புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பெருந்தொற்று நெருக்கடியில், குறிப்பாக ஊரடங்கு காலத்தில், மிகவும் பாதிக்கப்படக் கூடிய மக்களை காக்கும் பணியில் அரசுடன் இணைந்தோ அல்லது தேவைப்படுமிடங்களில் தனித்தோ பங்கேற்கவும் அல்லது பங்களிக்கவும் மே17 இயக்கம் அணியமாக இருக்கிறது. கடந்த பேரிடர் காலத்தில் களப்பணி செய்தது போலவே தற்பொழுதும் மே17 இயக்கத் தோழர்கள் அணியமாக உள்ளார்கள். அதே சமயம் கடந்த வருட கொரொனா ஊரடங்கு காலத்தில் மக்கள் பணி செய்வதற்கு இந்துத்துவ மதவெறி அமைப்புகளுக்கு மட்டும் பெருமளவில் அனுமதியளிக்கப்பட்டும், மே17 இயக்கம் உட்பட பிற சமூக இயக்கங்கள் மக்கள் பணி செய்ய தடை செய்யப்பட்டதும், வழக்குகள் ஏவப்பட்டதையும் நினைவுபடுத்தி, இந்நிலை இனிமேலும் நிகழாமல் தடுத்து முற்போக்கு ஆற்றல்கள் தங்குதடையின்றி மக்களுக்கு உதவ ஆவண ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கிறோம். இந்த கொரொனோ பேரிடரில் தமிழக மக்களைக் காக்க அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொள்வோம்.
மே பதினேழு இயக்கம்.
சென்னை
09-05-2021