத இந்தியாவை உருவாக்குபவர்களுக்கு திருக்குறள் சார்ந்த தமிழர்கள் அச்சமூட்டுகிறார்கள். இந்த அச்சங்களையே தமது படைப்புகளில் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள். தமிழர்களின் அரசியல் ஆற்றல்களை, வரலாறுகளை கொச்சைப்படுத்துபவர்களின் உள்ளார்ந்த அரசியலை கண்டுணர்ந்து வீழ்த்துவதே நமக்கான கடமை. ஆரிய அழுக்குகளின் அவதூறு பிரச்சாரங்கள், அவர்கள் உருவாக்கிய அதிகாரவர்க்கத்தின் மலினமான பிரச்சார யுக்திகளை முறியடிக்கும் படைப்புகளை உருவாக்கும் உரிமையற்ற தேசிய இனமாக முடக்கப்படுகிறோம். இதை உடைத்தெறிந்து தமிழர்களின் படைப்பாற்றல் வலுப்பெற அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும். அடக்குமுறைக்கு அஞ்சாத அச்சமற்ற அரசியல் செயற்களத்தை, படைப்புலகத்தை உருவாக்கும் போராட்டத்தில் முன்னகர்வோம். இந்த கொச்சை பிரச்சாரங்களை முறியடிக்கும் வாதங்களை வலுப்படுத்தி இந்நிகழ்ச்சியை தடுத்து நிறுத்துவோம்.
தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்,
மே பதினேழு இயக்கம்