தமிழக அரசே! கொரோனா முன்கள பணியாளர்களான செவிலியர்களின் முறையான வேலை நேரம், ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று!

தமிழக அரசே! கொரோனா முன்கள பணியாளர்களான செவிலியர்களின் முறையான வேலை நேரம், ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று! – மே பதினேழு இயக்கம்

பணி நிரந்தரம், முறையான வேலை நேரம், ஊதிய உயர்வு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 14000-க்கும் மேற்பட்ட தற்காலிக செவிலியர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். போராடும் செவிலியர்களின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வரும் தமிழ்நாடு அரசை கண்டித்து இன்று (29-01-2021) ஆயிரக்கணக்கான செவிலியர்கள் சென்னை சேப்பாக்கம் அருகே போராடி வருகின்றனர். கொரானா காலத்தில் உயிரை பணயம் வைத்து போராடிய முன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கையை புறக்கணிக்கும் அதிமுக அரசை, மே பதினேழு இயக்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு அரசின் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (Medical Services Recruitment Board – MRB) கடந்த 2015-ம் ஆண்டு தேர்வு நடத்தி அதில் தேறியவர்களில் 9000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை மாதம் ரூபாய் 7000 ஊதியத்திற்கு தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டனர். தொடர்ந்து மேலும் சில ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்தபடி, 2 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களின் பணி நியமனம் ஒழுங்கப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இவர்களது வேலை முறைப்படுத்தப்பட்ட பணி வரம்பிற்குள் இதுவரை கொண்டுவரப்படவில்லை. அதனால் கடந்த 2017 முதல் இந்த கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர்.

2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிற்கு பிறகு, ஆண்டிற்கு 300 முதல் 400 செவிலியர்களை முறைப்படுத்தப்பட்ட பணி வரம்பிற்குள் கொண்டுவரப்படுவார்கள் என்று அரசு அளித்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக ஒப்பந்த பணியாளர்களை மட்டுமே நியமித்து வந்துள்ளது. அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காலங்களில் பலவேறு இடங்களில் போராட்டம் நடத்தியும் அதிமுக அரசு கண்டுகொள்ளாத நிலையில், இன்றைய போராட்டத்தை துவங்கியுள்ளனர். இது அரசின் நிர்வாக திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.

கொரானா கால நெருக்கடியிலும் விடுமுறை இல்லாமல், குறைந்த ஊதியத்தில், உயிரை பற்றி கூட கவலைப்படாமல் தமிழ்நாட்டில் கொரானாவை கட்டுக்குள் வைக்க போராடியவர்கள் தான் இந்த செவிலியர்கள். கொரானாவினால் பல செவிலியர்கள் உயிரிழந்ததை மூடி மறைத்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களையும் மறுத்துள்ளது. நாட்டின் மிகச்சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, தனது ஊழியர்களின் உழைப்பை சுரண்டுவதும் செவிலியர்களின் உரிமைகளை மறுப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

கொரோனா முன்கள பணியாளர்களான செவிலியர்களின் நீண்டகால கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அவர்களின் பணி நியமனத்தை முறைப்படுத்தப்பட்ட பணி வரம்பிற்குள் உடனடியாக கொண்டு வந்து பணி நிரந்தரம், முறையான பணி நேரம், ஊதியத்துடன் கூடிய விடுமுறை, அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் போன்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. செவிலியர்களை ஒப்பந்த பணியாளர்களாக நியமிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், கொரோனா பணியின் போது உயிரிழந்த செவிலியர்களை முறையாக கணக்கில் கொண்டு, அவர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய இழப்பீட்டினை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை செவிலியர்களின் நியாயமான போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தனது ஆதரவினை தெரிவிப்பதுடன் அவர்களின் கோரிக்கைக்கு உறுதுணையாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் இந்த விடயத்தில் செவிலியர்களின் உரிமைக்காக நிற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply