இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பில் OBC, SC, ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு மறுப்பு! இந்திய ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பில் OBC, SC, ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு மறுப்பு! இந்திய ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (Indian Council of Medical Research – ICMR), அதன் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவங்களுக்கான D மற்றும் E நிலை அறிவியலாளர்களின் 65 பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதிர்ச்சி என்னவெனில், அரசு பணிகளான இவற்றிற்கு இடஒதுக்கீடு இல்லை என்பதே! மருத்துவ படிப்பை தொடர்ந்து, மருத்துவ பணியிடங்களுக்கும் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து மறுக்கும் பாஜக-மோடி அரசை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மருத்துவ படிப்பில் BC, MBC பிரிவினருக்கான 50% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் வரை சென்று மறுத்த பாஜக அரசு, தற்போது மருத்துவ ஆராய்ச்சி சார்ந்த பணிகளுக்கு SC, ST, OBC (BC, MBC) பிரிவினருக்கு சேர வேண்டிய வேலைவாய்ப்பை மறுத்துள்ளது. பாஜக அரசின் இந்த செயல், சமூகரீதியாக, கல்விரீதியா பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டு உரிமையை வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.

நேரடி ஆட்சேர்ப்பு என்ற போதும் அதற்கான இடஒதுக்கீடு விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறவில்லை. குறிப்பிட்ட சில நிலை பணியிடங்களுக்கு இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது என்று அந்நிறுவனத்தை சேர்ந்த அதிகாரியே கூறுகிறார். அதே போல், BC, MBC பிரிவினருக்கு ரூ.1500 விண்ணப்பட்ட கட்டணம் என்று வரையறுக்கப்பட்ட நிலையில், மாதம் 60 ஆயிரம் சம்பளம் பெரும் உயர் சாதியினருக்கு விண்ணப்ப கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமாக உயர் சாதி பார்ப்பனர்களை கொண்டு மருத்துவ பணியிடங்களை நிரப்ப முயலும் செயலாகும்.

இந்திய பாஜக அரசின் இட ஒதுக்கீடு மீதான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயர் சாதி பார்ப்பனர்கள் பயனடையும் வகையில் பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீட்டை அனைத்து துறைகளிலும் முழுமையாக மோடி அரசு, பெரும்பான்மையான BC, MBC, SC, ST பிரிவினர் கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதை அனைத்துமட்டத்திலும் தடுக்க முயலுக்கிறது. இது, மனுதர்மத்தின்படி, சூத்திரர்கள் கல்வி கற்க கூடாது, உயர் பதவிகளில் பணிபுரியக்கூடாது என்பதை நிலைநாட்ட முயலும் முயற்சியாகும்!

இட ஒதுக்கீட்டின் மூலம் தற்போது தான் முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகியுள்ளனர். அதனை பார்ப்பனியம் செரித்துக்கொள்ள இயலவில்லை. இந்துக்கள் என்று கூறி சாதி, மத சண்டைக்கு ஆள் சேர்க்கும் பாஜக, அதே பெரும்பான்மை இந்துக்கள் சமூகங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை மறுத்து அப்பட்டமாக துரோகம் இழைக்கிறது. பாஜக கூறும் இந்துக்கள் என்பவர்கள் பார்ப்பனர்களே! BC, MBC, SC, ST இளைஞர்கள் தங்கள் சாதி, மதத்தை மறந்து பாஜகவிற்கு எதிராக ஒன்று திரள வேண்டும். இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதன் மூலம் மட்டுமே, அடுத்த தலைமுறையின் வாழ்வாதாரத்தை நாம் உறுதிசெய்ய முடியும்.

மத்திய பாஜக அரசே! சமூக நீதியை பாதுகாத்திடும் வகையில் இட ஒதுக்கீட்டை முழுமையாக அனைத்து துறைகளிலும் முறையாக நடைமுறைப்படுத்து. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 65 பணியிடங்களுக்கான அறிவிப்பை இட ஒதுக்கீட்டு முறையில் மீண்டும் வெளியிடு. சமூகரீதியாக, கல்விரீதியாக பின்தங்கிய சமூகத்தவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீட்டை, பொருளாதார அடிப்படையில் உயர் சாதியினருக்கு வழங்காதே!

மே பதினேழு இயக்கம்
9884027010
01/01/2021

Leave a Reply