தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியில் காவி உடை திருவள்ளுவர்! வன்மையாக கண்டிக்கின்றோம்!

தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியில் காவி உடை திருவள்ளுவர்! வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்

கொரானா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு கல்வி தொலைக்காட்சியை துவங்கி, அதில் அனைத்து வகுப்பிற்குமான பாடங்களை ஒளிபரப்பி வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஒளிபரப்பும் போது, திருக்குறள் மற்றும் அதன் விளக்கம் காட்டப்பட்டுள்ளது. அதில் காவி உடையுடன் திருநீர் பட்டையுடன் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலால் அடையாளப்படுத்தப்பட்ட திருவள்ளுவரை படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

உலகப் பொதுமறையாம் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவரை காவியுடையுடன், திருநீர் பூசியவாறு இந்துத்துவ துறவி போன்று தனது அரசியல் இலாபத்திற்காக மதச்சாயம் பூச முயன்றது ஆர்எஸ்எஸ்-பாஜக. அரசு அங்கீகரித்த திருவள்ளுர் படைத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழலில், வரலாற்றை திரித்து கூறும் ஆர்எஸ்எஸ்-பாஜக, தமிழர்களின் உன்னத இலக்கியமான திருக்குறளை கபளீகரம் செய்யும் நோக்கில் காவி வண்ண உடையுடன் ஒரு மதசார்புடைய தோற்றத்துடன் திருவள்ளுவர் படத்தை உருவாக்கி பயன்படுத்தி வருகிறது. இந்த படத்தை அறிமுகப்படுத்தும் போதே, தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ஆர்எஸ்எஸ்-பாஜக தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறது.

ஆர்எஸ்எஸ்-பாஜகவின் இந்த செயலை தமிழ்நாடு அரசு முன்வந்து தடுக்கவில்லை. முன்பு ஒரு முறை தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சர் அவர்களே காவியுடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை பயன்படுத்தி கடுமையான கண்டனத்திற்குள்ளானார். இது தற்போது மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் கல்வி தொலைக்காட்சி வரை தொடர்வது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஒன்றை பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுவிப்பது எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

ஆளும் அதிமுக அரசு தனது அரசியல் நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி என்ற பெயரில் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒவ்வொன்றாக விட்டுக்கொடுத்து வருகிறது. அதற்காக தமிழர்களின் வரலாற்றையே மாற்ற முயலும் தமிழின விரோத கூட்டத்திடம் தமிழர் பண்பாட்டு அடையாளமான திருக்குறள்-திருவள்ளுவரை விட்டுக்கொடுப்பதை தமிழர்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

கல்வித் தொலைக்காட்சியில் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படம் ஒளிபரப்பப்பட்டது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சகம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இச்செயலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்கள் கவனக்குறைவாக கூட ஏற்படாதவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply