பொதுவுடைமை சித்தாந்தத்தின் தலைமகன்
புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் அவர்களின் பிறந்தநாளில் செவ்வணக்கத்தை செலுத்துகிறோம்! – மே பதினேழு இயக்கம்
ஒரு முறை புரட்சியாளர் மார்க்ஸ் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
“மகிழ்ச்சி பற்றி உங்களுடைய கருத்து என்ன?” அதற்கு மார்க்ஸ் சொன்னார்: “போராட்டம்”
ஆம், புரட்சியாளர் காரல் மார்க்ஸ் அவர்கள் வாழ்நாளில், என்று அடித்தட்டு மக்களைப் பற்றி சிந்திக்க தொடங்கினாரோ அன்றிலிருந்து அவர் உயிர் பிரியும் தருணம் வரை போராட்டமாகவே தனது வாழ்க்கையை கழித்தார். ஆனால் அந்த போராட்டத்தில்தான் மனித வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியும் கண்டார்.
1818 ஆம் ஆண்டு பிறந்த மார்க்ஸ் அவர்கள் இளம் வயது முதலே உலக தத்துவங்களை தேர்ந்தெடுத்து படித்தவர். அவருடைய குடும்பம் விரும்பியது போல் ஓர் அரசு வேலைக்கோ அல்லது அவரது தந்தையைப் போல் வழக்கறிஞர் பணிக்கோ செல்ல விரும்பாமல் சமூகத்திற்காகவே வாழ முற்பட்டவர் புரட்சியாளர் மார்க்ஸ் அவர்கள். இதனைக் கீழ்க்கண்ட அவரின் சொற்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்
“ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால் அவரால் ஒரு நல்ல அறிவாளியாக முடியும்; பெரும் ஞானி ஆக முடியும்; மிகச்சிறந்த கவிஞராக கூட வர முடியும்; ஆனால் அவரால் ஒரு குறை இல்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதர் ஆக முடியாது”
புரட்சியாளர் மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி குறிப்பு எழுதும் பொழுது அவருடைய வாழ்க்கை துணைவியாக மட்டுமல்லாமல், பொதுவுடைமை கட்சியின் பெரும் பொறுப்புகளிலும் வகித்து வந்த திருமதி ஜென்னி அவர்களையும், அவரின் மிக நெருங்கிய நண்பரும் சித்தாந்தவாதியுமான புரட்சியாளர் ஏங்கல்ஸ் பற்றியும் நினைவு கூறாமல் எழுத முடியாது. 1843 ஆம் ஆண்டு மார்க்ஸ் அவர்களை மணந்து கொண்ட ஜென்னி அவர்கள், எத்தகைய துன்பங்கள் அவர்கள் இருவர் வாழ்க்கையிலும் வந்தபோதும் ஒருமுறைகூட மார்க்ஸ் அவர்களை விட்டு பிரிந்ததில்லை என்பதுவும், அதற்கு ஏங்கல்ஸ் அவர்களின் நட்பு பெரிதாக உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றளவும் பொருளாதார துறையின் மிக முக்கியமான நூலாக கருதப்படும் மூலதனம் என்ற நூல் புரட்சியாளர் மார்க்ஸ் அவர்களால் எழுதப்பட்டு திருமதி ஜென்னி மற்றும் புரட்சியாளர் ஏங்கல்ஸ் அவர்களின் பெருமுயற்சியால் வெளிவந்த நூலாகும். முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் ஏமாற்று வேலைகள் அத்தனையும் வெளிச்சமிட்டுக் காட்டிய இந்நூல் மனித இனத்திற்கு மார்க்ஸ் அவர்களால் தரப்பட்ட மாபெரும் கொடையாகும்.
பண்டைய மத சமூக கட்டமைப்புகளை உடைத்தெறிந்து பொருள்முதல் வாதத்தின் அடிப்படையில் தனது ஆழமான கருத்துக்களை முன்வைத்த காரல் மார்க்ஸ் அவர்கள் இந்தியாவின் சமூக கட்டமைப்பை பற்றி மிகத் தெளிவாக எடுத்து இருந்தார்.
“இந்தியா என்பது அடிப்படையில் குலங்களாக, சாதிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்பது போன்ற சமமற்ற சமநிலையை கொண்ட நாடாக உள்ளது. இங்கு நம் இரண்டு வேலைத் திட்டங்கள் உள்ளன. முதலாவதாக ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சமூக கட்டமைப்பை அடியோடு உடைப்பது. மற்றொன்று புதியதொரு சமநிலை கொண்ட சமூக கட்டமைப்பை உருவாக்குவது” என்று எடுத்துரைத்தார்.
மேலும் “குரங்கு, மாடு, பாம்பு போன்ற மிருகங்களை கடவுளாக்கி வணக்கிக் கொண்டிருக்கும் இந்திய தேசத்தில் புரட்சி ஏற்படாது” என்று இச் சமூகத்தில் நிலவி வந்த மூடநம்பிக்கைகளை கடுமையாக சாடினார் புரட்சியாளர் மார்க்ஸ் அவர்கள். கடவுள் பற்றி கூறும் பொழுது “பகுத்தறிவு இல்லாதவனுக்கு தான் கடவுள் இருக்கிறார்” என்றும், மதத்தைப் பற்றி கூறும் பொழுது “ மனிதனுக்கு விரோதமான சக்திகள் மனிதனை ஆளுகின்ற மனிதத்தன்மையற்ற உலகத்தின் உற்பத்தியே மதம்” என்கிறார்.
இன்றளவும் ஒரு குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு மேட்டுக்குடி புரட்சியைப் பற்றி பேசுகிறவர்களை சாடும் விதமாக கம்யூனிசம் என்பதை எளிய மொழியில் மார்க்ஸ் அவர்கள் விளக்குகிறார்.
“கம்யூனிசம் என்பது அழகான சொற்றொடர்களை உபயோகித்து வரவேற்பறையில் விவாதிக்கக் கூடிய பொருளல்ல. அதில் பன்னீரின் நறுமணம் இல்லை; அது அழுக்குத் துணியை அணிந்து இருக்கிறது”
மார்க்ஸ் அவர்களின் உழைப்பு உற்பத்தி உறவு பற்றிய ஆய்வு, தொழிலாளர்கள் வர்க்கத்தின் இடையே மாபெரும் சிந்தனை மாற்றத்தை கொண்டு வந்தது. ‘இவ்வுலகில் இருந்து உழைப்பை பிரித்துவிட்டால் வெறும் கல்லும் மண்ணும் தான் மிஞ்சும்’ என்று கூறிய புரட்சியாளர் மார்க்ஸ் அவர்கள்,
“தொழிலாளியின் உழைப்பால் அற்புதமான பொருள் கிடைக்கிறது. ஆனால் அது தொழிலாளியின் வறுமையையும் உற்பத்தி செய்கிறது. அரண்மனைகளை படைக்கும் அதே நேரத்தில் அது தொழிலாளிகளுக்கு சேரிகளை உற்பத்தி செய்கிறது.” என்று சுரண்டப்படும் தொழிலாளர்களின் அவல நிலையை விளக்குகிறார்.
இவ்வாறு பழம்பெரும் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளை உடைத்தெறிந்த புரட்சியாளர் மார்க்ஸ் அவர்களின் பிறந்த நாளில் (05-05-1818) மே பதினேழு இயக்கம் தனது செவ்வணக்கத்தை செலுத்துகிறது.
“உலகத் தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள், இழப்பதற்கு உங்களிடத்தில் ஒன்றுமில்லை, உங்கள் கைகளில் பூட்டப்பட்டிருக்கும் விலங்குகளைத் தவிர”
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010